Wednesday, January 24, 2007

மருதிருவர்




""நானும் உழுது விதைக்கும்போது அவன்தானும் உழவுக்கு வந்தானோ?உழவு துறைக்கு வந்தானோ நம்மள்உழவெருதுகள் மேய்த்தானோ?களைமுளைகளெடுத்தானோ? இப்போகஞ்சித் தண்ணிக்குக் கொடுத்தானோ?சனமோ? சாதியோ?கும்பினியான்நம்மள்சம்மந்தக்காரனோ கும்பினியான்மனதுபோல நடப்பானோ? நம்மள்மச்சானோ? தம்பி கிச்சானோ?" கட்டபொம்மு வரலாறு' எனப்படும் கதைப் பாடலில் இருந்து.

1800ஆம் ஆண்டு. திப்பு தோற்கடிக்கப்பட்டு, கட்டபொம்மனும் தூக்கிலேற்றப்பட்டு விட்டார். திருநெல்வேலிச் சீமையில் அனைத்துப் பாளையங்களும் கலைக்கப்பட்டு விட்டன. நவாபை பொம்மையாக வைத்துக் கொண்டு வெள்ளையர்களின் இராணுவம் கொடூரமான அடக்கு முறைகளின் மூலம் நாடாண்ட காலம். நெல்லை வீழ்ந்த போதிலும், தென்னிந்தியாவில் பரவலாக கிளர்ச்சித் தீ முன்னிலும் தீவிரமாகக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. கன்னட மராத்தியப் பகுதியில் தூந்தாஜி வாக், மேற்கு மைசூரில் கிருஷ்ணப்பா நாயக், மலபாரில் கேரளவர்மா, கோவை வட்டாரத்தில் கானி ஜ கான் மற்றும் தீரன் சின்னமலை, திண்டுக்கல்லில் கோபால நாயக்கர், இராமநாதபுரத்தில் மைலப்பன், சிவகங்கையில் சின்ன மருது, பாளைச்சிறையில் இருந்த ஊமைத்துரை மற்றும் சிவத்தையா ஆகிய தலைவர்கள் ஒன்றிணைந்த போராட்டத்தை துவக்கினார்கள். பழனியில் இத்தலைவர்களின் தூதர்கள் கோபால நாயக்கர் தலைமையில் கூடிப் பேசினார்கள். விருப்பாட்சியில் தெற்கத்திச் சீமையின் சுமார் 3000 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வெள்ளையர்களை விரட்டுவதற்குச் சபதம் எடுத்தார்கள். இந்த அறைகூவல் கிராமங்கள் தோறும் பனையோலை மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. தீபகற்பக் கூட்டிணைவு உருவாகியது. மக்கள் திரள் பங்கேற்ற முதல் சுதந்திரப்போர் தொடங்கியது! ஆங்கிலேயர்களின் கண்காணிப்பு அடக்குமுறையை மீறி தமிழகத்திலிருந்து தூதர்கள் பலர் மலபாருக்கும், மைசூருக்கும், மராத்தியத்திற்கும் சென்று வந்தார்கள். உண்மையில் அவை ஒவ்வொன்றும் வீரம் நிறைந்த சாகசப் பயணங்கள்.

காவிரியை மையப்படுத்தி தென்னிந்தியாவில் உருவான இந்தப் புரட்சி, தூந்தாஜி வாக் மூலம் மன்னன் சிந்தியாவையும் இணைத்துக் கொண்டு கங்கைக் கரையையும் தொட விழைந்தது. இவையெதுவும் கற்பனையோ மிகையோ அல்ல. அத்தனையும் ஆங்கிலேய இராணுவக் குறிப்புக்களில் பதிவாகி இருக்கின்றன. தூந்தாஜி வாக்கும், சின்ன மருதுவும் போர்க்காலங்களில் வீரர்களையும், குதிரைப்படையையும் பரிமாறிக் கொள்ள முடிவு செய்கின்றனர். தூந்தாஜி வாக்கின் படையில் கணிசமான அளவு தமிழ் வீரர்கள் இருந்ததாக வெள்ளையர்களே பதிவு செய்திருக்கின்றனர். முதலில் தென்னிந்தியாவின் மையத்திலிருந்த கோயம்புத்தூர் கோட்டையை கைப்பற்றுவதெனவும், துங்கபத்திரைப் போரை முடித்துக் கொண்டு துந்தாஜி வாக் தமிழகத்தின் வட பகுதியில் வெள்ளையரைத் தாக்குவதென்றும், அதன் பிறகு எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் புரட்சியைத் தொடங்குவதெனவும் தீபகற்பக் கூட்டிணைவின் தலைவர்கள் முடிவு செய்கின்றனர். ஆனால் உளவாளிகள் மற்றும் துரோகிகள் மூலம் தகவல் அறிந்த ஆங்கிலேயர்கள் கோவைத் தாக்குதலை முறியடித்து 42 போராளிகளைத் தூக்கிலேற்றுகின்றனர். வடக்கே பல்லாயிரக்கணக்கில் மக்களை அணி திரட்டிப் போராடிய தூந்தாஜி செப் 1800 போரில் கொல்லப்படுகிறார். எனவே தமிழகத்தின் வீரர்கள் பெரிதும் எதிர்பார்த்த தூந்தாஜியின் புகழ் வாய்ந்த குதிரைப்படை தமிழகத்திற்கு வரமுடிய வில்லை. மலபாரில் கேரளவர்மாவின் தளபதிகள் மற்றும் ஏனைய தலைவர்களும் கொல்லப்படுகின்றனர். கிளர்ச்சியாளர்களின் கூட்டணி உடைந்து போனதாக வெள்ளையர்கள் எக்காளமிட்ட நேரம். அந்த எக்காளத்தை அடக்க சிங்கம் போல கர்ச்சித்து எழுந்தார்கள் மருது சகோதரர்கள். 18001801 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த அந்தச் சுதந்திரப் போரில்தான் வெள்ளையர்கள் அதுவரை காணாத உயிரிழப்பைச் சந்தித்தனர். 1857க்கு முந்தைய காலனியாதிக்க வரலாற்றில் இந்த அளவுக்கு வெள்ளை உயிர்கள் வேறெங்கேயும் பலியானதில்லை என்று பதிவு செய்திருக்கிறான் வெள்ளை ராணுவ அதிகாரி ஜேம்ஸ் வெல்ஷ்.




1801 பிப்ரவரி இரண்டாம் நாளன்று, பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து ஊமைத்துரையை விடுதலை செய்யும் சாகசத்திலிருந்து தொடங்குகிறது அந்த வீர வரலாறு. முழுமையான கேட்கும் திறனோ, பேசுந்திறனோ அற்ற, கட்டபொம்மனின் தம்பி குமாரசாமிக்கு மக்கள் அன்புடன் சூட்டிய பெயர் ஊமைத்துரை. ஊமைத்துரையின் வீரத்தையும் போர்த்திறனையும் மக்களைத் திரட்டும் ஆற்றலையும் மக்களிடம் அவர் பெற்றிருந்த பெருமதிப்பையும் கண்டு வெள்ளையர்களே அதிசயித்திருக்கிறார்கள். சுமார் 24 சைகைகள் மூலமே தன் வீரர்களைப் போர்க்களத்தில் வழிநடத்திய ஊமைத்துரை அடிக்கடி வைக்கோலைப் பிரித்து ஊதுவாராம். வெள்ளையர்களையும் அப்படி ஊதவேண்டுமென்பது இதன் பொருள். பாளையங்கோட்டை சிறையிலிருந்த ஊமைத்துரையையும் கட்டபொம்மனது மற்றொரு தம்பியான சிவத்தையாவையும் விடுவிக்க மருது சகோதரர்கள் எடுத்த முயற்சியொன்று ஏற்கெனவே தோல்வியடைந்திருந்தது. விடுவிக்க வந்த சிவகங்கை வீரர்கள் பிடிபட்டுத் தூக்கிலேற்றப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் திட்டமிடப்பட்ட இந்த இரண்டாவது முயற்சியோ வெள்ளையருக்குத் தரப்பட்ட கவித்துவமான பதிலடி. முதல் பாஞ்சாலங்குறிச்சி போரில், எந்த திருச்செந்தூர் திருவிழாவைப் பயன்படுத்திக் கொண்டு வெள்ளையர்கள் முற்றுகையிட்டார்களோ, அதே திருச்செந்தூரின் பக்தர்களாகவும், விறகு சுமப்போராகவும் வெற்றிலை, இலை விற்போராகவும் வேடமிட்ட வீரர்கள் கோட்டையைச் சுற்றி வந்தனர். கோட்டைக்குள் இருப்பவர்கள் இறந்தோருக்கு திதி கொடுக்க வேண்டுமெனச் சொல்லி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று "வியாபாரிகளையும்' உள்ளே அழைக்கின்றனர். பொருள்களின் கட்டுக்குள்ளே இருந்த ஆயுதங்கள் கைமாறுகின்றன. வெள்ளையதிகாரிகளைத் தாக்கிவிட்டுத் தப்புகிறார்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள். ஆங்கிலேயர்களால் தரைமட்டமாக்கப்பட்டு, உழுது, எருக்கு விதைக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆறே நாட்களில் அதிசயம் போல் எழுந்து நின்றது. தலித் மக்கள், மீனவர்கள் என்று எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டி ஊமைத்துரையும், சிவத்தையாவும் மக்களோடு மக்களாய் மண் சுமந்து இரவும் பகலும் அந்தக் கோட்டையைக் கட்டினார்கள். வெள்ளையனுக்கு எதிராக மக்களைத் திரட்டும் கலையில் தம்பிகள் அண்ணனை விஞ்சினார்கள். சிவத்தையா பாஞ்சாலங்குறிச்சியின் அரசனாக அறிவிக்கப்பட்டார். கோட்டை கட்டிமுடிக்கப்பட்ட மறு கணமே வெள்ளையர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்யப்பட்டது. நெல்லைச் சீமையில் வெள்ளையர்களின் நேரடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாளையங்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டன. தூத்துக்குடித் துறைமுகமும் கைப்பற்றப்படுகிறது. அங்கிருந்த வெள்ளை அதிகாரி மேஜர் பானர்ட்டின் மனைவி உயிர்ப்பிச்சை கேட்டதால் யாரையும் கொலை செய்யாமல் மன்னித்து அனுப்புகிறார் ஊமைத்துரை. கிளர்ச்சியாளர்களின் குடிவழியையே அழித்து வந்த வெள்ளையர்களிடம் எக்காலத்திலும் காணக்கிடைக்காத பண்பு இது. கர்னல் மெக்காலே தலைமையில் பாஞ்சாலங்குறிச்சியை அழிக்க வந்த படையை குலசேகர நல்லூரில் மறித்துத் தாக்கி ஓடவைத்தார் ஊமைத்துரை. 50 நாட்கள் கழித்து கர்னல் அக்னியு தலைமையில் பெரும் படையும் பீரங்கிகளும் வந்த பிறகே அந்தக்கோட்டை தன் இறுதி மூச்சை விடநேர்ந்தது. கோட்டைக்குள்ளேயும் வெளியேயும் வேல் கம்பையும் வாளையும், துப்பாக்கியையும் பிடித்தவாறு 1500 பிணங்கள் கிடந்தததாகவும், பிணக்குவியலுக்குள்ளே இருந்தும் பாஞ்சை வீரர்கள் தங்களை வாட்களுடன் தாக்கியதாகவும் வெள்ளையர்கள் அச்சத்துடன் குறிப்பிடுகின்றனர். குற்றுயிராய்த் தப்பிய ஊமைத்துரையை மக்கள் காப்பாற்றுகின்றனர். எஞ்சிய வீரர்களுடன் ஊமைத்துரையும், சிவத்தையாவும் மே 28ஆம் தேதி கமுதிக்கு வந்து சேருகிறார்கள். சின்ன மருதுவும், பெரும் திரளான மக்களும் அவர்களை வரவேற்று சிறுவயலுக்கு அழைத்துச் செல்கின்றனர். மருது ""ஐரோப்பியர்களைக் கண்ட இடத்தில் அழித்து விடுங்கள்'' என்று மக்களுக்கும் ஆங்கில இராணுவத்தின் இந்தியச் சிப்பாய்களுக்கும் பின்னாளில் பகிரங்கமான பிரகடனத்தை வெளியிடும் சின்ன மருது ஊமைத்துரையை வரவேற்கிறார். இதன் விளைவாக வெள்ளையரோடு ஏற்பட இருக்கும் போரையும் மிகுந்த அலட்சியத்துடன் வரவேற்கிறார். மருதிருவரின் இந்த வீரத்திற்கு நீண்ட பாரம்பரியமே இருக்கிறது.
______________________________________________

மருதிருவர் என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள் பரம்பரை ஆட்சியுரிமை பெற்ற பாளையக்காரர்கள் அல்லர். அவர்கள் திறமையாலும், உழைப்பாலும், போராட்டத்தாலும், மக்களின் அன்பினாலும் உருவெடுத்த உண்மையான மக்கள் தலைவர்கள். இராமநாதபுரம், நரிக்குடிக்கு அருகே முக்குளம் எனும் கிராமத்தில் மொக்கபழனியப்பன் சேர்வை எனும் சாதாரணப் படைவீரனுக்கும் பொன்னாத்தாள் எனும் எளிய பெண்மணிக்கும் பிறந்த மருது சகோதரர்களை அவர்களுடைய தந்தை சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். ஆரம்பத்தில் மன்னது குதிரைகளையும், வேட்டை நாய்களையும் பராமரிக்கும் எளியவேலைகளை மருதிருவர் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கட்டாய வரி வசூல் கொள்ளை நடத்தி வந்த ஆடம்பர சுகபோகியான ஆற்காட்டு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களது இராணுவத்தைப் பயன்படுத்துகிறான். கொள்ளையில் தங்கள் பங்கை அதிகரிப்பதற்காக கிழக்கிந்தியக் கம்பெனிக்கான வரி பல இடங்களில் 100 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இப்படித்தான் ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றுகிறது. அடுத்து சிவகங்கை. வெள்ளையன் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் கொல்லப்படுகிறார். சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றில் முதல் களப்பலியாகிறார். அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதிருவரும் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்கின்றனர். விருப்பாட்சியை உள்ளடக்கிய திண்டுக்கல் பகுதி அப்போது ஹைதரலியின் ஆட்சியில் இருந்தது.

அமைச்சர் தாண்டவராயன் சிவகங்கையை மீட்பதற்கு ஹைதரிடம் உதவி கோருகிறார். சிவகங்கை மட்டுமல்ல ஏனைய பாளையங்களையும் விடுதலை செய்வதாக ஹைதரும் உறுதியளிக்கிறார். இதனிடையில் அமைச்சர் மரணமடைய பாளையத்தை மீட்கும் பொறுப்பு மருது சகோதரர்களிடம் வருகின்றது. இந்தப் போராட்டத்தினூடாகத்தான் இவர்கள் காலனியாதிக்க எதிர்ப்பில் உறுதியடைகின்றனர். நவாப்பின் ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்ய சிவகங்கை மக்களைத் திரட்டுகிறார் சின்ன மருது. இராமநாதபுரம், சிவகங்கை மக்கள் கிளர்ச்சி செய்கின்றனர். மருதிருவரின் தலைமை போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறது. இதேகால கட்டத்தில், 1780ஆம் ஆண்டு வெள்ளையர்கள் மீது படையெடுக்கிறார் ஹைதர். ஹைதரின் திண்டுக்கல் படைத்தளபதி சையத் சாகிபு அளித்த சிறு படையின் உதவியுடன் மருதிருவரும் சிவகங்கையை மீட்க போர் தொடுக்கின்றனர். சிவகங்கை மீட்கப்படுகிறது. வெள்ளச்சி அரசியாகவும், பெரியமருது தளபதியாகவும், சின்ன மருது அமைச்சராகவும் பதவியேற்கின்றனர். மருதிருவரின் வீரம் மக்களிடையே புகழாகவும் செல்வாக்காகவும் பரவத் தொடங்குகிறது. ஆத்திரம் கொண்ட நவாப் கம்பெனியின் உதவியுடன் சிவகங்கை மீது படையெடுக்கிறான். 1783இல் கர்னல் புல்லர்டன் தலைமையிலும், 1789இல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் தலைமையிலும் கம்பெனிப் படைகள் சிவகங்கையை ஆக்கிரமிக்க முயன்றன.

இத்தாக்குதல்களின் போது தற்காலிகமாகப் பின்வாங்கிய மருதிருவர் கம்பெனிப் படைகள் அகன்றதும் தமது பாளையத்தை மீண்டும் கைப்பற்றுகின்றனர். இறந்து போன மன்னர் முத்துவடுகநாதன் மகள் வெள்ளச்சியை, அவளது தந்தை வழி உறவினரான வெங்கம் பெரிய உடையத் தேவருக்கு மணம் செய்து கொடுத்து, அவரையே சிவகங்கையின் அரசராகவும் ஆக்குகின்றனர். இக்காலகட்டத்தில் மாவீரன் திப்புவை ஒழிப்பதற்குக் கவனம் செலுத்தி வந்த கம்பெனி சிவகங்கையோடு முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. மருதிருவரிடம் ஒத்துப் போகுமாறு நவாபையும் அறிவுறுத்தியது இப்படி வெள்ளையர்கள் மற்றும் ஆற்காட்டு நவாபின் சூழ்ச்சிகள், படையெடுப்புக்களை முறியடித்து சிவகங்கையைக் காப்பாற்றிய மருதிருவர் 1790 முதல் அமைதியாக ஆட்சி புரிந்தனர். ""சின்னமருது எளியவர்; செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர்; அனைவரிடமும் வேறுபாடின்றி பழகும் இயல்பினர்; அவரது தலையசைப்பையே சட்டமாகக் கருதி அதற்குக் கீழ்ப்படிய மக்கள் தயாராக இருந்தனர்; தனக்கென ஒரு மெய்க்காப்பாளனைக் கூட வைத்துக் கொள்ளாத அவரை 1795 இல் அவரது சிறுவயல் அரண்மனையில் சந்திக்கச் சென்றேன். எளிதில் மக்கள் சென்று வரும் வகையில் அமைந்திருந்தது அவ்வரண்மனை. அவருக்குக் கடவுளின் அருள் கிட்டவேண்டும் என மக்கள் வேண்டியதையும் கேட்டறிந்தேன்... மருதிருவர் நினைத்திருந்தால் வெள்ளையர்களுடன் சமரசமாகப் போயிருக்கலாம். அவர்களுக்கு நாங்கள் எந்தக்குறையும் வைக்கவில்லை, எதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை'' என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் தனது நூலில் குறிப்பிடுகின்றான். 1790களில் வெள்ளையர்களோடு சிவகங்கைப் பாளையத்துக்குத் தீவிரமான முரண்பாடுகள் இல்லையென்ற போதிலும், வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு நாடெங்கும் அதிகரித்து வருவதை மருதிருவரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. கட்டபொம்மனைப் போராடத் தூண்டுகிறார் சின்ன மருது. 500 வீரர்களை அனுப்பி உதவுகிறார். தென் தமிழகத்தில் கூட்டணியை உருவாக்கப் பாடுபடுகிறார்.

இராமநாதபுரம் கூட்டிணைவிற்குத் தலைமையேற்றதோடு, கட்டபொம்மனைத் திருநெல்வேலிக் கூட்டிணைவுக்குத் தலைமை தாங்கவும் வைக்கிறார்கள் மருது சகோதரர்கள். 1801 திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக் அனைவரும் கொல்லப்பட்டு விட்ட காலம். தீபகற்பக் கூட்டிணைவு பெரிதும் தளர்ந்து இருந்த நேரத்தில் மருதிருவர் கிளர்ச்சிக்குத் தலைமையேற்கின்றனர். இராமநாதபுரத்தில் வெள்ளையர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த மைலப்பன் அங்கிருந்து தப்பி மருதிருவரிடம் தஞ்சமடைகிறார். அதே போல பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மே28 அன்று ஊமைத்துரையும் சிவத்தையாவும் தம் வீரர்களுடன் சிவகங்கைக்கு வருகின்றனர். சிவகங்கையை மையமாகக் கொண்டு, தென் தமிழகமெங்கும் வெள்ளையருக்கெதிரான போராட்டத் தீ பரவத்தொடங்குகிறது. அஞ்சி நடுங்கிய துரோகி தொண்டைமான் கவர்னருக்குக் கடிதம் எழுதுகிறான்: ""சின்ன மருது இப்போது சிவத்தையாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டில் கலகத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறான். திருமாவலூர், நத்தம், மேலூர் முதலிய கோட்டைகளைக் கைப்பற்றியுள்ளான்.

ஆங்கில அரசுக்கு உரிமையான இராணுவக் கிடங்குகளைத் தாக்கித் தளவாடங்களைக் கொள்ளையடித்துள்ளான். மேலும் ஒரு கிளர்ச்சிப் படையை இராமநாதபுரத்துக்கு அனுப்பியுள்ளான். எங்கு நோக்கினும் கலகம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.'' தொண்டைமான் இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருந்த போதே சின்ன மருதுவின் மகன் சிவத்ததம்பி தலைமையிலான படை அறந்தாங்கியைக் கைப்பற்றுகிறது. புதுக்கோட்டையும் பறிபோய்விடுமோ என்ற பீதியில் அலறுகிறான் தொண்டைமான். ஆனால் ""துரோகிகளேயானாலும் நம் நாட்டவர்கள்'' என்று புதுக்கோட் டையை விட்டு விட்டு, கம்பெனியின் நேரடி ஆட்சிப் பகுதிகளை மட்டும் தாக்குகிறது கிளர்ச்சிப்படை. தஞ்சை மாவட்டத்தில் நுழைந்து நாகூர் வரை செல்கிறது. வடக்கே சத்தியமங்கலம் முதல் தெற்கே நெல்லை மாவட்டம் களக்காடு வரை, இப்போர் நடைபெற்றது. ஊமைத்துரை, சிவத்தையா தலைமை யிலான படை மதுரை திண்டுக்கல் பகுதியிலும், மைலப்பன், மருதிருவரின் தலைமையிலான படைகள் இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியிலும் போர் புரிந்தனர். வெள்ளையர்களிடமிருந்து பல பகுதிகள், கோட்டைகள் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. கிளர்ச்சியாளர்களின் கொரில்லாப் போர் முறையினால் வெள்ளையர்களின் படைவரிசை பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. "திப்புவையே வென்று விட்டோம்' என்ற ஆணவத்துடன் வந்த கம்பெனிப்படை பல தளபதிகளை இழந்து மூக்கறுபட்டது. அடிபட்டுக் கந்தலாகி, தட்டுத் தடுமாறி இராமநாதபுரம் வந்து சேர்கிறது கம்பெனிப் படை. சிவகங்கைப் பாளையத்திலிருந்து ஒரு நாயின் ஆதரவைக்கூடப் பெறமுடியாது என்பதைப் புரிந்து கொண்ட கர்னல் அக்னியூ, நாயினும் கீழான பிறவிகளை தேடிக் கண்டுபிடிக்க ஒரு அறிக்கை விடுகிறான்.

""சின்ன மருது பரம்பரைப் பாளையக்காரன் அல்ல; சிவகங்கை மன்னனிடம் அடிமையாக வேலைக்குச் சேர்ந்தவன்... எனவே, சிவகங்கைப் பட்டத்துக்கு உரிமை உண்டு என்று நினைப்பவர்கள் எவரும் என்னைச் சந்தித்தால், இந்தக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு அரியணை வழங்கப்படும்.... மாறாக, மருதுவை யாரேனும் ஆதரித்தால் பாஞ்சாலங்குறிச்சி, விருப்பாட்சி போன்ற இடங்களில் மக்களுக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும்'' என்று மிரட்டுகிறான். ""உண்மையிலேயே அரியணைக்கு பாத்தியதை இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, அரியணைக்கு ஆசைப்படுகிறவன் யாராயிருந்தாலும் வா, பதவி தருகிறேன்'' என்கிறான் அக்னியூ. இப்படி ஆசைகாட்டி ஆள்பிடிக்க வேண்டிய அளவுக்கு மருதிருவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததை அக்னியூவின் அறிவிப்பு நிரூபிக்கிறது. ஜூன் 12ம் தேதி இராமநாதபுரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்கு, தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க திருச்சி பிரகடனத்தின் மூலம் உடனே பதிலளிக்கிறார் சின்ன மருது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------
சின்னமருதுவின் திருச்சிப் பிரகடனம்
இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்
ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,
மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்... ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.
அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்...
ஆதலால்..... மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்... இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்... இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது... இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!....
இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்... எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்... இப்படிக்கு, மருது பாண்டியன்,
பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.( 1801 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் வெள்ளையர்களால் கைப்பற்றப் பட்ட இவ்வறிக்கை திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் ஒட்டப் பட்டிருந்தது. இங்கே மொழி பெயர்த்து சுருக்கித் தரப்பட்டுள்ளது).

ஒரு பாளையத்தின் அரசுரிமைக்கு ஆசை காட்டுகிறான் அக்னியூ. மருதுவோ, தென்னிந்திய மக்கள் (ஜம்பு தீபகற்பம்), மற்றும் இந்துஸ்தானத்து மக்கள் (ஜம்புத் தீவு) அனைவரின் விடுதலைக்கு அறைகூவல் விடுகிறார். மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறான் அக்னியூ. ""ஆயிரம் ஆண்டு வாழ்ந்தாலும் சாவு நிச்சயம், போராட வா'' என்று மக்களைத் தட்டி எழுப்புகிறார் மருது.
இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய காலனியாதிக்க எதிர்ப்பு விடுதலைப் போர்கள், தங்களது அரசுரிமையைப் பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தியே இருந்திருக்கிறது. முதன்முறையாக மருதுவின் அறிக்கை "நாட்டு விடுதலை' என்பதை மக்கள் நலனுடன் இணைத்துப் பேசுகிறது. சாதி,மத,மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களனைவரையும் காலனியாதிக்க எதிர்ப்புக்காக ஒன்றிணையக் கோரும் முதல் பிரகடனமும் இதுதான்.
மருது வெளியிட்ட தென்னிந்திய மக்களுக்கான பிரகடனம் அரசியல் மையமான திருச்சிக் கோட்டையிலுள்ள நவாப் அரண்மனையின் வாயிலிலும், இந்தியா முழுவதற்குமான பிரகடனம், நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்லும் சிறீரங்கம் கோயிலின் மதிற்சுவரிலும் ஒட்டப்படுகின்றன. உண்மையில் இந்தப் பிரகடனம் தீபகற்பக் கூட்டிணைவு விடுத்த செயலுக்கான அறைகூவல். ""தீபகற்பக் கூட்டிணைவு ஆங்கிலேயப் பேரரசின் அமைதியையும் பாதுகாப்பையும் அழிக்கும் தன்மையுடையது; பேராபத்தினை விளைவிக்கக் கூடியது'' என்று குறிப்பிடுகிறது லண்டன் தலைமையகத்துக்கு இங்கிருந்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் இராணுவத்தின் ஆவணம்.


உண்மைதான். கிளர்ச்சி துவங்கிய பின் கிழக்குக் கடற்கரையின் எந்தத் துறைமுகத்திலும் கம்பெனியின் கப்பல்கள் சரக்குகளை இறக்க முடியாததால் அவை இலங்கைக்குத் திருப்பி விடப்பட்டன. வரிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட வளமான தஞ்சை மண்ணின் உழவர்களே கிளர்ச்சிப் படையுடன் இணைந்து கொண்டார்கள் எனும்போது, பிற பகுதி உழவர்கள் கிளர்ச்சிக்கு அளித்த ஆதரவைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை. ""கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து கொண்ட உழவர்களிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு மரண தண்டனை'' என்று அறிவிக்கிறான் கும்பகோணம் கலெக்டர். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தானியம் கொண்டு செல்வதைத் தடை செய்த கம்பெனி நிர்வாகம், அதிலும் கொள்ளை இலாபம் அடித்ததால், பஞ்சம் பாதித்த பகுதி மக்களும் திரள் திரளாகக் கிளர்ச்சியில் இணைந்தார்கள். வெறும் நாலரை லட்சம் மக்கட்தொகை கொண்ட சிவகங்கைப் பாளையத்திலிருந்து மட்டும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மருதுவின் படையில் இணைந்திருந்தார்கள். கம்பெனியின் உள்நாட்டுச் சிப்பாய்களும், நவாபின் சிப்பாய்களும் கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்துப் போரிட மறுத்ததால், மேலும் மேலும் வெள்ளைப் படைகளைக் குவிக்க வேண்டிய கட்டாயம் கம்பெனிக்கு ஏற்பட்டது.
அப்போது கர்னல் அக்னியூ மேலிடத்திற்கு எழுதிய கடிதங்களில் தோல்வி ஏற்படுத்திய சலிப்பும், விரக்தியும் தென்படுகின்றன. போரிட்டு வெல்லமுடியாத வெள்ளையர்கள் சூழ்ச்சியில் இறங்கினார்கள். போர் நடந்து கொண்டிருக்கும் போதே வேலுநாச்சியாரின் உறவினரான கௌரி வல்லப உடையத் தேவன் எனும் துரோகி சிவகங்கையின் புதிய அரசராக வெள்ளையர்களால் அறிவிக்கப்படுகின்றான். உணவையும், சாலை போடுவதற்கான பணியாட்களையும், ஏராளமான வீரர்களையும் அனுப்பி உதவுகிறான் தொண்டைமான். மருதிருவரின் போர்த் திட்டங்களை ஒற்றறிந்து துரோகிகள் வெள்ளையர்களுக்குச் சொல்கின்றனர். தொண்டித் துறைமுகம் வழியாக கிளர்ச்சியாளர்களுக்கு உணவும், வெடிமருந்தும் கிடைத்து வந்ததை அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தடுத்து நிறுத்துகின்றனர்.
இப்படி துரோகத்தாலும், சதியாலும் பலமடைந்த வெள்ளையர்கள் இறுதியில் தென்னிந்தியா முழுவதுமிருந்து தம் படைகளை ஒன்று குவித்து காளையார் கோவிலை மூன்று திசைகளிலிருந்து முற்றுகையிடுகின்றனர். சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த இந்த முற்றுகைக்குப் பின் மருதிருவர் மற்றும் சிவகங்கை மக்களின் வீரஞ்செறிந்த போர் முடிவுக்கு வருகிறது. சோழபுரம் காட்டில் சின்னமருதுவும், மதகுபட்டிக்காட்டில் பெரியமருதுவும், வத்தலக்குண்டில் ஊமைத்துரையும் சிவத்தையாவும் கைது செய்யப்பட்டனர்.


துரோகி கௌரி வல்லப உடையத்தேவன் மருதிருவரிடம் சமாதானம் பேசி வெள்ளையர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு கோருகிறான். உற்றார், சுற்றம் அனைவரையும் இழப்போமென்று தெரிந்த நிலையிலும் அந்தச் சிவகங்கைச் சிங்கங்கள் மண்டியிட மறுக்கின்றனர். இறுதியில் மருதிருவர் மற்றும் அவர்களது வாரிசுகள், உறவினர், ஏனைய கிளர்ச்சியாளர்கள் உட்பட சுமார் 500 வீரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் நாள் தூக்கிலிடப்படுகின்றனர். அவர்களில் மருதிருவரின் மகன்கள், பேரன்கள் உள்ளிட்டு ஒருவரையும் வெள்ளயர்கள் விட்டுவைக்கவில்லை. சின்ன மருதுவின் தலையை வெட்டி எடுத்து காளையார் கோவிலில் நட்டுவைத்தன வெள்ளை மிருகங்கள். ஊமைத்துரையும், சிவத்தையாவும் பாஞ்சாலங்குறிச்சி கொண்டு செல்லப்பட்டு அங்கே நவம்பர் மாதம் 16ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.
சின்னமருதுவின் 15 வயது மகன் துரைச்சாமி, சிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையத்தேவர், பாஞ்சாலங்குறிச்சி தளபதி குமாரசாமி நாயக்கர் உள்ளிட்ட 73 கிளர்ச்சியாளர்கள் மலேசியாவில் இருக்கும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு 11.2.1802 அன்று நாடு கடத்தப்பட்டு, அங்கேயே இறந்தும் போயினர். மருதிருவருடைய வீரத்தின் சுவடுகூட மிச்சமிருக்கக் கூடாது என்று கருதிய வெள்ளையர்கள் அவர்களுடைய குடிவழியையே இல்லாதொழித்தனர்.

மக்களோ, மருதிருவரை குடி வழியெதுவும் தேவைப்படாத வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக்கி விட்டனர். மக்களுடைய அன்பின் வெளிப்பாடான இந்த நடுகல் மரபு, கல்லாய் இறுகிப்போன கையறு நிலையின் சாட்சியமாய் நம்முன்னே நிற்கிறது.

எரிமலையாய்க் குமுறி வெடிக்கும் திருச்சி பிரகடனத்தின் சொற்கள் நம் செவிப்பறைகளில் வந்து மோதுகின்றன. சின்ன மருதுவின் ஆணை, வணங்கச் சொல்லவில்லை, வாளேந்தச் சொல்கிறது; பக்தியைக் கோரவில்லை, வீரத்தைக் கோருகிறது. ""ஆதலால் மீசை வைத்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் அனைவரும்...'' உங்களைத்தான் அழைக்கிறார் சின்ன மருது.


வேல்ராசன்

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2006

2 Comments:

Blogger பரஞ்சோதி said...

நண்பரே!

இன்று தான் நான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன், மிக அருமையாக இருக்குது.

உங்கள் கட்டுரைகளை எங்கள் முத்தமிழ் மன்றம் விவாதக்களம் தளத்தில் பதிய அனுமதி கோருகிறேன்.

நாம் வாங்கிய சுதந்திரம் குருதியில் பூத்த மலர், அதை எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையில் ஒரு தலைப்பு தொடங்க இருக்கேன், அதில் உங்க கட்டுரைகள் கொடுக்க் ஆசைப்படுகிறேன்.

உங்க அனுமதி கிடைக்குமா? பதில் சொல்லுங்க. paransothi@gmail.com

அன்புடன்
பரஞ்சோதி

8:38 PM  
Blogger கோபா said...

தோழர் பரஞ்சோதி.......

//உங்கள் கட்டுரைகளை எங்கள் முத்தமிழ் மன்றம் விவாதக்களம் தளத்தில் பதிய அனுமதி கோருகிறேன்.//

பயன்படுத்தி கொள்ளவும்... பதிவுகள் பற்றிய தங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

9:41 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home