Wednesday, January 24, 2007

மருதிருவர்




""நானும் உழுது விதைக்கும்போது அவன்தானும் உழவுக்கு வந்தானோ?உழவு துறைக்கு வந்தானோ நம்மள்உழவெருதுகள் மேய்த்தானோ?களைமுளைகளெடுத்தானோ? இப்போகஞ்சித் தண்ணிக்குக் கொடுத்தானோ?சனமோ? சாதியோ?கும்பினியான்நம்மள்சம்மந்தக்காரனோ கும்பினியான்மனதுபோல நடப்பானோ? நம்மள்மச்சானோ? தம்பி கிச்சானோ?" கட்டபொம்மு வரலாறு' எனப்படும் கதைப் பாடலில் இருந்து.

1800ஆம் ஆண்டு. திப்பு தோற்கடிக்கப்பட்டு, கட்டபொம்மனும் தூக்கிலேற்றப்பட்டு விட்டார். திருநெல்வேலிச் சீமையில் அனைத்துப் பாளையங்களும் கலைக்கப்பட்டு விட்டன. நவாபை பொம்மையாக வைத்துக் கொண்டு வெள்ளையர்களின் இராணுவம் கொடூரமான அடக்கு முறைகளின் மூலம் நாடாண்ட காலம். நெல்லை வீழ்ந்த போதிலும், தென்னிந்தியாவில் பரவலாக கிளர்ச்சித் தீ முன்னிலும் தீவிரமாகக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. கன்னட மராத்தியப் பகுதியில் தூந்தாஜி வாக், மேற்கு மைசூரில் கிருஷ்ணப்பா நாயக், மலபாரில் கேரளவர்மா, கோவை வட்டாரத்தில் கானி ஜ கான் மற்றும் தீரன் சின்னமலை, திண்டுக்கல்லில் கோபால நாயக்கர், இராமநாதபுரத்தில் மைலப்பன், சிவகங்கையில் சின்ன மருது, பாளைச்சிறையில் இருந்த ஊமைத்துரை மற்றும் சிவத்தையா ஆகிய தலைவர்கள் ஒன்றிணைந்த போராட்டத்தை துவக்கினார்கள். பழனியில் இத்தலைவர்களின் தூதர்கள் கோபால நாயக்கர் தலைமையில் கூடிப் பேசினார்கள். விருப்பாட்சியில் தெற்கத்திச் சீமையின் சுமார் 3000 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வெள்ளையர்களை விரட்டுவதற்குச் சபதம் எடுத்தார்கள். இந்த அறைகூவல் கிராமங்கள் தோறும் பனையோலை மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. தீபகற்பக் கூட்டிணைவு உருவாகியது. மக்கள் திரள் பங்கேற்ற முதல் சுதந்திரப்போர் தொடங்கியது! ஆங்கிலேயர்களின் கண்காணிப்பு அடக்குமுறையை மீறி தமிழகத்திலிருந்து தூதர்கள் பலர் மலபாருக்கும், மைசூருக்கும், மராத்தியத்திற்கும் சென்று வந்தார்கள். உண்மையில் அவை ஒவ்வொன்றும் வீரம் நிறைந்த சாகசப் பயணங்கள்.

காவிரியை மையப்படுத்தி தென்னிந்தியாவில் உருவான இந்தப் புரட்சி, தூந்தாஜி வாக் மூலம் மன்னன் சிந்தியாவையும் இணைத்துக் கொண்டு கங்கைக் கரையையும் தொட விழைந்தது. இவையெதுவும் கற்பனையோ மிகையோ அல்ல. அத்தனையும் ஆங்கிலேய இராணுவக் குறிப்புக்களில் பதிவாகி இருக்கின்றன. தூந்தாஜி வாக்கும், சின்ன மருதுவும் போர்க்காலங்களில் வீரர்களையும், குதிரைப்படையையும் பரிமாறிக் கொள்ள முடிவு செய்கின்றனர். தூந்தாஜி வாக்கின் படையில் கணிசமான அளவு தமிழ் வீரர்கள் இருந்ததாக வெள்ளையர்களே பதிவு செய்திருக்கின்றனர். முதலில் தென்னிந்தியாவின் மையத்திலிருந்த கோயம்புத்தூர் கோட்டையை கைப்பற்றுவதெனவும், துங்கபத்திரைப் போரை முடித்துக் கொண்டு துந்தாஜி வாக் தமிழகத்தின் வட பகுதியில் வெள்ளையரைத் தாக்குவதென்றும், அதன் பிறகு எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் புரட்சியைத் தொடங்குவதெனவும் தீபகற்பக் கூட்டிணைவின் தலைவர்கள் முடிவு செய்கின்றனர். ஆனால் உளவாளிகள் மற்றும் துரோகிகள் மூலம் தகவல் அறிந்த ஆங்கிலேயர்கள் கோவைத் தாக்குதலை முறியடித்து 42 போராளிகளைத் தூக்கிலேற்றுகின்றனர். வடக்கே பல்லாயிரக்கணக்கில் மக்களை அணி திரட்டிப் போராடிய தூந்தாஜி செப் 1800 போரில் கொல்லப்படுகிறார். எனவே தமிழகத்தின் வீரர்கள் பெரிதும் எதிர்பார்த்த தூந்தாஜியின் புகழ் வாய்ந்த குதிரைப்படை தமிழகத்திற்கு வரமுடிய வில்லை. மலபாரில் கேரளவர்மாவின் தளபதிகள் மற்றும் ஏனைய தலைவர்களும் கொல்லப்படுகின்றனர். கிளர்ச்சியாளர்களின் கூட்டணி உடைந்து போனதாக வெள்ளையர்கள் எக்காளமிட்ட நேரம். அந்த எக்காளத்தை அடக்க சிங்கம் போல கர்ச்சித்து எழுந்தார்கள் மருது சகோதரர்கள். 18001801 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த அந்தச் சுதந்திரப் போரில்தான் வெள்ளையர்கள் அதுவரை காணாத உயிரிழப்பைச் சந்தித்தனர். 1857க்கு முந்தைய காலனியாதிக்க வரலாற்றில் இந்த அளவுக்கு வெள்ளை உயிர்கள் வேறெங்கேயும் பலியானதில்லை என்று பதிவு செய்திருக்கிறான் வெள்ளை ராணுவ அதிகாரி ஜேம்ஸ் வெல்ஷ்.




1801 பிப்ரவரி இரண்டாம் நாளன்று, பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து ஊமைத்துரையை விடுதலை செய்யும் சாகசத்திலிருந்து தொடங்குகிறது அந்த வீர வரலாறு. முழுமையான கேட்கும் திறனோ, பேசுந்திறனோ அற்ற, கட்டபொம்மனின் தம்பி குமாரசாமிக்கு மக்கள் அன்புடன் சூட்டிய பெயர் ஊமைத்துரை. ஊமைத்துரையின் வீரத்தையும் போர்த்திறனையும் மக்களைத் திரட்டும் ஆற்றலையும் மக்களிடம் அவர் பெற்றிருந்த பெருமதிப்பையும் கண்டு வெள்ளையர்களே அதிசயித்திருக்கிறார்கள். சுமார் 24 சைகைகள் மூலமே தன் வீரர்களைப் போர்க்களத்தில் வழிநடத்திய ஊமைத்துரை அடிக்கடி வைக்கோலைப் பிரித்து ஊதுவாராம். வெள்ளையர்களையும் அப்படி ஊதவேண்டுமென்பது இதன் பொருள். பாளையங்கோட்டை சிறையிலிருந்த ஊமைத்துரையையும் கட்டபொம்மனது மற்றொரு தம்பியான சிவத்தையாவையும் விடுவிக்க மருது சகோதரர்கள் எடுத்த முயற்சியொன்று ஏற்கெனவே தோல்வியடைந்திருந்தது. விடுவிக்க வந்த சிவகங்கை வீரர்கள் பிடிபட்டுத் தூக்கிலேற்றப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் திட்டமிடப்பட்ட இந்த இரண்டாவது முயற்சியோ வெள்ளையருக்குத் தரப்பட்ட கவித்துவமான பதிலடி. முதல் பாஞ்சாலங்குறிச்சி போரில், எந்த திருச்செந்தூர் திருவிழாவைப் பயன்படுத்திக் கொண்டு வெள்ளையர்கள் முற்றுகையிட்டார்களோ, அதே திருச்செந்தூரின் பக்தர்களாகவும், விறகு சுமப்போராகவும் வெற்றிலை, இலை விற்போராகவும் வேடமிட்ட வீரர்கள் கோட்டையைச் சுற்றி வந்தனர். கோட்டைக்குள் இருப்பவர்கள் இறந்தோருக்கு திதி கொடுக்க வேண்டுமெனச் சொல்லி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று "வியாபாரிகளையும்' உள்ளே அழைக்கின்றனர். பொருள்களின் கட்டுக்குள்ளே இருந்த ஆயுதங்கள் கைமாறுகின்றன. வெள்ளையதிகாரிகளைத் தாக்கிவிட்டுத் தப்புகிறார்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள். ஆங்கிலேயர்களால் தரைமட்டமாக்கப்பட்டு, உழுது, எருக்கு விதைக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆறே நாட்களில் அதிசயம் போல் எழுந்து நின்றது. தலித் மக்கள், மீனவர்கள் என்று எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டி ஊமைத்துரையும், சிவத்தையாவும் மக்களோடு மக்களாய் மண் சுமந்து இரவும் பகலும் அந்தக் கோட்டையைக் கட்டினார்கள். வெள்ளையனுக்கு எதிராக மக்களைத் திரட்டும் கலையில் தம்பிகள் அண்ணனை விஞ்சினார்கள். சிவத்தையா பாஞ்சாலங்குறிச்சியின் அரசனாக அறிவிக்கப்பட்டார். கோட்டை கட்டிமுடிக்கப்பட்ட மறு கணமே வெள்ளையர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்யப்பட்டது. நெல்லைச் சீமையில் வெள்ளையர்களின் நேரடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாளையங்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டன. தூத்துக்குடித் துறைமுகமும் கைப்பற்றப்படுகிறது. அங்கிருந்த வெள்ளை அதிகாரி மேஜர் பானர்ட்டின் மனைவி உயிர்ப்பிச்சை கேட்டதால் யாரையும் கொலை செய்யாமல் மன்னித்து அனுப்புகிறார் ஊமைத்துரை. கிளர்ச்சியாளர்களின் குடிவழியையே அழித்து வந்த வெள்ளையர்களிடம் எக்காலத்திலும் காணக்கிடைக்காத பண்பு இது. கர்னல் மெக்காலே தலைமையில் பாஞ்சாலங்குறிச்சியை அழிக்க வந்த படையை குலசேகர நல்லூரில் மறித்துத் தாக்கி ஓடவைத்தார் ஊமைத்துரை. 50 நாட்கள் கழித்து கர்னல் அக்னியு தலைமையில் பெரும் படையும் பீரங்கிகளும் வந்த பிறகே அந்தக்கோட்டை தன் இறுதி மூச்சை விடநேர்ந்தது. கோட்டைக்குள்ளேயும் வெளியேயும் வேல் கம்பையும் வாளையும், துப்பாக்கியையும் பிடித்தவாறு 1500 பிணங்கள் கிடந்தததாகவும், பிணக்குவியலுக்குள்ளே இருந்தும் பாஞ்சை வீரர்கள் தங்களை வாட்களுடன் தாக்கியதாகவும் வெள்ளையர்கள் அச்சத்துடன் குறிப்பிடுகின்றனர். குற்றுயிராய்த் தப்பிய ஊமைத்துரையை மக்கள் காப்பாற்றுகின்றனர். எஞ்சிய வீரர்களுடன் ஊமைத்துரையும், சிவத்தையாவும் மே 28ஆம் தேதி கமுதிக்கு வந்து சேருகிறார்கள். சின்ன மருதுவும், பெரும் திரளான மக்களும் அவர்களை வரவேற்று சிறுவயலுக்கு அழைத்துச் செல்கின்றனர். மருது ""ஐரோப்பியர்களைக் கண்ட இடத்தில் அழித்து விடுங்கள்'' என்று மக்களுக்கும் ஆங்கில இராணுவத்தின் இந்தியச் சிப்பாய்களுக்கும் பின்னாளில் பகிரங்கமான பிரகடனத்தை வெளியிடும் சின்ன மருது ஊமைத்துரையை வரவேற்கிறார். இதன் விளைவாக வெள்ளையரோடு ஏற்பட இருக்கும் போரையும் மிகுந்த அலட்சியத்துடன் வரவேற்கிறார். மருதிருவரின் இந்த வீரத்திற்கு நீண்ட பாரம்பரியமே இருக்கிறது.
______________________________________________

மருதிருவர் என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள் பரம்பரை ஆட்சியுரிமை பெற்ற பாளையக்காரர்கள் அல்லர். அவர்கள் திறமையாலும், உழைப்பாலும், போராட்டத்தாலும், மக்களின் அன்பினாலும் உருவெடுத்த உண்மையான மக்கள் தலைவர்கள். இராமநாதபுரம், நரிக்குடிக்கு அருகே முக்குளம் எனும் கிராமத்தில் மொக்கபழனியப்பன் சேர்வை எனும் சாதாரணப் படைவீரனுக்கும் பொன்னாத்தாள் எனும் எளிய பெண்மணிக்கும் பிறந்த மருது சகோதரர்களை அவர்களுடைய தந்தை சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். ஆரம்பத்தில் மன்னது குதிரைகளையும், வேட்டை நாய்களையும் பராமரிக்கும் எளியவேலைகளை மருதிருவர் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கட்டாய வரி வசூல் கொள்ளை நடத்தி வந்த ஆடம்பர சுகபோகியான ஆற்காட்டு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களது இராணுவத்தைப் பயன்படுத்துகிறான். கொள்ளையில் தங்கள் பங்கை அதிகரிப்பதற்காக கிழக்கிந்தியக் கம்பெனிக்கான வரி பல இடங்களில் 100 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இப்படித்தான் ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றுகிறது. அடுத்து சிவகங்கை. வெள்ளையன் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் கொல்லப்படுகிறார். சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றில் முதல் களப்பலியாகிறார். அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதிருவரும் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்கின்றனர். விருப்பாட்சியை உள்ளடக்கிய திண்டுக்கல் பகுதி அப்போது ஹைதரலியின் ஆட்சியில் இருந்தது.

அமைச்சர் தாண்டவராயன் சிவகங்கையை மீட்பதற்கு ஹைதரிடம் உதவி கோருகிறார். சிவகங்கை மட்டுமல்ல ஏனைய பாளையங்களையும் விடுதலை செய்வதாக ஹைதரும் உறுதியளிக்கிறார். இதனிடையில் அமைச்சர் மரணமடைய பாளையத்தை மீட்கும் பொறுப்பு மருது சகோதரர்களிடம் வருகின்றது. இந்தப் போராட்டத்தினூடாகத்தான் இவர்கள் காலனியாதிக்க எதிர்ப்பில் உறுதியடைகின்றனர். நவாப்பின் ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்ய சிவகங்கை மக்களைத் திரட்டுகிறார் சின்ன மருது. இராமநாதபுரம், சிவகங்கை மக்கள் கிளர்ச்சி செய்கின்றனர். மருதிருவரின் தலைமை போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறது. இதேகால கட்டத்தில், 1780ஆம் ஆண்டு வெள்ளையர்கள் மீது படையெடுக்கிறார் ஹைதர். ஹைதரின் திண்டுக்கல் படைத்தளபதி சையத் சாகிபு அளித்த சிறு படையின் உதவியுடன் மருதிருவரும் சிவகங்கையை மீட்க போர் தொடுக்கின்றனர். சிவகங்கை மீட்கப்படுகிறது. வெள்ளச்சி அரசியாகவும், பெரியமருது தளபதியாகவும், சின்ன மருது அமைச்சராகவும் பதவியேற்கின்றனர். மருதிருவரின் வீரம் மக்களிடையே புகழாகவும் செல்வாக்காகவும் பரவத் தொடங்குகிறது. ஆத்திரம் கொண்ட நவாப் கம்பெனியின் உதவியுடன் சிவகங்கை மீது படையெடுக்கிறான். 1783இல் கர்னல் புல்லர்டன் தலைமையிலும், 1789இல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் தலைமையிலும் கம்பெனிப் படைகள் சிவகங்கையை ஆக்கிரமிக்க முயன்றன.

இத்தாக்குதல்களின் போது தற்காலிகமாகப் பின்வாங்கிய மருதிருவர் கம்பெனிப் படைகள் அகன்றதும் தமது பாளையத்தை மீண்டும் கைப்பற்றுகின்றனர். இறந்து போன மன்னர் முத்துவடுகநாதன் மகள் வெள்ளச்சியை, அவளது தந்தை வழி உறவினரான வெங்கம் பெரிய உடையத் தேவருக்கு மணம் செய்து கொடுத்து, அவரையே சிவகங்கையின் அரசராகவும் ஆக்குகின்றனர். இக்காலகட்டத்தில் மாவீரன் திப்புவை ஒழிப்பதற்குக் கவனம் செலுத்தி வந்த கம்பெனி சிவகங்கையோடு முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. மருதிருவரிடம் ஒத்துப் போகுமாறு நவாபையும் அறிவுறுத்தியது இப்படி வெள்ளையர்கள் மற்றும் ஆற்காட்டு நவாபின் சூழ்ச்சிகள், படையெடுப்புக்களை முறியடித்து சிவகங்கையைக் காப்பாற்றிய மருதிருவர் 1790 முதல் அமைதியாக ஆட்சி புரிந்தனர். ""சின்னமருது எளியவர்; செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர்; அனைவரிடமும் வேறுபாடின்றி பழகும் இயல்பினர்; அவரது தலையசைப்பையே சட்டமாகக் கருதி அதற்குக் கீழ்ப்படிய மக்கள் தயாராக இருந்தனர்; தனக்கென ஒரு மெய்க்காப்பாளனைக் கூட வைத்துக் கொள்ளாத அவரை 1795 இல் அவரது சிறுவயல் அரண்மனையில் சந்திக்கச் சென்றேன். எளிதில் மக்கள் சென்று வரும் வகையில் அமைந்திருந்தது அவ்வரண்மனை. அவருக்குக் கடவுளின் அருள் கிட்டவேண்டும் என மக்கள் வேண்டியதையும் கேட்டறிந்தேன்... மருதிருவர் நினைத்திருந்தால் வெள்ளையர்களுடன் சமரசமாகப் போயிருக்கலாம். அவர்களுக்கு நாங்கள் எந்தக்குறையும் வைக்கவில்லை, எதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை'' என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் தனது நூலில் குறிப்பிடுகின்றான். 1790களில் வெள்ளையர்களோடு சிவகங்கைப் பாளையத்துக்குத் தீவிரமான முரண்பாடுகள் இல்லையென்ற போதிலும், வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு நாடெங்கும் அதிகரித்து வருவதை மருதிருவரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. கட்டபொம்மனைப் போராடத் தூண்டுகிறார் சின்ன மருது. 500 வீரர்களை அனுப்பி உதவுகிறார். தென் தமிழகத்தில் கூட்டணியை உருவாக்கப் பாடுபடுகிறார்.

இராமநாதபுரம் கூட்டிணைவிற்குத் தலைமையேற்றதோடு, கட்டபொம்மனைத் திருநெல்வேலிக் கூட்டிணைவுக்குத் தலைமை தாங்கவும் வைக்கிறார்கள் மருது சகோதரர்கள். 1801 திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக் அனைவரும் கொல்லப்பட்டு விட்ட காலம். தீபகற்பக் கூட்டிணைவு பெரிதும் தளர்ந்து இருந்த நேரத்தில் மருதிருவர் கிளர்ச்சிக்குத் தலைமையேற்கின்றனர். இராமநாதபுரத்தில் வெள்ளையர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த மைலப்பன் அங்கிருந்து தப்பி மருதிருவரிடம் தஞ்சமடைகிறார். அதே போல பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மே28 அன்று ஊமைத்துரையும் சிவத்தையாவும் தம் வீரர்களுடன் சிவகங்கைக்கு வருகின்றனர். சிவகங்கையை மையமாகக் கொண்டு, தென் தமிழகமெங்கும் வெள்ளையருக்கெதிரான போராட்டத் தீ பரவத்தொடங்குகிறது. அஞ்சி நடுங்கிய துரோகி தொண்டைமான் கவர்னருக்குக் கடிதம் எழுதுகிறான்: ""சின்ன மருது இப்போது சிவத்தையாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டில் கலகத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறான். திருமாவலூர், நத்தம், மேலூர் முதலிய கோட்டைகளைக் கைப்பற்றியுள்ளான்.

ஆங்கில அரசுக்கு உரிமையான இராணுவக் கிடங்குகளைத் தாக்கித் தளவாடங்களைக் கொள்ளையடித்துள்ளான். மேலும் ஒரு கிளர்ச்சிப் படையை இராமநாதபுரத்துக்கு அனுப்பியுள்ளான். எங்கு நோக்கினும் கலகம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.'' தொண்டைமான் இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருந்த போதே சின்ன மருதுவின் மகன் சிவத்ததம்பி தலைமையிலான படை அறந்தாங்கியைக் கைப்பற்றுகிறது. புதுக்கோட்டையும் பறிபோய்விடுமோ என்ற பீதியில் அலறுகிறான் தொண்டைமான். ஆனால் ""துரோகிகளேயானாலும் நம் நாட்டவர்கள்'' என்று புதுக்கோட் டையை விட்டு விட்டு, கம்பெனியின் நேரடி ஆட்சிப் பகுதிகளை மட்டும் தாக்குகிறது கிளர்ச்சிப்படை. தஞ்சை மாவட்டத்தில் நுழைந்து நாகூர் வரை செல்கிறது. வடக்கே சத்தியமங்கலம் முதல் தெற்கே நெல்லை மாவட்டம் களக்காடு வரை, இப்போர் நடைபெற்றது. ஊமைத்துரை, சிவத்தையா தலைமை யிலான படை மதுரை திண்டுக்கல் பகுதியிலும், மைலப்பன், மருதிருவரின் தலைமையிலான படைகள் இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியிலும் போர் புரிந்தனர். வெள்ளையர்களிடமிருந்து பல பகுதிகள், கோட்டைகள் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. கிளர்ச்சியாளர்களின் கொரில்லாப் போர் முறையினால் வெள்ளையர்களின் படைவரிசை பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. "திப்புவையே வென்று விட்டோம்' என்ற ஆணவத்துடன் வந்த கம்பெனிப்படை பல தளபதிகளை இழந்து மூக்கறுபட்டது. அடிபட்டுக் கந்தலாகி, தட்டுத் தடுமாறி இராமநாதபுரம் வந்து சேர்கிறது கம்பெனிப் படை. சிவகங்கைப் பாளையத்திலிருந்து ஒரு நாயின் ஆதரவைக்கூடப் பெறமுடியாது என்பதைப் புரிந்து கொண்ட கர்னல் அக்னியூ, நாயினும் கீழான பிறவிகளை தேடிக் கண்டுபிடிக்க ஒரு அறிக்கை விடுகிறான்.

""சின்ன மருது பரம்பரைப் பாளையக்காரன் அல்ல; சிவகங்கை மன்னனிடம் அடிமையாக வேலைக்குச் சேர்ந்தவன்... எனவே, சிவகங்கைப் பட்டத்துக்கு உரிமை உண்டு என்று நினைப்பவர்கள் எவரும் என்னைச் சந்தித்தால், இந்தக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு அரியணை வழங்கப்படும்.... மாறாக, மருதுவை யாரேனும் ஆதரித்தால் பாஞ்சாலங்குறிச்சி, விருப்பாட்சி போன்ற இடங்களில் மக்களுக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும்'' என்று மிரட்டுகிறான். ""உண்மையிலேயே அரியணைக்கு பாத்தியதை இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, அரியணைக்கு ஆசைப்படுகிறவன் யாராயிருந்தாலும் வா, பதவி தருகிறேன்'' என்கிறான் அக்னியூ. இப்படி ஆசைகாட்டி ஆள்பிடிக்க வேண்டிய அளவுக்கு மருதிருவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததை அக்னியூவின் அறிவிப்பு நிரூபிக்கிறது. ஜூன் 12ம் தேதி இராமநாதபுரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்கு, தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க திருச்சி பிரகடனத்தின் மூலம் உடனே பதிலளிக்கிறார் சின்ன மருது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------
சின்னமருதுவின் திருச்சிப் பிரகடனம்
இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்
ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,
மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்... ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.
அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்...
ஆதலால்..... மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்... இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்... இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது... இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!....
இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்... எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்... இப்படிக்கு, மருது பாண்டியன்,
பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.( 1801 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் வெள்ளையர்களால் கைப்பற்றப் பட்ட இவ்வறிக்கை திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் ஒட்டப் பட்டிருந்தது. இங்கே மொழி பெயர்த்து சுருக்கித் தரப்பட்டுள்ளது).

ஒரு பாளையத்தின் அரசுரிமைக்கு ஆசை காட்டுகிறான் அக்னியூ. மருதுவோ, தென்னிந்திய மக்கள் (ஜம்பு தீபகற்பம்), மற்றும் இந்துஸ்தானத்து மக்கள் (ஜம்புத் தீவு) அனைவரின் விடுதலைக்கு அறைகூவல் விடுகிறார். மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறான் அக்னியூ. ""ஆயிரம் ஆண்டு வாழ்ந்தாலும் சாவு நிச்சயம், போராட வா'' என்று மக்களைத் தட்டி எழுப்புகிறார் மருது.
இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய காலனியாதிக்க எதிர்ப்பு விடுதலைப் போர்கள், தங்களது அரசுரிமையைப் பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தியே இருந்திருக்கிறது. முதன்முறையாக மருதுவின் அறிக்கை "நாட்டு விடுதலை' என்பதை மக்கள் நலனுடன் இணைத்துப் பேசுகிறது. சாதி,மத,மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களனைவரையும் காலனியாதிக்க எதிர்ப்புக்காக ஒன்றிணையக் கோரும் முதல் பிரகடனமும் இதுதான்.
மருது வெளியிட்ட தென்னிந்திய மக்களுக்கான பிரகடனம் அரசியல் மையமான திருச்சிக் கோட்டையிலுள்ள நவாப் அரண்மனையின் வாயிலிலும், இந்தியா முழுவதற்குமான பிரகடனம், நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்லும் சிறீரங்கம் கோயிலின் மதிற்சுவரிலும் ஒட்டப்படுகின்றன. உண்மையில் இந்தப் பிரகடனம் தீபகற்பக் கூட்டிணைவு விடுத்த செயலுக்கான அறைகூவல். ""தீபகற்பக் கூட்டிணைவு ஆங்கிலேயப் பேரரசின் அமைதியையும் பாதுகாப்பையும் அழிக்கும் தன்மையுடையது; பேராபத்தினை விளைவிக்கக் கூடியது'' என்று குறிப்பிடுகிறது லண்டன் தலைமையகத்துக்கு இங்கிருந்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் இராணுவத்தின் ஆவணம்.


உண்மைதான். கிளர்ச்சி துவங்கிய பின் கிழக்குக் கடற்கரையின் எந்தத் துறைமுகத்திலும் கம்பெனியின் கப்பல்கள் சரக்குகளை இறக்க முடியாததால் அவை இலங்கைக்குத் திருப்பி விடப்பட்டன. வரிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட வளமான தஞ்சை மண்ணின் உழவர்களே கிளர்ச்சிப் படையுடன் இணைந்து கொண்டார்கள் எனும்போது, பிற பகுதி உழவர்கள் கிளர்ச்சிக்கு அளித்த ஆதரவைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை. ""கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து கொண்ட உழவர்களிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு மரண தண்டனை'' என்று அறிவிக்கிறான் கும்பகோணம் கலெக்டர். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தானியம் கொண்டு செல்வதைத் தடை செய்த கம்பெனி நிர்வாகம், அதிலும் கொள்ளை இலாபம் அடித்ததால், பஞ்சம் பாதித்த பகுதி மக்களும் திரள் திரளாகக் கிளர்ச்சியில் இணைந்தார்கள். வெறும் நாலரை லட்சம் மக்கட்தொகை கொண்ட சிவகங்கைப் பாளையத்திலிருந்து மட்டும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மருதுவின் படையில் இணைந்திருந்தார்கள். கம்பெனியின் உள்நாட்டுச் சிப்பாய்களும், நவாபின் சிப்பாய்களும் கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்துப் போரிட மறுத்ததால், மேலும் மேலும் வெள்ளைப் படைகளைக் குவிக்க வேண்டிய கட்டாயம் கம்பெனிக்கு ஏற்பட்டது.
அப்போது கர்னல் அக்னியூ மேலிடத்திற்கு எழுதிய கடிதங்களில் தோல்வி ஏற்படுத்திய சலிப்பும், விரக்தியும் தென்படுகின்றன. போரிட்டு வெல்லமுடியாத வெள்ளையர்கள் சூழ்ச்சியில் இறங்கினார்கள். போர் நடந்து கொண்டிருக்கும் போதே வேலுநாச்சியாரின் உறவினரான கௌரி வல்லப உடையத் தேவன் எனும் துரோகி சிவகங்கையின் புதிய அரசராக வெள்ளையர்களால் அறிவிக்கப்படுகின்றான். உணவையும், சாலை போடுவதற்கான பணியாட்களையும், ஏராளமான வீரர்களையும் அனுப்பி உதவுகிறான் தொண்டைமான். மருதிருவரின் போர்த் திட்டங்களை ஒற்றறிந்து துரோகிகள் வெள்ளையர்களுக்குச் சொல்கின்றனர். தொண்டித் துறைமுகம் வழியாக கிளர்ச்சியாளர்களுக்கு உணவும், வெடிமருந்தும் கிடைத்து வந்ததை அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தடுத்து நிறுத்துகின்றனர்.
இப்படி துரோகத்தாலும், சதியாலும் பலமடைந்த வெள்ளையர்கள் இறுதியில் தென்னிந்தியா முழுவதுமிருந்து தம் படைகளை ஒன்று குவித்து காளையார் கோவிலை மூன்று திசைகளிலிருந்து முற்றுகையிடுகின்றனர். சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த இந்த முற்றுகைக்குப் பின் மருதிருவர் மற்றும் சிவகங்கை மக்களின் வீரஞ்செறிந்த போர் முடிவுக்கு வருகிறது. சோழபுரம் காட்டில் சின்னமருதுவும், மதகுபட்டிக்காட்டில் பெரியமருதுவும், வத்தலக்குண்டில் ஊமைத்துரையும் சிவத்தையாவும் கைது செய்யப்பட்டனர்.


துரோகி கௌரி வல்லப உடையத்தேவன் மருதிருவரிடம் சமாதானம் பேசி வெள்ளையர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு கோருகிறான். உற்றார், சுற்றம் அனைவரையும் இழப்போமென்று தெரிந்த நிலையிலும் அந்தச் சிவகங்கைச் சிங்கங்கள் மண்டியிட மறுக்கின்றனர். இறுதியில் மருதிருவர் மற்றும் அவர்களது வாரிசுகள், உறவினர், ஏனைய கிளர்ச்சியாளர்கள் உட்பட சுமார் 500 வீரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் நாள் தூக்கிலிடப்படுகின்றனர். அவர்களில் மருதிருவரின் மகன்கள், பேரன்கள் உள்ளிட்டு ஒருவரையும் வெள்ளயர்கள் விட்டுவைக்கவில்லை. சின்ன மருதுவின் தலையை வெட்டி எடுத்து காளையார் கோவிலில் நட்டுவைத்தன வெள்ளை மிருகங்கள். ஊமைத்துரையும், சிவத்தையாவும் பாஞ்சாலங்குறிச்சி கொண்டு செல்லப்பட்டு அங்கே நவம்பர் மாதம் 16ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.
சின்னமருதுவின் 15 வயது மகன் துரைச்சாமி, சிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையத்தேவர், பாஞ்சாலங்குறிச்சி தளபதி குமாரசாமி நாயக்கர் உள்ளிட்ட 73 கிளர்ச்சியாளர்கள் மலேசியாவில் இருக்கும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு 11.2.1802 அன்று நாடு கடத்தப்பட்டு, அங்கேயே இறந்தும் போயினர். மருதிருவருடைய வீரத்தின் சுவடுகூட மிச்சமிருக்கக் கூடாது என்று கருதிய வெள்ளையர்கள் அவர்களுடைய குடிவழியையே இல்லாதொழித்தனர்.

மக்களோ, மருதிருவரை குடி வழியெதுவும் தேவைப்படாத வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக்கி விட்டனர். மக்களுடைய அன்பின் வெளிப்பாடான இந்த நடுகல் மரபு, கல்லாய் இறுகிப்போன கையறு நிலையின் சாட்சியமாய் நம்முன்னே நிற்கிறது.

எரிமலையாய்க் குமுறி வெடிக்கும் திருச்சி பிரகடனத்தின் சொற்கள் நம் செவிப்பறைகளில் வந்து மோதுகின்றன. சின்ன மருதுவின் ஆணை, வணங்கச் சொல்லவில்லை, வாளேந்தச் சொல்கிறது; பக்தியைக் கோரவில்லை, வீரத்தைக் கோருகிறது. ""ஆதலால் மீசை வைத்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் அனைவரும்...'' உங்களைத்தான் அழைக்கிறார் சின்ன மருது.


வேல்ராசன்

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2006

Wednesday, January 17, 2007

வீரபாண்டிய கட்டபொம்மன்



விடுதலைப் போரின் வீர மரபு

நாள் : 17.10.1799. இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்
""விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான். இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.''

""மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்''.

கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான்.
அடுத்துவந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது. தமிழகத்தில் தமது நேரடி ஆட்சியை நிறுவுவதற்குத் தடையாக இருந்த பாளையங்கள் எனும் நிர்வாக அமைப்பை ஒழிப்பதற்கு கட்டபொம்ம னின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

மதுரையை நாயக்க மன்னர்கள் கைப்பற்றிய 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்தமிழகத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. உள்நாட்டுக் குழப்பங்களாலும், போர்களாலும் சீர்குலைந்த நாட்டுப்புறங்களில் இந்தப் பாளையங்கள் ஓரளவிற்கு அமைதியைக் கொண்டு வந்தன. பாளையக்காரர்கள் ஒரு சிற்றரசருக்குரிய உரிமைகளை அனுபவித்து வந்தனர். வரி தண்டும் உரிமை, காவல் உரிமை, நீதி வழங்கும் உரிமை முதலானவற்றை வாழையடி வாழையாகப் பெற்று வந்தனர். வசூலிக்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கு மன்னனுக்கும், ஒரு பங்கு படைவீரர்களைப் பராமரிப்பதற்கும், ஒரு பங்கு தனது செலவிற்கும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேவைப்படும் சமயங்களில் தனது படை வீரர்களை மன்னனது ஆணைக்கிணங்க அனுப்பவேண்டும். பாளையக்காரர்களை ஐரோப்பாவிலும், சீனாவிலும் இருந்த யுத்தப்பிரபுக்களோடும் ஒப்பிடலாம்.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாயக்க மன்னர்கள் வீழ்ச்சியடைய பாளையக்காரர்கள் தங்களது சுயேச்சைத்தன்மையை வளர்த்துக் கொண்டார்கள். இதற்கும் சற்று முன்பாகவே முகலாயப் பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாயப் பேரரசும் வீழ்ச்சியடைய நவாப்பு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஒளரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.

இலட்சக்கணக்கில் பெருகிவிட்ட படைகளுக்கு வேலையும், கூலியும் கொடுக்க இயலாத நிலையில் வீரர்கள் நாட்டுப்புறங்களைக் கொள்ளையடித்து காலம் தள்ளினர். மறுபுறம் மையஅரசு கேட்கும் அதிக வரிக்காக நிலக்கிழார்கள் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்தனர். விவசாயத்தை மையமாகக் கொண்ட நாட்டுப்புற மக்களுக்கு விளைச்சலில் மிஞ்சியது ஓரளவே. இத்துடன் பஞ்சங்களும் படாதபாடுபடுத்தின. இந்தப் பின்னணியில்தான் முகலாயர்களால் நியமிக்கப்பட்ட ஆற்காட்டு நவாப் பாளையக்காரர்களிடம் அதிகவரி வசூலிக்க ஆரம்பித்தான். எதிர்த்தவர்களை அடக்க கம்பெனியின் படையை வாடகை கொடுத்துப் பயன்படுத்த ஆரம்பித்தான்.

வணிகம் செய்ய வந்த கம்பெனியோ தனது பொருட்களுக்குரிய சந்தை குறுகிய அளவில் இருந்ததால் லாபம் பெறுவதற்கும் தனது வணிக ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கும் உள்நாட்டு மன்னர்களின் ஆட்சி விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. தனக்காகக் கம்பெனி செய்த போர்களுக்காகச் செலுத்தவேண்டிய பணத்தை அடைக்கமுடியாத நவாப் இறுதியில் வரிவசூலிக்கும் உரிமையை நேரடியாகக் கம்பெனிக்கே கொடுக்க ஆரம்பித்தான். 1792ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தென்தமிழகத்தின் ஆட்சியுரிமை நேரடியாகக் கம்பெனிக்குச் சென்றது. இது ஒப்பந்தமல்ல. கம்பெனியின் நிபந்தனையை நவாப் ஏற்றுக் கொண்டான் என்பதே உண்மை.

ஏற்கெனவே பாளையக்காரர்கள் வசூலித்து வந்த வரியும் அதிகமாகத் தான் இருந்தது. எனினும் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிர்ப்பந் தம் இருந்ததால் அவர்கள் சற்று நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கம்பெனி ஆட்சியில் விளைச்சல்இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆயுத பலங்கொண்டு கறாராக வரி வசூலிக்கப் பட்டது. நவாப் மற்றும் கம்பெனியின் இந்தக்கொடுமையினை எதிர்த்து 1750களில் பூலித்தேவன் தலைமையில் சில பாளையங்கள் போரிட்டன.

1772இல் சிவகங்கைச் சீமையின் முத்து வடுகநாதர் கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்டு மரணமடைந்தார். அதன் பின் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்லும் வேலுநாச்சியாரும், மருது சகோதரர் களும் ஹைதரலியின் பாதுகாப்பில் 7 ஆண்டுகள் இருந்துவிட்டு அவரது உதவியுடன் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றி நவாப்பின் படையை வெளியேற்றுகிறார்கள். கட்டபொம்மனது தாத்தாவும், தந்தையும் கூட கட்டபொம்மனைப் போலப் போராடவில்லை என்றாலும் கப்பம் கட்ட இயலாமல் தலைமறைவாயிருந் திருக்கிறார்கள், கப்பம் கட்டும் வரை சில பணயக்கைதிகளையும் அளித்திருக்கிறார்கள். இப்படிப் பாளையக்காரர்கள் மட்டுமல்ல, மக்களும் கம்பெனியின் கொடூர ஆட்சி குறித்து வெறுப்படைய ஆரம்பித்தார்கள். கம்பெனி முன்னேறிய ராணுவத்தைக் வைத்திருந்த போதிலும் அவர்கள் வெல்லப்படமுடியாதவர்கள் அல்ல என்பதை ஹைதரலியும், திப்பு சுல்தானும் தென்னிந்திய மக்களுக்கு நிரூபித்துக் கொண்டிருந்த நேரம்.

இந்தச் சூழ்நிலையில்தான் 1791 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்ட பொம்மன் தனது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது. வரிவசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்றைக்கும் இருக்கும் மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் தோற்றுவாய் இதுதான். அன்று கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது.

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள் துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன. அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது. கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரிவசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது. இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் எனும் ரவுடி கலெக்டராக நியமிக்கப்படுகிறான். வணிகம் செய்து லாபமீட்டுவதைக் காட்டிலும் மக்களை நேரடியாகக் கொள்ளையடிப்பதையே தனது வணிகக் கொள்கையாக வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதற்குப் பொருத்தமான நபர்களையே அதிகாரிகளாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. வரிவசூல் இலக்கை வசூல் செய்து தர அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் சொந்த முறையில் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொள்ளவும் அனுமதித்தது.

தன்னுடைய அடாவடித்தனங்களுக்குப் பணிய மறுத்த கட்டபொம்மன் மீது உடனே படையெடுக்க வேண்டுமென்று ஜாக்சன் மேலிடத்திற்கு கடிதம் எழுதுகின்றான். திப்புவை ஒழிக்க தன் சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டிருந்த கம்பெனி நிர்வாகம், ஜாக்சனின் கோரிக்கையை வேறு வழியின்றி மறுத்தது. கட்டபொம்மனிடம் பேசித் தீர்க்குமாறு அறிவுறுத்தியது. உடனே, ஜாக்சன் அநாகரீகமான மொழியில் கட்டபொம்மனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் வரிபாக்கி நிறைய சேர்ந்து விட்டதென்றும், கட்டபொம்மனது நடவடிக்கைகள் கம்பெனிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதெனவும், அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் தன்னை இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றான்.

இச்சம்பவம் நடைபெற்ற 1798ஆம் ஆண்டு தென்மாவட்டங்கள் மழையின்றிப் பஞ்சத்தால் தவித்த காலம். வடமாவட்டங்களில் இருந்து மக்கள் உணவுத் தானியங்களைக் கொண்டு வருவதற்குக்கூட மாட்டு வண்டிகள் இல்லை. அத்தனையும் கம்பெனியின் மைசூர் படையெடுப்பிற்காகக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. சோற்றுக்கே வழியில்லாமல் தென்மாவட்ட மக்கள் மடிந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தான் கட்டபொம்மனது வரிபாக்கியை ஜாக்சன் ஈவிரக்கமின்றி வசூலிக்க முற்படுகிறான்.
இந்தச் சூழ்நிலை பாளையக்காரர்கள் மத்தியில் கம்பெனி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு வித்திடுகிறது. எனினும் கிளர்ச்சிப் பாளையங்களின் ஒருங்கிணைவு உறுதியடையாதலால், தனியொரு பாளையமாய் வெள்ளையர்களை எதிர்ப்பதில் உள்ள சிக்கலை உணர்ந்த கட்டபொம்மன் ஜாக்சனை தன் படை பரிவாரங்களுடன் சந்திக்க முடிவு செய்கிறார். நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப்பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறான்.

பேசவந்த கட்டபொம்மன் மற்றும் அவரது மந்திரி தானாதிபதி சிவசுப்ரமணிய பிள்ளை இருவரையும் நிற்கவைத்து மூன்று மணிநேரம் விசாரணை செய்கிறான். இறுதியில் கணக்கு பார்த்ததில் வரிபாக்கி அதிகமில்லை என்று தெரியவருகிறது. இருப்பினும் கட்டபொம்மனைக் கைது செய்ய ஜாக்சன் முற்படுகையில் அவர் தன் வீரர்களுடன் ஆங்கிலேய வீரர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி திரும்பும் வழியில் பழிவாங்கும் நடவடிக்கையாக கம்பெனியின் ஊர்களைச் சூறையாடுகிறது கட்டபொம்மனின் படை. தானாதிபதிப் பிள்ளை மட்டும் வெள்ளையர்கள் கையில் சிக்குகிறார். அவரைச் சித்ரவதை செய்து திருச்சி சிறையில் அடைக்கிறார்கள்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சனுக்கு வீரத்துடன் பாடம் கற்பித்த கட்டபொம்மனை அடக்குவதற்கு அப்போதும் கம்பெனி தயங்கியது. காரணம், மைசூர்ப் போர் முடியவில்லை. எனவே, கட்டபொம்மனை சென்னை வந்து விளக்கமளிக்குமாறு கோரியது. அவரது நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் தானாதிபதியை சிறையில் இருந்து விடுவித்ததோடு, அடாவடி ஜாக்சனைப் பதவியிலிருந்தும் நீக்கியது. இதே ஜாக்சன் பின்னாளில் கம்பெனியாலேயே பொறுக்கமுடியாத அளவிற்கு ஊழல் செய்ததனால் வெளியேற்றப்படுகிறான். கட்டபொம்மனும் சென்னை சென்று சுயமரியாதையுடன் விளக்கமளித்துத் திரும்புகிறார்.

கம்பெனியின் ஒரு கலெக்டரையே மாற்றவைத்த கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறான். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது.
1799ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் தென்னிந்திய அளவில் கூட்டணிகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இதில் திண்டுக்கல் சீமைக்கு கோபால நாயக்கரும் இராமநாதபுரம்சிவகங்கைச் சீமைக்கு மருது சகோதரர்களும், நெல்லைச் சீமைக்கு கட்டபொம்மனும் தலைமையேற்கிறார்கள். இவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. சிவகங்கையுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற லூஷிங்டனது எச்சரிக்கையை மீறி மருது சகோதரர்களின் தூதர்களை பழவனேரி எனும் இடத்தில் சந்தித்து அவர்கள் அனுப்பிய 500 வீரர்களுடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி திரும்புகிறார்.

நெல்லைச்சீமையில் இருக்கும் கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை முதலிய பாளையக்காரர்கள் கட்டபொம்மனுடன் அணிசேருகின்றனர். கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்பதாக அவரது தூதர்களிடம் கள்ளர் நாட்டைச்சேர்ந்த பாளையக்காரர்களும் உறுதியளிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்த சிவகிரிப் பாளையம் போர்த் தந்திரரீதியில் முக்கியமான பகுதி. இதன் பாளையக்காரன், கம்பெனியை ஆதரித்த போதிலும் இவனது மகன் கட்டபொம்மனை ஆதரித்தார். எனவே இவரையே பாளையக்காரராக மாற்ற முயற்சிக்கிறார் கட்டபொம்மன்.

மேலும் கம்பெனியின் இராணுவ நடமாட்டத்தை ஒற்றறிய தானாதிபதிப் பிள்ளையின் சகோதரரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். கட்டபொம்மனது இத்தகைய அரசியல் நடவடிக்கைகளால் ஆத்திரமடைகின்றனர் கம்பெனிக்காரர்கள். இனியும் சகிக்கமுடியாது என்ற நிலைக்கு லூஷிங்டன் வருகிறான். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்ட பொம்மனை நோக்கித் திரும்புகின்றன.

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறான் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப்போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார். ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.
இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப்படை பாஞ்சாலங் குறிச்சியை முற்றுகையிடுகிறது. இவ்வளவு சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் என்று கட்டபொம்மன் எதிர்பார்க்கவில்லை. பெருமளவு வீரர்களும், ஊமைத்துரையும், தானாதிபதியும் திருச்செந்தூரில் நடக்கும் ஆவணிமாதத் திருவிழாவுக்குச் சென்றிருந்த நேரமது. இராமலிங்க முதலியார் என்பவனைத் தூது அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையச் சொல்கிறான் பானர்மேன். சரணடைய மறுத்து கோட்டையிலிருந்த 1500 வீரர்களுடன் போரிடுகிறார் கட்ட பொம்மன். தூது செல்லும் சாக்கில் கோட்டையின் பலவீனங்களை முதலியார் வேவு பார்த்துச் சொல்லியிருந்தும் பானர்மென்னால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.

முற்றுகையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஊமைத்துரையும், தானாதிபதிப் பிள்ளையும் சில வீரர்களும் வெள்ளையர்களின் அணிவகுப்பை உடைத்துக்கொண்டு கோட்டைக்குள் நுழைகிறார்கள். போர் தீவிரமடைகிறது. சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் முதலான வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். சில வெள்ளைத் தளபதிகளும் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பல இடங்களிலிருந்து வரும் கம்பெனியின் படைகளுக்காக பானர்மென் காத்திருக்கிறான். இனிமேலும் கோட்டையில் இருப்பது உசிதமல்ல என்று கட்ட பொம்மனும் ஏனையோரும் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிக்கின்றனர்.

தப்பிச் சென்றவர்களை கோலார் பட்டியில் எட்டப்பனின் படை எதிர் கொள்கிறது. அந்தச் சண்டையில் நாகலாபுரத்தின் சௌந்தரபாண்டியனும், தானாதிபதிப் பிள்ளையும் பிடிபடுகின்றனர். இருவரையும் பானர்மென் தூக்கிலிடுகிறான். தானாபதியின் தலையைத் துண்டித்து பாஞ்சாலங்குறிச்சியில் நட்டு வைக்கிறான். தனது மன்னனை விவேகத்துடன் வழிநடத்தி, அவனது துன்பங்களில் பங்கெடுத்த தானாதிபதி முதல் தியாகியானார். மருதிருவருடன் இணைந்து போரைத் தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில் கட்டபொம்மனும் அவரது இளவல்களும் சிவகங்கை நோக்கி விரைகின்றனர்.

இதனை எதிர்பார்த்து சிவகங்கை எல்லையில் காளாப்பூர் காட்டில் பதுங்கியிருந்த துரோகி தொண்டை மானின் படை அனைவரையும் கைது செய்கிறது. வெள்ளையனின் கையால் சாவதைவிட தற்கொலையே மேல் என்று கத்தியை எடுத்த கட்டபொம்மனின் கையை முறுக்கி கட்டி இழுத்துச் செல்கிறது தொண்டைமானின் படை.

கயத்தாறு. தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவு மில்லை. ஒரு தேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு ""ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்'' என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கட்டபொம்மன் அணியிலிருந்த நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணைப் பாளையக்காரர்கள் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தனர். குளத்தூர் பாளையக்காரர் வயதானவர் என்பதாலும், கோலார்பட்டிப் பாளையக்காரர் கண்பார்வையற்ற இளைஞர் என்பதாலும் விடுவிக்கப்பட்டனர். கிளர்ச்சியாளர்களது பாளையங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்து உழுதுவிட்டு ஊரின் பெயரையே கூட மாற்றினார்கள் வெள்ளையர்கள்.

தனது அடிவருடிப் பாளையங்களையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது கோட்டைகளும் இடிக்கப்பட்டன. பாளையக்காரர்கள் அனைவரும் வெறும் ஜமீன்தார்கள் ஆக்கப்பட்டனர். ""படை வைத்துக் கொள்ளக்கூடாது, அலங்காரத்துக்காகக் கூட இடுப்பில் வாள் இருக்கக்கூடாது, குடிமக்கள் கூட ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, மீறினால் மரணதண்டனை'' என்று அறிவித்தான் பானர்மேன்.

இரண்டே ஆண்டுகளில் மரணத்தை வென்றது பாஞ்சாலங்குறிச்சி. பாளையங்கோட்டை சிறையைத் தகர்த்துவிட்டு ஊமைத்துரையும், சிவத்தையாவும் கட்டபொம்மனது கோட்டையை மீண்டும் எழுப்பினார்கள். மருது சகோதரர்களுடன் சேர்ந்து மீண்டும் போர் தொடங்கினார்கள்.
கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரவரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சித்திரைமாதம் அங்கே நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.


இதோ, வெள்ளி முளைக்கும் நேரத்தில் தொடங்குகிறது வெள்ளையத் தேவன் மனைவி வெள்ளையம்மாளின் ஒப்பாரி. அது ஆங்கிலேயர் காலக் கொடுமைகளை எண்ணி அழும் மக்களின் இயலாமை தோற்றுவிக்கும் சோகம்.

காலனியாதிக்க அடக்கு முறைக்கு எதிராகப் போராடி வீழ்ந்த வீரர்களின் காப்பியச் சோகம். இன்னும் சூரியன் உதிக்கவில்லை. அந்தக் கண்ணீரும் நிற்கவில்லை.

பாலன்
புதிய கலாச்சாரம் டிசம்பர் 2006

Tuesday, January 16, 2007

திப்பு சுல்தான்


விடுதலைப் போரின் வீர மரபு



"கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. """இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?'' என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியா வில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர் களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (179092) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்ன னால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. ""30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது'' என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அதுவரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலே யருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத் தையும்இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

""ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதார ணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்'' என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், பிளாசிப் "போரில்' பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, ""இப்போது நாம் "தைரியமாக' திப்புவின் மீது படையெடுக்கலாம்'' என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று,பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத் தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலே யருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல் தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். ""திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்'' என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

பிரான்சுடனான உறவில் ஒருஇளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ""அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது'' என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்தபிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று,"குடிமகன் திப்பு' என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு "மைசூர் அரசின் சார்பாக' உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியா விலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு ""உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்'' என்று செய்தியும் அனுப்புகிறார்.

ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், "பென்சன் ராஜாக்கள்' என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங் களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கண்÷ணாட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்றசூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

""எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்'' என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக் கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

""ஏழைகளையும், விவசாயிகளை யும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்'' என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்குஉரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்கா விலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்÷றா.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்க வில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப் பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியா ளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

""அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5மூ பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகி யிருந்தன் உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட் களுக்கு நிகராக இருந்தன் முதலாளித் துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்'' என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்க ளையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந் ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக் கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றி யிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வ வாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத் தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெ னியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, ""மக்களின் ஆரோக்கியத் தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மை யானதா?'' என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் "சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை' உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

""எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி'' என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். ""எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது'' என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிட மிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமை களாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. ""விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்'' என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிக ளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

""தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்'' என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதி களிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

""ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்'' என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடு கிறான்: ""சிவில் நிர்வாகமாக இருக்கட் டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற் காக இங்கே சலுகை காட்டப்படுவ தில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப் படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.''

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: ""இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்.'' ""தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.'' இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

""நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத் தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.''

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. ""விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்'' என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்விஇருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். "சதக்' என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.

ஒருவேளை திப்பு பிழைத்திருந் தால்? "உயிர் பிழைத்தல்' என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளை யரிடம் தோற்றவுடன் ""ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்'' என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு. ""மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்'' என்று பதறுகிறான் அவருடைய பணியாள். ""முட்டாள்... வாயை மூடு'' என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! ""ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்'' என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:

""நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.''

""மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா''

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.

மருதையன்
புதிய கலாச்சாரம் டிசம்பர் 2006

Saturday, January 06, 2007

நவம்பர் புரட்சி நாள் !!

உழைப்பவனின்
கைரேகைகள்....
தேசத்தின்
முகவரியென்று
நிர்ணயிக்கப்பட்ட நாள் !

ஏழைகள்
உறக்கத்தில் கண்ட
சொர்க்கக் கனவுகள்
விழிப்பில்
நிஐமான நாள் !

சிவப்பு மழையினால்
ருஷ்ய மண்ணில்
பசுமை நிறங்கண்ட
புனித நாள் !

நட்சத்திரங்களின்
ஒளியை மட்டுமே
நம்பிக் கிடந்த
மக்களுக்கு
சூரியனை
அறிமுகப்படுத்திய
சரித்திர நாள் !

ஆணவத்தின்
அரண்மனைக் கதவுகள்
உடைக்கப்பட்ட நாள் !

வியர்வையின்
கண்ணீர்
துடைக்கப்பட்ட நாள் !

அந்தவசந்தத்தின்
கட்டியங் காரன்
லெனின்.

எங்கெங்கு சமத்துவ பூக்களின்
நறுமணம் வீசுகிறதோ....
அந்தப்பூச்செடிகளெல்லாம்
அவனால்
பதியமிடப்பட்டவை .

வெளிச்சங்கள் தீண்டவும்
நிழல்கள்
விழித்துக் கொள்கிற மாதிரி...
அவன்சிலிர்த்தெழுந்த போதுதன்
புரட்சி கண்விழித்தது
அந்த ஒளியைத் தேடித்தான்
எங்கள் பயணமும்.

-- நிர்மலா

(திருச்சி நவம்பர்
புரட்சிக்கலைவிழா கவிதை)