Tuesday, September 12, 2006

பாரதிதாசன் பாடல்கள்

"உலகம் உன்னுடையது"

பள்ளம் பறிப்பாய், பாதாளத்தின்

அடிப்புறம் நோக்கி அழுந்துக ! அழுந்துக !

பள்ளந்தனில் விழும் பிள்ளைப் புச்சியே,

தலையைத் தாழ்த்து ! முகத்தைத் தாழ்த்து !

தோளையும் உதட்டையும் தொங்கவை ! ஈன

உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு !

நக்கிக்குடி, அதை நல்ல தென்று சொல் !

தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும்

தாழ்ந்து போ ! குனிந்து தரையைக் கெளவி

ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு !

மொட்டுப் புச்சியே ! புன்மைத் தேரையே

அழு, இளி, அஞ்சு, குனி, பிதற்று !

கன்னங் கடுத்த இருட்டின் கறையே,

தொங்கும் நரம்பின் தூளே ! இதைக்கேள் ;

மனிதரில் நீயுமோர் மனிதன் ; மண்ணன்று ;

இமை திற ; எழுந்து நன்றாய் எண்ணுவாய் ,

தோளை உயர்த்துச் சுடர் முகம் தூக்கு !

மீசையை முறுக்கி மேலே ஏற்று !

விழித்த விழியில் மேதினிக் கொளி செய் !

நகைப்பை முழக்கு ! நடத்து லோகத்தை !

உன் விடு - உனது பக்கத்து வீட்டின்

இடையில் வைத்த சுவரை இடித்து

வீதிகள் இடையில் திரையை விலக்கி

நட்டொடு நாட்டை இணைத்து மேலே

ஏறு ! வானை இடிக்கும் மலைமேல்

ஏறி நின்று பாரடா எங்கும் ;


எங்கும் பாரடா இப்புவி மக்களைப்

பாரடா உணது மானிடப் பரப்பை !

பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம் !


'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய

மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள் !

அறிவை விரிவு செய் ; அகண்டமாக்கு !

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை !

அணைந்து கொள் ! உன்னைச் சங்கமமாக்கு ,

மானிட சமுத்திரம் நானென்று கூவு

பிரிவிலை எங்கும் பேத மில்லை

உலகம் உண்ண உண் ! உடுத்த உடுப்பாய் !

புகல்வேன் ; ' உடைமை மக்களுக்குப் பொது '

புவியை நடத்துப் பொதுவில் நடத்து !

வானைப் போல் மக்களைத் தாவும்

வெள்ளை அன்பால் இதனைக் -

குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே !!






Labels:

6 Comments:

Blogger nayanan said...

புரட்சிக் கவிஞரின் பாடல் கண்டு மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

7:59 PM  
Blogger கோபா said...

This comment has been removed by a blog administrator.

8:40 PM  
Blogger கோபா said...

வணக்கத்துடன்


தங்களது வருகைக்கு நன்றி...

புதிய காற்று

8:43 PM  
Blogger கோபா said...

nayanan

தங்களது வருகைக்கு நன்றி...

புதிய காற்று

8:44 PM  
Blogger மாசிலா said...

அருமை ஐயா! நன்றிகள் பல கோடி. படிக்கும்போது மயிர்கள் சிலிர்க்கின்றன. நரம்புகள் புடைக்கின்றன. ஆகா, இவனல்லவா கடவுள்!
எழுத்துகளாய் உதித்த என்னங்களுக்கு இவ்வளவு சக்தியா! நம்ப முடியவில்லை. காலத்தை வெல்பவர்கள் இவர்கள். சமுதாயத்திற்கு மிக தேவையான மனிதர்கள். இவர்களல்லவா ஞானிகள்! போர்குணம் படைத்த வீரமுள்ள உண்மையான ஆண்மகன்கள்!


பின் குறிப்பு : நமது தேசன் அவர்கள் பாண்டிச்சேரியில் உதயமானார். அதாவது பிரஞ்ச் அரசாங்கத்தின் அரசாங்கத்தின்போது. இதன் காரணமாகவே தொந்தரவு அதிகம் ஏதும் அதிகம் இல்லாமல் கவிதைகளை தன் இட்டத்திற்கு எழுதி தள்ள முடிந்தது. இதே இவர் தமிழ்நாட்டில் இருந்திருந்தால்? ஆங்கிலேயருக்கு பயந்து அடைக்கலம் கேட்டு பாரதியார் தஞ்சம் புகுந்ததும் இதே பாண்டியில்தான் என்பதை யாரும் மறக்கக் கூடாது. புதுவை உப்பளம் தொகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ( கிறித்துவ கல்லறை அருகில்) பாரதியார் பாடிய காட்சிகளை மக்கள் இன்றும் நினைவு கூறுகிறார்கள்.

3:47 PM  
Blogger நாமக்கல் சிபி said...

இப்பாடலை நான் ஆடியோவில் மிகவும் விரும்பிக் கேட்டிருக்கிறேன்.

நல்லதொரு பாடல்.

பதிவிட்டமைக்கு நன்றி!

7:24 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home