பாரதிதாசன் பாடல்கள் "பெண் குழந்தை தாலாட்டு "
பெண் குழந்தை தாலாட்டு
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
சோலை மலரே ! சுவர்ணத்தின் வார்ப்படமே !
காலை இளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே !
வண்மை உயர்வு மனிதர் நல மெல்லாம்
மெண்மையினால் உண்டென்று பேச வந்த பெண்ணழகே !
நாய் என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே !
வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
கண்கள் உறங்கு ! கனியே உறங்கிடுவாய் !
அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலே !
மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே !
கன்னல் பிழந்து கலந்த கனிச்சாறே !
மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற
காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே !
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி !
புண்ணிற் சரம் விடுக்கும் பொய்ம் மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவளே !
தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண் குலத்தை
உய்விக்க வந்த உவப்பே ! பகுத்தறிவே !
எல்லாம் கடவுள் செயல் என்று துடை நடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமை செய வந்தவளே !
வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயிலென்று காசு தரும் கொள்கை தவிர்ப்பவளே!
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்பார் செய்கைக்கு
நாணி உற்ங்கு ; நகைத்து நீ கண்ணுறங்கு !
Labels: பாரதிதாசன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home