Tuesday, July 31, 2007

கல்வி கொடுக்க வக்கில்ல என்னடா கவுர்ன்மென்ட்டு !!

ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவிருக்கிறது. 2007-08 ஆம் வருடத்திற்கான கல்வியாண்டு தொடங்கிவிட்டது. பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டது. பொறியியல் படிப்புக்கான அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் "இன்றைய கல்வி" பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று முயற்சிக்கிறேன்.

கல்வி என்பது மனிதனைப் பண்படுத்துவது என்பார்கள். ஒன்றுமே தெரியாத வெற்றுக் களிமண்ணாய் பிறக்கும் மனிதனுக்கு இந்த உலகத்தையே அறிமுகப்படுத்தி அதன் தோற்றம் முதல் இன்றைக்கு வரை நிகழந்த மாற்றங்களை, அறிவியல் கண்டுபிடிப்புகளை கலை இலக்கியங்களைப் போதித்து அவனை புடம் போட்டு வார்த்து எடுப்பதோடு, இந்த சமூகத்தில் அவன் யார்? அவனது பங்கு என்ன? என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டிய முக்கிய கடமை கல்விக்கிருக்கிறது.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் நாம் கல்வியை அப்படிப் பார்ப்பதில்லை. வேலைக்கு போய்ச் சம்பாதிக்க ஒரு தகுதியாக மட்டுமே கல்வி உள்ளது. எந்தத் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று கணக்கு பார்ப்பது போல , எந்தப் படிப்பில் முதலீடுபோட்டால் பையன் அதிகமாகச் சம்பாதிப்பான் என்று கணக்குப் போடுகிறார்கள் . அவர்களைச் சொல்லி குற்றமில்லை.
இன்றைக்கு எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் இந்த படிப்புப்படித்தால் இவ்வளவு சம்பளத்தில் வேலை, இந்தக் கல்லூரியில் படித்தால் படிப்பை முடிக்கும் முன்பே வேலை என்று பக்கத்திற்குப் பக்கம் எழுதித் தள்ளுகிறார்கள். டி.வி-யில் எல்லா சேனல்களிலும் கல்லூரிகளைப் படம்பிடித்து சுண்டி இழுக்கும் விளம்பரங்களை ஒளிபரப்புகிறார்கள். இதையெல்லாம் பார்த்து நமது பெற்றோரும் இந்தக் கல்லூரிகளின் வலையில் தங்களது பணத்துடன் போய் விழுகிறார்கள்.

இன்றைக்கு இருக்கும் நடுத்தர இளைஞர்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது ஒரு இஞ்சினியராக வேண்டும் என்றுதான் கனவு காண்கிறார்கள். "கனவு காணுங்கள்" என்று உற்சாகமூட்டும் முதன் குடிமகன் இருந்தபோது படித்தவர்களாயிற்றே, அவர்கள் வேறு என்ன செய்வார்கள். ஆனால் அவர்கள் கனவை நினைவாக்க அவர்களது பெற்றோர் மென்மேலும் கடன் பட வேண்டியிருப்பதை அவர்கள் உணரவில்லை. பள்ளிப்படிப்பிற்கே தங்களது சேமிப்பு முழுவதையும் கறைத்துவிட்டு , கடனாளியாக நிற்கும் நடுத்தர வர்க்கத்து பெற்றோர் கல்லூரிப் படிப்பிற்காக மகனையும் கடனாளியாக்க வேண்டியுள்ளது. நடுத்தர வர்க்கத்திற்காவது வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஆனால் ஏழை எளிய மக்களுக்கு அதுவும் கிடையாது.

பொறியியல் படிப்பு படிக்கக் குறைந்தது 2 லட்சம் முதல் 8 லட்சம் வரை செலவாகிறது. 10 லட்சம் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஒரு டாக்டராகலாம். இப்படி லட்சங்களில்தான் இன்றைக்கு உயர்கல்வி உள்ளது. எந்தக் கல்லூரியை எடுத்துக் கொண்டாலும் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட இருமடங்கு வசூலிக்கின்றனர்.இவர்களை யாரும் தட்டிக் கேட்பதோ தண்டிப்பதோ கிடையாது.

தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 4.5 லட்சம் பேர் பள்ளிப் படிப்பை முடித்து வருகின்றார்கள். இவர்களுக்கென தரமான கல்வியை வழங்க இருக்கும் அரசு கல்லூரிகள் மொத்தம் 67 (மருத்துவம், பொறியியல், கலை கல்லூரிகள் எல்லாம்) இவற்றில் வெறும் 25 ஆயிரம் பேர் மட்டுமே படிக்க இயலும். மீதமுள்ள 4.25 லட்சம் பேருக்கு கல்வி வழங்கும் பொறுப்பை அரசு தட்டிக்கழித்துவிட்டது. அதை தங்களது தலைமேல் சுமக்கப் பல கல்வித்தந்தைகள் காத்திருகின்றனர்.
தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் இந்தக் கல்வித்தந்தைகள் முளைத்து கொண்டே இருக்கின்றனர். இவர்களைச் சற்று அருகில் சென்று பார்த்தோமானால் எல்லோரும் சட்டவிரோத , தேசவிரோத கூட்டம் எனபது நன்றாகத் தெரியும்.

ஜேப்பியார், உடையார் போன்ற சாராய முதலைகள்; தம்பித்துரை, ஏ.சி.சண்முகம் போன்ற அரசியல் பெருச்சாளிகள்; விஜயகாந்த், ரஜினி போன்ற கழிசடை கதாநாயகர்கள்; மலையாளத்து அம்மா முதல் மேல் மருவத்து அம்மா வரையிலான ஆன்மிக கொள்ளையர்கள்; இன்னும் சிலைதிருடர்கள், கள்ளநோட்டு களவாணிகள், விபச்சார புரோக்கர்கள், கடத்தல் மன்னர்கள்; முன்னாள்-இந்நாள் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் என ஒரு பெரிய தேசதுரோகக் கூட்டமே கல்வித்தந்தைப் பட்டத்தைச் சூட்டிக்கொண்டு திரிகிறது. இவர்கள் அனைவரும் கருப்புப்பணத்தைப் புரட்டுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர்.
இவர்களை நம்பித்தான் நமது கல்வியை ஒப்படைத்துள்ளது இந்த அரசு. லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டு; வசூலிக்க வேண்டிய வரிப்பணத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு வரிச்சலுகையாக அளித்துவிட்டு; செலவுக்கு பணமில்லையென்று சாராயம் காய்ச்சி விற்கும் கேடுகெட்ட இந்த அரசு, தன்னோடு சாராயம் காய்ச்சும் கூட்டாளியிடம் மக்களின் கல்வியை ஒப்படைத்திருப்பதில் அதிசியமில்லைதான். ஆனாலும் இவர்கள் ஏதோ கல்வியைத் தூக்கி நிறுத்திவிட்டதைப் போல காட்டிக்கொள்வதைதான் சகிக்கவில்லை.

இந்தக் கல்விக் கொள்ளையர்கள் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட அதிகமாக வசூலிக்கும் போது, விதிமுறைகளை மீறி கல்லுரிகளை நடத்தும் போதும் , பாதிக்கப்படும் மாணவர்கள் தட்டிக்கேட்டால் அவர்களை ரவுடிகளைக் கொண்டு தாக்கும்போதும், இந்த அரசாங்கம் கண்டுகொள்வதே கிடையாது. ஏனென்றால் இன்றைக்கு ஆளும் வர்க்கமாய் உள்ள ஒவ்வொருவனுக்கும் ஒரு கல்லூரி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள எல்லாத் தனியார் கல்லூரிகளும் ஏதாவதொரு வடிவத்தில் இந்த ஆளும் வர்க்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த கொள்ளையத் தடுப்பதற்கு பதில் அதனை வளரச் செய்கின்றனர்.

1950 ல் இந்தியா குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டபோது 10 வருடங்களில் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி கொடுபோம் என்று அறிவித்தார்கள். இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு கிட்டே ஆகியும் இன்னமும் உலகின் எழுத்தறிவில்லாதவர்களில் 50 % பேர் இந்தியர்கள் என்று கூறுவது வெட்கக் கேடானது. இன்றைக்கு இந்தியாவில் 6-14 வயதுக்குக் கீழே உள்ள 20 கோடிக் குழந்தைகளில் கிட்டத்தட்ட 3 கோடிப்பேர் பள்ளிக்கு சென்றதில்லை. 6 1/2 கோடிப்பேர் 5-ம் வகுப்புடனும். 5 கோடிப்பேர் 7-ம் வகுப்புடனும் பள்ளியை விட்டு நின்றுவிடுகின்றனர்.

காங்கிரஸ், திமுக, அதிமுக, பா.ஜ.க, கம்யூனிஸ்டு ,பாமக, மதிமுக, தேமுதிக என மாற்றி மாற்றி யாருக்கு ஓட்டுப்போட்டாலும் இந்த நிலைமை மாறவில்லை, மாறாது. நம்மை விடச் சிறிய நாடான கியுபாவில் 10 ஆண்டுகளில் கல்லாமையை முற்றிலுமாக ஒழித்துவிட்டார்கள். நம்மால் முடியாதது அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது. அதற்குத் தேவை நாட்டுப்பற்றும்; மக்களின் மேல் உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு அரசு.

துப்பாக்கியை எடுத்துச் சென்று பாகிஸ்தானியரைச் சுடுவதை மட்டுமே நாட்டுப்பற்றாக போதிக்கும் இந்த அரசிடம் மக்களின் நலனை எதிர்பார்ப்பது முட்டாள்தனம், சொந்த லாபத்திற்காக நாட்டையே கூட்டிக் கொடுக்கும் அரசியல் வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்ப்பது மடத்தனம்.
அரசின் இந்தக் கல்விக் கொள்ளையை மட்டுமல்ல, இன்றைக்கு சமுதாயத்தில் இவர்கள் உருவாக்கிவரும் எல்லா பிரச்சினைக்கும் மூலகாரணமான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதாரக் கொள்கையினை எதிர்த்துப் போராடுவது மட்டுமே புத்திசாலித்தனம்.

Labels: , ,

2 Comments:

Anonymous Anonymous said...

SSN Engg College is run by HCL Company ; no donations and admission is stricly on merit and they require stringent standards.
And many poor students are provided scholarships.

So don't generalise and term all educationists as crooks. The govt does not have the resource or the will to develop more collages. until 1984, there were only govt collages and Annamalai Unty. now there are 260 colleges and more.
Let the best and cheapest college win while the bad ones fail. that is the principle of market economics.

Private hospitals like Apollo charge heftily for operations, while govt hospitals offer free service. private collages are exactly equal to private hospitals.
and should be treated like wise.

if govt and leftists are against private collages, then the permission could have been denied in the first place. (like until 1984). if there are 5000 pvt collages with no govt control over fees or admission criteria, then the best and cheap ones will survive while the bad and crooked will fail eventually.

there are millions of students who benefited from studiying in pvt colleges. (i am one). stop castigating them or capture power and take over all those collages and try to run them efficently.

I know for a fact that Anna University and GCTS are dens of corruption and millions are siphoned off every year by the staff and ministers

7:28 PM  
Blogger சின்னப் பையன் said...

கட்டுரை மிக நன்றாக உள்ளது...
அரசு பலப்பல கல்லூரிகளை திறக்கவேண்டியதில்லை. மாறாக, தனியார் கல்லூரிகளை - அவர்கள் வாங்கும் கட்டணங்களை கட்டுப்படுத்தி, தரத்தை மேம்படுத்தி - அரசின் நெறிமுறைகளை பின்பற்ற வைத்தால் போதும்.
ஆனால், அதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கே நேரம்?... தினமும் ஒரு எஸ்டேட் வாங்கிப் போட்டோமா?.. அல்லது வாரிசை அடுத்த பதவிக்கு தயார் படுத்த தேவையான விஷயத்தை செய்தோமா..

9:16 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home