Friday, May 11, 2007

பதவி ஆதாயத்துக்காகத் தொடரும் படுகொலைகள்!

ஒரு மாநில முதலமைச்சரின் மகன், பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு வாரிசு, மந்திரி - கலெக்டர் முதல் ஏட்டு எடுபிடி வரை வணங்குமளவுக்கு அதிகார பலம், ஒரு முன்னாள் அமைச்சரையே கொன்றாலும் ஒரு துளி சேதாரமின்றி நடமாட முடியுமென்கிற அரசியல் பலம், மதுரை மாவட்டத்தையே ஆட்டிவைக்கும் குண்டர் செல்வாக்கு, இத்தனைக்கும் மேலாக ஒரு குறுநில மன்னன் போல தொண்டர் படை பரிவாரங்களின் மூலம் தென்மாவட்டங்கள் முழுவதும் பரவியிருக்கும் கட்டப்பஞ்சாயத்து ராஜாங்கம் இவைதான் முக. அழகிரி.

இதற்கும் சற்றும் குறையாத பணபலம், அரசியல் அதிகார பலம், தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள தொண்டர், குண்டர் பலம், திமுக வில் முக்கிய பொறுப்பு, அரசாங்கத்தில் அமைச்சர் அந்தஸ்து இவைதான் முக. ஸ்டாலின்.

தந்தை திமுகவிலும், மத்திய அமைச்சரவையிலும் மிக முக்கியமான் அமைச்சராகப் பதவி வகித்தவர், தனையன் பத்திரிகை, தொலைக்காட்சி என வெகுஜன ஊடகங்களை ஆட்டுவிக்கும் வல்லமை கொண்டவர், திமுகவில் வளர்ந்து வரும் செல்வாக்கு, மத்திய அமைச்சரவையில் முக்கியமான தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நூட்ப துறை அமைச்சர் , இவைதான் தயாநிதி மாறன்.

இந்த மூன்று பேருக்கும் உள்ள ஒற்றுமை திமுக தலைமையைக் கைப்பற்றும் இவர்களது கனவு . இன்றைக்கு கருணாநிதி, மாறன் குடும்பத்திற்கு இந்தியா முழுவதும் - உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, தமிழகத்தின் முதலமைச்சராகும் வாய்ப்பு இதன் மூலம் நிறைவேறும். இந்த கனவுதான் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்களை எதிர்எதிராகத் திருப்பிள்ளது.

இவர்களின் இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இவர்களது ஆதரவாளர்களை வைத்து இவர்களுக்கு , இவர்களே விழா எடுப்பதும், பாராட்டிப் புகழ்வதும் தொடர்ந்து வருகிறது.
அழகிரியின் பிறந்தநாளுக்கு மதுரை நகரையே அல்லகோலப்படுத்தி விளம்பரங்கள் வாழ்த்துக் கட் அவுட்கள், தமுக்கம் மைதானம் முழுவதும் போடப்பட்ட அழகிரியின் ஓவியம், அதை ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிடும் அழகிரி, பிறந்த நாள் விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு கேக் வெட்டுவது என ஆடம்பரத் திருவிழா போல் நடந்த அந்த விழாவில் தெரிந்ததெல்லாம் அழகிரியின் செல்வாக்கு, கருணாநிதியின் சமீபத்திய நெருக்கம் ஆகியன.

இதேபோல ஸ்டாலினும் தன் பங்குக்கு தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களின் மூலம் பல விழாக்கள், வாழ்த்துக்கள் என வாங்கிக் குவித்துத் தனது இமேஜை சரி செய்ய, தயாநிதி மாறனோ அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி கருணாநிதியின் செல்லப்பிள்ளையாக, பொறுப்பான மத்திய அமைச்சராக, மாநில அரசு எடுக்கும் எல்லா திட்டங்களிலும் விழாக்களிலும் தனது தலையீட்டை உறுதி செய்து, சன் டி.வி, தினகரன், ஹிந்து செய்திகளில் தினமும் கலைஞருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு தனது இருப்பை நூதனமான் அதேசமயம் ஆழமாக வெளிப்படுத்தி வருகின்றார்.

இவர்கள் மூவரும் ஒருவர் மற்றொருவரை எப்படி ஏய்ப்பது, என்று எப்போதுமே தருணம் பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில் மாறன் குடும்பத்தினர் நடத்தும் தினகரன் பத்திரிகையில் மே 9- இதழில் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியிருந்தது. இந்தக் கருந்துக்கணிப்பில் முக.ஸ்டாலினுக்கு முதல் இடமும்; மற்றவர்கள் (தயாநிதி மாறன்) இரண்டாம் இடமும், முக.அழகிரிக்கு வெறும் 2% கடைசி இடமும் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டது.

இதைப் பார்த்த மதுரை மாவட்டத்தின் அழகிரி தொண்டர் குண்டர்கள், அழகிரிக்குத் தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்தி, தங்களது பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ளவும், எதிர்காலத்தில் பதவிகளை அடையவும் இதைப் பயன்படுத்த முடிவு செய்து கலாட்டாவில் இறங்கியுள்ளனர்.


பதவி ஆசையால் கண்கள் மறைக்கப்பட்ட இந்த பாசிச கும்பல் நடத்தும் வெறியாட்டங்கள் மிகவும் பயங்கரமானவை. 7 அரசுப் பேருந்துகளைக் கொளுத்தியும், பல கடைகளை அடித்து நொறுக்கியும் தீராத வெறி, கடைசியில் சன்.டி.வி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேரின் உயிரைப் பலி கொண்டு முடிந்திருக்கிறது.




இப்படி ஒரு குடும்பச்சண்டைக்காக , கருணாநிதிக்குப் பிறகு கட்சித் தலைமையையும், முதலமைச்சர் பதவியையும் யார் பிடிப்பது என்ற பதவித் தகராறில் மூன்று பேரைக் கொல்வது வரை இவர்கள் சென்றுள்ளனர்.

ஏழு ஆண்டுக்களுக்கு முன்பு இதே போன்றதொரு வெறியாட்டத்தை, ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளஸ்ன்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை கொடுத்த போது நடத்திய அதிமுகவினர், கொஞ்சம் கூட மனிதத்தன்மையின்றி தர்மபுரியில் ஒரு கல்லுரி பேருந்தை நிறுத்தி, மாணவிகள் அனைவரையும் உள்ளேயே பூட்டி நெருப்பு வைத்துக் கூண்டோடு கொல்ல முயற்ச்சித்தனர், இதில் மூன்று மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்டு கொல்லப்பட்டதும், அந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை கொடுக்கப் பட்டுள்ளதும் அனைவரும் அறிந்ததே.





பதவி ஆதாயத்துக்காக பொதுமக்களை கொலை செய்வதில் எந்தவொரு ஓட்டுகட்சியும் மற்றவர்களுக்குச் சளைத்ததல்ல என்று மாறி மாறி நிரூபித்து வருகின்றனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள்து கட்சி கட்டுக்கோப்பானது என்று பிதற்றினார் கருணாநிதி. இன்றைக்கு நடந்துள்ள இந்த விஷயம் அந்த கட்டுகோப்பின் வெளிப்பாடா?

தி.மு.க வின் உட்கட்சி பூசலுக்கு இதுவரை கட்சிக்குள்ளேயே தீர்வு (த.கிருட்டிணன்) கண்டுவந்தனர். ஒட்டு போய்விடும் என்ற காரணத்துக்காக பொதுமக்கள் மீது கைவைக்க எப்போதும் சற்று தயங்கும் இவர்களுக்கு கடந்த உள்ளாட்சித் தேர்தல்தான் தைரியத்தைக் கொடுத்துள்ளது. ஒட்டுப் போட மக்கள் யாரும் முன்வராவிட்டாலும் கூட அராஜகத்தின் மூலம் கள்ள ஓட்டுப்போட்டும், ஓட்டுப் பெட்டிகளைக் கடத்தியும் ஜெயிக்க முடியும் என்பதை கடந்த இரண்டு முறை நடந்த உள்ளாட்சித் தேர்தல் நிரூபித்தது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கின் கொலையாளிகளை அதிமுக தொடர்ந்து ஆதரிப்பதும், அவர்கள் மீது கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட பிறகும் அவர்களது குடும்பத்திற்கு பல லட்சம் நிதியுதவியும், மேல் முறையீட்டிற்கு மறைமுக ஆதரவையும் ஜெயலலிதா கொடுத்து வருகிறார். இதே நம்பிக்கை தான் இன்றைக்கு மதுரையில் வெறியாட்டம் போட்ட அழகிரியின் ஆட்களுக்கும் ஊக்க மாக இருக்கிறது.

திமுகவும் சரி, அதிமுகவும் சரி ஆட்சியிலிருக்கும் போதும், எதிர்க்கட்சிளாக இருக்கும்போது மக்கள் பிரச்சினைகள் குறித்து எந்தவித கவலையுமின்றி இஷ்டம் போலச் சொத்து சேர்த்தும், தங்களை ஆதரிப்பவர்களைப் பதவியில் அமர்த்தி அவ்ர்களுக்கும் சுரண்ட வழி செய்தும் வருகின்றனர்.
-
கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் கடைக்கண் பார்வை தங்கள் மேல் பட்டாலே தாங்கள் கோடீஸ்வரர்களாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஒவ்வொரு உறுப்பினரிடமும் உள்ளது.

கட்சித் தலைவர்கள் எல்லோரும் தங்களுக்கெனத் தனி கும்பலை வளர்த்துக் கொண்டு வலம் வருகின்றனர். இன்றைக்கு ஒட்டுக்கட்சி அரசியலில் ஈடுபடும் ஒவ்வொரு தொண்டனுக்கும் எதிர்காலத்தில் மக்களைக் கொள்ளையிட்டுப் பெரும் பணம் சேர்க்கும் ஆசை உள்ளது.

இதையெல்லாம் வைத்து , சரியான நேரத்தில் தங்களது தலைவரின் பார்வை தங்கள் மீது படவேண்டும் என்பதற்காக போஸ்டர்கள், பேனர்கள் கட் அவுட்கள் , விழாககள் எனத் திட்டமிட்டு காய் நகர்த்தும் இவர்கள் , இது போன்ற தொரு பொன்னான வாய்ப்பை மற்றவர் எவரும் பயன்படுத்தும் முன்பு தான் முன்னின்று பெயர் வாங்க வேண்டும் என்று முந்திக் கொண்டு செயல்படுகின்றனர்.
தங்களது பதவி ஆசைக்காகவும், தங்களது தலைவர்களின் அரசியல் ஆதாயத்திற்காகவும் எந்த அராஜகத்திலும் ஈடுபட அவர்கள் தயங்குவதில்லை.

திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகளெல்லாம் யோக்கியமா என்றால் அதுதான் இல்லை. 2012 ஆட்சியை பிடிப்பதாகக் கூறிக் கொள்ளும் பாமக முதல் நேற்றைக்கு ஆரம்பிக்கபட்ட விஜயகாந்த் கட்சி வரை பாரபட்சமின்றி எல்லா கட்சிக்கும், எல்லா உறுப்பினருக்கும் குறுகிய காலத்தில் மக்களைக் கொள்ளையடித்துப் பெரும் பணக்காரன் ஆகும் கனவு உள்ளது. இதனை இல்லை என மறுக்கும் தைரியம் எந்த கட்சிக்கும் இல்லை.

விஜயகாந்த் கட்சியில் கூட சமீபத்தில் நடந்த கோஷ்டி மோதலில் ஒருவர் வெட்டப்பட்டு மருத்துவமனையில், இப்படி ஓட்டுமொத்தமாகப் புரையோடிப்போய் மக்களை சுரண்டி கொழுக்கும் எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வரும் நிலையில் இன்றைய ஜனநாயகம் உள்ளது.

ஓட்டுப்பொறுக்கி ஆட்சியமைக்கும் எல்லா கட்சிக்களும் பாரபட்சமின்றி இதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு இடையே நடைபெறும் சண்டையில் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்து மக்கள் முன்பு அம்பலப்பட்டு, அம்மணமாக நிற்கின்றனர். இனி இவர்கள் வந்து நாட்டைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி இருப்பது வீண்.

இனி மக்களுக்கான ஜனநாயகத்தை புரட்சிகர இயக்கங்கள் மூலம் தான் உருவாக்கமுடியும். மக்கள் அனைவரும் பங்குபெறும் ஒரு அரசை ஏற்படுத்தவும் முடியும். அத்தகைய அரசில் தான் "அதிகாரம் அனைத்தும் நமது உழைக்கும் மக்களின் கைகளில்" இருக்கும்.
Related :

Labels: ,

1 Comments:

Blogger அசுரன் said...

//இவர்கள் மூவரும் ஒருவர் மற்றொருவரை எப்படி ஏய்ப்பது, என்று எப்போதுமே தருணம் பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்.//

சரியான பார்வை.

//
ஒட்டுப் போட மக்கள் யாரும் முன்வராவிட்டாலும் கூட அராஜகத்தின் மூலம் கள்ள ஓட்டுப்போட்டும், ஓட்டுப் பெட்டிகளைக் கடத்தியும் ஜெயிக்க முடியும் என்பதை கடந்த இரண்டு முறை நடந்த உள்ளாட்சித் தேர்தல் நிரூபித்தது.
//

'அண்ணே வர்றாரு ' மக இக பாடல் ஒலிப்பேழைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தீடீர் பணக்கார தாதா கழிசடைகளுக்கு திமுக முன்னோடி என்றால் வன்முறை ஓட்டுச்சாவடி திருவிழாவுக்கு ஜெயலலிதா இவர்களுக்கு முன்னோடி. உடனே மற்ற கட்சிகள் எல்லாம் நலல்வை என்றால் அபப்டியல்ல. அவைகளெல்லாம் இவற்றை செய்யும் வாய்ப்புகள் இன்றி வேடிக்கை பார்க்க விதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இந்த் ஓட்டுக் கட்சிகளின் அருகதை சந்தி சிரிக்கீறது.


//
இனி மக்களுக்கான ஜனநாயகத்தை புரட்சிகர இயக்கங்கள் மூலம் தான் உருவாக்கமுடியும். மக்கள் அனைவரும் பங்குபெறும் ஒரு அரசை ஏற்படுத்தவும் முடியும். அத்தகைய அரசில் தான் "அதிகாரம் அனைத்தும் நமது உழைக்கும் மக்களின் கைகளில்" இருக்கும்.//

6:27 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home