Sunday, March 04, 2007

தோழர் ஸ்டாலின்

பெயரெச்சம்


"பெயர்ல என்னங்க இருக்கு?"--என்று பொதுவாகச் சொல்வதுண்டு. ஆனால் என் பெயரைக் கேட்ட மாத்திரத்தில், ஏதோ அதற்குப் பின்னே பெரிய அபாயம் உள்ளது போல் சிலர் விசாரித்த போது பயமாகிப் போனது என்றார் நண்பர் ஒருவர். அப்படிப் பெயரில் என்ன தான் பிரச்சினை? மேற்கொண்டு அவரே நினைவு கூர்ந்தார்.

"அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டுருந்த நேரம் வகுப்பறையில் ஆசிரியர் வரிசையாக வருகைப் பதிவேட்டின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு வந்தார். மணி....ராசா...வெங்கடெஷ்....ஸ்டாலின். என் பெயரை உச்சரித்ததும் ஒரு நிமிடம் மெளனமானார்.

ஸ்..டா..லி..ன் என்று தலையாட்டிக் கொண்டு மீண்டும் ஒருமுறை அழுத்திச் சொன்னார், தனது மூக்குக் கண்னாடியை கழற்றிப் பொறுமையாக மேசை மீது வைத்தார். "டேய் பயங்கரமான ஆளுப்பா. பக்கத்துல உள்ள பசங்க பாத்து நடந்துக்குங்கடா. இவரு ஸ்டாலின். ஏதாவது ஏடாகூடமா நட்ந்தீங்க தலைவரு போட்டுத் தள்ளிடுவாரு" என்று நடித்துக் காண்பிக்க, வகுப்பறையில் உள்ள மாணவர் எல்லாம் குபீரென்று ஒட்டு மொத்தமாக சிரித்து விட்டனர்.

"ச்சே...எல்லாரும் கிண்டல் பண்றாங்க என்ன பேரு இது? அப்பா ஏன் தான் இந்த பேரு வச்சாரோ?"--என்று பெயரின் மீது ஒரு வெறுப்பும் யார் என் பெயரை கேட்டாலும் சொல்வதற்கு கூடவே ஒரு பயமும் ஏற்பட்டது.

ஏதாவது ஒரு முரடனுடைய பெயராக இருக்குமோ? அப்பா அவ்வளவாகப் படிக்காததால் கேட்ட மாத்திரத்திலேயே பிறர் பயப்பட வேண்டும் என்று இப்படி ஒரு பெயர் வைத்திருப்பாரோ! பெயருக்குப் பின்னால் ஏதோ ஒரு புதிர் இருப்பது மாதிரி இப்படி ஒரு பெயரை ஏன் தான் வைத்தாரோ என்று கலக்கமானது.

மெல்லப் பள்ளிப் பருவம் கடந்து கல்லுரிக்குள் காலடி எடுத்து வைத்தேன். ஒரு நாள் வகுப்பில் ஆங்கிலப் பேராசிரியர் என் பக்கம் கவனத்தைச் செலுத்திப் பேச ஆரம்பித்தார்." என்ன ஸ்டாலின் ? உனக்கு....யார் பேரு வெச்சது ? "எங்க அப்பாதான் சார் ஏன்?" ஒருவித தயக்கத்துடன் ஆரம்பித்தேன். "இல்ல ஸ்டாலின்னு பேரு வெச்சிருக்கிறாரே ஓங்க அப்பா என்ன கம்யூனிஸ்டா?" "இல்ல சார்.....ரயில்வே கலாசி." "ஒருவேளை ஒனக்குத் தெரியலையோ என்னமோ?" "இல்ல சார் அவரு எந்த கட்சியும் கிடையாது ஏன் சார் கேக்குறீங்க?" "இல்லப்பா ஸ்டாலின் ங்குறது கம்யூனிஸ்ட் பேரு, இல்ல நீங்க கிறிஸ்டினா?" "இல்ல சார்." "ஒ.கே.ஸ்டாலின் சும்மாதான் கேட்டேன்" என்று முடித்துக் கொண்டார்.

பேராசிரியர் இயல்பாகப் பேசினாலும் என் பெயரைச் சுற்றிச் சுற்றி நடந்த விசாரணையால் குழப்பம் கூடிப் போனது, ஏதோ ஒரு மறைபொருளைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன் அவர் பல துணைக் கேள்விகளுடன் என் பெயர் பற்றி விசாரித்தது, பெயருக்குப் பின்னால் என்னதான் இருக்கிறது என்பதை நாமே ஆராய வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக ஏற்பட்டது, இன்னும் இதைமுடிடையாத பெயரெச்சமாக விட்டுவிடக் கூடாது எனத் தோண்றியது.

இவ்வளவு காலம் அவ்வப் போது வெளியில் நடந்ததை அப்பாவிடம் சொல்லும்போது அவரும் "போடா! சும்மா வெளயாட்டுக்குச் சொல்றாங்க" என்றுதான் சொல்லி வந்தார். இவ்வளவு பெரியவனாக வளர்ந்தபிறகும் அந்தப் பதில் போதுமானதாக இல்லை. பொறுமையாக அப்பா உட்கார்ந்திருக்கும் நேரம் பார்த்து புதிருக்கு விடை கேட்பது போல வினவினேன்.

"ஏம்பபா என்னதுக்கு எனக்கு ஸ்டாலின்னு பேரு வச்சீங்க?" 'ஆமாண்டா, இன்னும் கல்யாணம் பண்ணி ஒரு புள்ள பெத்த பின்ன கேட்காம இப்பவாவது கேட்டீயே. தம்பி, அரக்கோணத்துல எங்கூட வேலபாக்குறான் பாரு சாமிதுரை. அவனுக்கு புள்ள பொறந்தப்ப, பெரியார் அரக்கோணம் கூட்டத்துக்கு வந்தாரு. அந்தப்புள்ளக்கி அவுரு வச்ச பேரு ஸ்டாலின். ரஷ்யாவோட ஜனாதிபதி பேருப்பா. ரொம்ப ஒசத்தியான பேராச்சேன்னு உனக்கும் வச்சேன்...." அப்பா அந்த பெயருக்கு உரிய வரை பலவாறு சிறப்பித்துப் பேசிக் கொன்டே போனார். இப்போது மனதில் பெயர் பற்றிய புதிர் ஆர்வமாக மாறி என்னைத்துண்டியது.


இந்தச் சுழ்நிலையில் சென்னைக்கு வேலை தொடர்பாக சென்றபோது அண்ணாசாலையில் ஒரு நடைபாதை கடையில் ஸ்டாலின் என்ற தடித்த எழுத்தோடு ஒரு புத்தகம் என் கண்ணில்பட, மூடிக் கிடக்கும் கற்கோட்டையாய் அச்சிறுத்தும் மனதின் கேள்விகளுக்கு நடக்கும் வழியில் ஒரு திறவுகோல் கிடைத்த மாதிரி பெருமகிழ்ச்சியானது.

ரஷ்யாவில் ஒரு ஏழை செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்து, பாதிரியாருக்குப் படிக்கப் போய் தன்நாட்டு ஏழை மக்கள் படும் துன்பத்தை மாற்றுவதற்காகப் படிப்பை விட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தொழிலாளர்களோடு இணைந்து போராடிச் சிறைப்பட்டு, தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்தி அந்த நாட்டுக்கு அதிபராகி இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாஜி வெறியர்களைத் தோல்வியடைச் செய்து உலகைக் காத்ததுடன் தனது நாட்டிலும் உழைப்பவர்க்கான ஆட்சியதிகாரத்தைப் பாதுகாக்க இறுதிவரை போராடியவர் ஸ்டாலின் என்று படிக்கப் படிக்க ஸ்டாலின் என்ற பெயர்ச்சொல் வினைச் சொல்லாய் விரிந்துகொண்டே போனது.


அதிகம் படிக்காதவர் என்று நினைத்த என் அப்பா எவ்வளவு ஒரு அருமையான பெயரை எனக்குத் தேர்தெடுத்திருக்கார் என நினைக்க வியப்பு மேலிட்டது. எனக்கு நானே முதன்முறையாக இந்தப் பெயரைப் பற்றிப் பெருமையாக மனம் மகிழ்ந்த போதும் கூடவே திரும்பவும் அச்சமானது, இது பெயரைப் பற்றித் தெரிந்து கொண்டதால் தோன்றிய புதிய அச்சம். இந்த உயர்ந்த பெயருக்கேற்றமாதிரி நாம் வாழவேண்டுமே என்ற அச்சம் !"
--சுடர்விழி

Related Articles:



Labels:

3 Comments:

Blogger லக்கிலுக் said...

ஸ்டாலின் என்ற தலைப்பை பார்த்ததுமே தளபதி ஸ்டாலினோ என்ற ஆர்வத்தில் உள்ளே வந்தேன் :-)

எனினும் ஏமாற்றம் ஏதுமில்லை. நான் மிகவும் மதிக்கும் உலகத்தலைவர்களில் ஒருவரைப் பற்றிய பல செய்திகளை அறிய நேர்ந்தது.

நன்றி!!!

9:55 AM  
Blogger அசுரன் said...

///ரஷ்யாவில் ஒரு ஏழை செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்து, பாதிரியாருக்குப் படிக்கப் போய் தன்நாட்டு ஏழை மக்கள் படும் துன்பத்தை மாற்றுவதற்காகப் படிப்பை விட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தொழிலாளர்களோடு இணைந்து போராடிச் சிறைப்பட்டு, தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்தி அந்த நாட்டுக்கு அதிபராகி இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாஜி வெறியர்களைத் தோல்வியடைச் செய்து உலகைக் காத்ததுடன் தனது நாட்டிலும் உழைப்பவர்க்கான ஆட்சியதிகாரத்தைப் பாதுகாக்க இறுதிவரை போராடியவர் ஸ்டாலின் என்று படிக்கப் படிக்க ஸ்டாலின் என்ற பெயர்ச்சொல் வினைச் சொல்லாய் விரிந்துகொண்டே போனது.



அதிகம் படிக்காதவர் என்று நினைத்த என் அப்பா எவ்வளவு ஒரு அருமையான பெயரை எனக்குத் தேர்தெடுத்திருக்கார் என நினைக்க வியப்பு மேலிட்டது. எனக்கு நானே முதன்முறையாக இந்தப் பெயரைப் பற்றிப் பெருமையாக மனம் மகிழ்ந்த போதும் கூடவே திரும்பவும் அச்சமானது, இது பெயரைப் பற்றித் தெரிந்து கொண்டதால் தோன்றிய புதிய அச்சம். இந்த உயர்ந்த பெயருக்கேற்றமாதிரி நாம் வாழவேண்டுமே என்ற அச்சம் !"
///

இங்கே பதிந்தமைக்கு நன்றி தோழர்

அசுரன்

5:06 PM  
Blogger rajavanaj said...

கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளில் இருந்து நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.

3:17 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home