Thursday, May 03, 2007

"என்ன இருந்தாலும் தோழரே...... "


பொதுவாக இந்த சமுதாயம் மாற வேண்டும், புரட்சி வரவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது. புரட்சி என்பதை பொதுச் சொல்லாக உச்சரிப்பது இன்பமாகவும் இருக்கிறது. அதனை ஒரு வினைச் சொல்லாக்கும் வேலைகளில் ஈடுபடுவதோ கஷ்டமாகப்படுகிறது.

புரட்சி என்பது உலகை மாற்றுவது மட்டுமல்ல. சமுதாய நலனுக்காக முதலில் நம்மை மாற்றிக் கொள்வது . எதிரி வர்க்கத்தின் மேல் விமரிசித்துக் கை வைக்கும் வீரம் எளிதாக வந்து விடுகிறது. நம்மீது கைவைத்துப் பார்க்கும் தைரியம் மட்டும் அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை,

புரட்சியின் மீது ஆர்வம் , அதே நேரத்தில் அதற்கான வேலை செய்வதில் தயக்கம். இதன் வகை மாதிரியாய் இருக்கும் இளைஞர் ஒருவரைச் சமீபத்தில் சந்தித்துப் பேசினேன்.

**************************************************************************************


*என்ன ஆரோக்கியசாமி நல்லாயிருக்கீங்களா?

*அட ! வாங்க தோழர். உங்கள் வந்து பார்க்க முடியல, நீங்களே வந்துட்டீங்க.



*ரொம்ப வேலையா? போன வாரம் ஆர்ப்பாட்டப் பிரசுரங்கள் கூட அனுப்பியிருந்தேன் வரக்காணுமே....

*(சிறிது நேரம் தயக்கத்துடன்) உங்க கிட்ட பொய் சொல்றதுக்கில்லை தோழர் ! முழுமையா செயல்படணும். சும்மா பத்திரிகை மட்டும் வாங்கிப் படிச்சிட்டு , எதிலவும் ஈடுபடாம இருக்கிறதனால, உங்க பொகத்துல முழிக்கவே கஷ்டமா இருக்கு தோழர்.



*என்னங்க வட்டிக்காரன் கிட்ட பேசுற மாதிரி பேசுறீங்க. இதுல தனிப்பட்ட கவுரவப் பிரச்சினை ஒன்னுங் கெடயாது. மக்களுடைய நலனுக்காக உழைக்கனும்னு பொறுப்புணர்வுதான் முக்கியம். அப்புறம் என்ன, அமைப்பு வேலைய சேர்ந்து செய்யுங்க. (என் கையிலுள்ள தமிழ் மக்கள் இசைவிழா பிரசுரத்தைப் பார்த்தவுடன் ஆவல் பொங்கி உற்சாகத்துடன் பேச்சை வேறு கோணத்துக்குத் திருப்பினார்)

*என்ன தோழர் இசைவிழா பிரசுரம் வந்துடிச்சா, முன்கூட்டியே டிக்கெட் ரிசர்வ் பண்ணிடுறேன் தோழர் (என் முகத்தை உற்றுப் பார்த்தவர் என்னிடமிருந்து பதில் வரவில்லை என்றாலும் மேற்கொண்டு தனது ஆவலை வெளிப்படுத்தினார்.) தோழர், போனமுறை ஒயிலாட்டம், படுகர் ஆட்டம் , தேவராட்டம் நல்லயிருந்திச்சு. இந்த முறை வேற ஏதாவது புது ஆட்டம் இருக்குமா தோழர்.

*ஊம் , இந்த முறை புது ஆட்டம் என்னங்கிறதை பெறகு பாப்போம். உங்க கிட்ட ஊசலாட்டம்னு ஒண்ணு இருக்கே அதபத்தி இப்ப பேசுவோமே.

*சிரிச்சா தப்பா எடுத்துக்காதீங்க தோழர். நாந்தான் ஏற்கனவே சொன்ன மாதிரி. நான்ல்லாம் சும்மா வேஸ்ட். உங்கள மாதிரி .....முடியலையே.



*எங்கள் மாதிரி , உங்களை மாதிரின்னு இந்த தெய்வமாக்குற வேலையெல்லாம் விடுங்க. நாம ஒண்ணும் குறி சொல்ற ஆளுங்க கெடையாது. ஒக்காந்த எடத்துலேயே ஜீபூம்பான்னு ஊதிவுடுறதுக்கு, நம்ம குறிக்கோள் அடையனும்னா ஜனங்க மத்தியிலே போகனும். அவங்க பிரச்சினைகள முதல்ல நாம தெரிஞ்சிக்கணும். இதெல்லாம் செய்யிறதுக்குதாங்க மார்க்சியம், சும்மா டி.என்.பி.எஸ்.ஸி. கைடு மாதிரி வீட்ல உக்காந்து மார்க்சிய புத்தகத்த படிச்சா புரட்சி நடக்குமா சொல்லுங்க .

*ஆமா தோழர், பக்கத்து ஊர்ல , இப்ப கூட சாராய சாவு நடந்திச்சி, யாராவது தோழர்கள் வந்திருந்தா நாம போயி தகவல் திரட்டியிருக்கலாம்.


*அது சரிங்க. உடனே நீங்க போயி பார்த்து தகவல் விசாரிக்கிறதுல என்ன பிரச்சினை?

*அந்த ஊர்ள எல்லாம் தெரிஞ்ச மொகம் தோழர். எங்க அப்பா அந்த ஊர்லதான் டீச்சரு. உங்க பையன் இந்த கட்சியில் எல்லாம் இருக்கான்னு சொல்லுவாங்க. உடனே எங்க அம்மா வீட்ல பிரச்சினை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. மெயின 'போலீஸ்காரன்' இழுத்துப்ப்போட்டு அடுப்பாண்டா உனக்கு ஏண்டா அந்த தலையெழுத்து'ன்னு சத்தம் போடுவாங்க. பெரிய தொல்லைங்க.


*அவங்க கண்ணோட்டத்துக்கு அப்படித்தான் பேசுவாங்க . நீங்க எந்த வர்க்கத்திற்காக வாழ விரும்புறீங்களோ அதுக்காக இறங்கி வந்து உங்க கருத்தைப் பேசுங்க. ஏசுவ சிலுவையில் அறைஞ்சா மட்டும் தியாகம் , போலீஸ்காரன் நம்மளச் செவுள்ல அறைஞ்சா மட்டும் கேவலமா? மக்களுக்காக அந்த வன்முறையையும் எதிர்கொள்றோம்னு உங்க கருத்த நீங்க பேச ஏன் தயங்குறீங்க ?

*இல்ல தோழர், அம்மா , அப்பா கிட்ட பிரச்சினை பண்ணிகிட்டு மீறி நான் இயங்குறதில்ல. அது எங்கிட்ட உள்ள குறைபாடுதான்.

*அப்ப அரசாங்கம் வழியா ஒடுக்குமுறை வந்தா எதிர்ப்பீங்க, அதுவே அம்மா அப்பா வழியே வந்தா சகிச்சிக்கலாமா? எங்க சுத்தி வந்தாலும் அதாங்க. புரட்சின்னா மொதல்ல நம்மள மாத்திக்க போராடணும். அதுக்கு ஏன் தயக்கம் காட்டுறீங்க?

*அதாவது தோழர், அப்பா அம்மா 'கெவர்கெண்ட் ஸ்டாப்' நான் ஒரே பையன். ஏதாவது வாதம் பண்ணி வெளிய வந்திட்டா கஷ்டமாயிருக்கும்.

*யாருக்கு கஷ்டமாயிருக்கும்? ஒரு பேச்சுக்கு வெச்சிக்குவோம்; ஒருவேளை நீங்க வீட்ட விட்டு வெளிய போயிட்ட, அய்யோ புள்ள இருந்திருந்தா இந்நேரம் ரேசன் வாங்கிக்கிட்டு வந்து வச்சிருப்பான் . புள்ள இருந்திருந்தா, இந்நேரம் மளிகை சாமான் வாங்கியாந்து போட்டிருப்பான். அப்படின்னு நினைக்கிற அளவுக்கு உங்க வீட்ல நீங்க எந்த வேலையிலெயும் பங்கெடுக்குறதில்ல. ஒரே புள்ள இப்படி கட்சி வேலைன்னு வெளியே போயிட்டானேன்னு கவலைப்படுவாங்களே தவிர மத்தபடி உங்க வீட்லேயே உங்களுக்கு சொல்ற உபதேசம் என்ன? முடிஞ்சா வேலைக்குப் போ இல்ல பேசாம சிங்கப்பூர், மலேசியான்னு ஏற்பாடு பண்றோம்தானே அவுங்களும் சொல்றாங்க.

*ஆமாந் தோழர் , நம்ம "அமெரிக்க போகம்" புத்தகத்த படிச்சிட்டு "விஷயம் சரிதான் நாமெல்லாம் அதுக்காக ஏதாவது 'டொனேஷன்' தர்றதோட நிறுத்திக்கணும். அசதி இல்லாதவன் போராடட்டும் . யார் தப்புன்னு சொல்றா"ன்னு பச்சையா சொல்றாங்க.

நீ வீட்டவிட்டு மொதல்ல வெளில போனாதான் உருப்படுவ , மொதல்ல அதுக்கு ஏற்பாடு பண்றேன்ன்னு பணம் கொடுத்து வேல வாங்கற ஐடியாகூட இருக்கு.

*வீட்ட விட்டு வெளில போய்ட்டா அவங்களுக்கு அவங்களுக்குக் கஷ்டமாயிருக்குமுன்னு நீங்க நெனக்கிறீங்க. உண்மை என்னான்னா? எல்லா அப்பா அம்மாக்களுடைய பிரகடனமே 'வீட்டை விட்டு வெளியே போ' அப்படீங்கறதுதான். நாமளும் அதான் சொல்றோம். ஆனா அவுங்க வெளியே போயி சுயநலத்துக்கான ஜோலியப் பாருங்குறாங்க. நாம மக்களுடைய நலனுக்கான வேலையைப் பாருங்குறோம்.

*அவங்களுக்கு விஷயம் நல்லாத் தெரியிது தோழர். ஆன எவ்வளவு சொன்னாலும் ஏத்துக்க மாட்டேங்குறாங்க.

*விஷயம் தெரிஞ்சதனாலதாங்க அவுங்க ஏத்துக்க மாட்டேங்குறாங்க. நீங்கதான் முடிவு பண்ணனும் வர்ககப் பாசமா? தாய்ப்பாசமா ?

*இல்ல தோழர். எனக்கு சின்ன புள்ளையிலேர்ந்தே பாசம் ஜாஸ்தி அதான் நான் தடுமாறிக்கிட்ட இருக்கிறது. என்ன இருந்தாலும் அப்பா அம்மா மீறி செய்யிறதுக்குக் கஷ்டமா இருக்குது தோழர்.

*நீங்க சொல்ற காரணத்த வெச்சி பார்த்தாக்கூட வீட்டவிட்டு வீதிக்கு வந்து போராடியாகணும். உங்க அம்மா அப்பா இவ்வளவு செலவு பண்ணி உங்கள ஆசிரியர் தகுதிக்குப் படிக்க வெச்சிருக்காங்க. ஆனா அரசாங்கம் இனிம ஆளே எடுக்கப் போறதில்லேன்னு அறிவிச்சிடுச்சி. உங்க அம்மா , அப்பா எதிர்பார்ப்ப, குடும்பப் பாசத்த கொலைச்சது யாரு? புரட்சிகர அமைப்புகளா ? ஜெயலலிதாவா(அன்று) ?

கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் சொல்லட்டுங்களா? உண்மை என்னான்னா, இப்படியே காலைல மெதுவா தூங்கி எழுந்திருச்சா அம்மா கைல காப்பி தருவாங்க ஒரு ரவுண்ட் வெளியே போயுட்டு வந்தா டிபனு. மத்தியான்ம் ஒரு நல்ல தூக்கம் அப்படியே சயங்காலம் யாராவது தோழர்களப் பார்த்தா மார்க்சியம், விவாதம், அப்படியே நைட்ல டி.வி. உலகச் செய்திகல், புதிய கலாச்சாரம். இப்படியே இப்ப இருக்கிற வர்க்க நலன் குறையாம கம்யூனிசம் பேசிக் கிட்டு இருக்குறதுதான் உங்களுக்குப் பிடிக்குது.


இந்தக் சுகங்களை உதறிவிட்டு வர உங்களால முடியல அப்படீங்குறதுதான் உண்மையான பிரச்சினை . இந்த வீடு , அம்மா, அப்பா....இதெல்லாம் இது மேல பூசப்பட்ட வண்ணக் கலவையாத்தான் படுது.

இல்ல வேற என்னதான் பிரச்சினைன்னு நீங்கதான் சொல்லுங்க விவாதிப்போம்.


(அந்தத் தோழர் நீண்ட நேரம் மெளனமானார்.)


புதிய கலாச்சாரம் ஜனவரி 2002 -ல் இருந்து.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home