Saturday, June 16, 2007

கார்பரேட் கட்சிகளும் மக்கள் நலனும்


இன்று இந்தியாவில் உள்ள அனைத்து ஒட்டுக் கட்சிகளும் நிறுவனமயமாக்கப்பட்டு விட்டன. அவற்றில் எது ஆட்சிக்கு வந்தாலும் இன்றைய உலக மக்கள் விரோதிகளான உலக வங்கி, உலக வர்ததக கழகத்தின் கைப்பாவையாக மட்டுமே செயற்படுகின்றன.

இந்தகட்சி கம்பெனிகளுக்குள் எந்த விதமான கொள்கை வேறுபாடும் இல்லை. எல்லோரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை காட்டிககொடுப்பதும், அதன் மூலம் தன்னையும் தன்னை ஆதர்¢க்கும் தரகு முதலாளிகளையும் வளப்படுத்திக்கொள்கின்றன. ஆனால் தாங்கள் ஆட்சியில் இல்லாத போதும், தனது இருப்புக்கு மக்களால் பங்கம் நேர்கின்ற போதும் இவற்றை எதிர்ப்பது போலக் காட்டுகின்றன. இந்த ஏமாற்று வேலையையே தனது் கொள்கைகளாக வைத்து இருக்கின்றன. ஆனால் மிகவும் சிரமப்பட்டு தங்களுக்குள் வேறுபாடு இருப்பது போல நடிக்கின்றன. மாறி மாறி இவர்களேதான் கூட்டணியாக ஆட்சிக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள், ஆனால் நாடு ஜெட் வேகத்தில் விற்கபடுவதில் எந்த தடங்கலும் இல்லை.

இந்த நாட்டு மக்களுக்கு உணவு மானியத்தை, வேளாண் மானியத்தை படிப்படியாக குறைத்து நிறுத்தவும் முயற்சி செய்கிறார்கள். தாய் மண்ணை விட்டுத்தர முடியாது என்று முஸ்லீம்களை கொல்கிறார்கள். ஆனால் விவசாயத்தை விட்டு - நிலத்தை விட்டு மக்களை வெளியேற்றுகிறார்கள். அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பகுதி பகுதியாக தனி சாம்ராஜியம் (sez), வரிச்சலுகை, வசதிகள் என செய்து கொடுக்கிறார்கள்..

இப்படி நாட்டை தொடர்ந்து காட்டி கொடுத்து வருவதை (இதை முன்னேற்றம் என்று வேறு கூறுகிறார்கள்) மக்கள் எதிர்க்கும் முன் இவனே 2 ரூபாய் அரசி, இலவச கலர் டி..வி., ஒரு சிலருக்கு நிலம் என கொடுத்து, தான் அடிக்கும் கொள்ளையை மறைத்துவிடுகிறார்கள். இவர்களுடைய இந்தக் கொள்ளையினால் தான் நமது நாட்டின் நிலமை இப்படி இருக்கிறது என்பதை இதன் மூலம் மறைக்க முயல்கிறார்கள்.

மக்கள் முன்னேற்றதுக்கு மிகவும் முக்கியமான கல்வி, மருத்துவ வசதி, போன்ற அத்தியாவசியத் துறைகளை தனியாரிடம் கொடுத்து அதில் அவர்கள் கோடி கோடியாகச் சம்பாரிக்க வசதி செய்து கொடுத்து, காசிருந்தால்தான் கல்வி மருத்துவம் எல்லாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். மக்களை குடிக்கு அடிமைப்படுத்தி மந்தைகளாக மாற்றி போராடும் குணத்தை மழுங்கடிப்பதற்க்காக அரசே மதுக்கடைகளை (டாஸ்மார்க்) நடத்தும் அவலம் தமிழகத்தில் இருக்கிறது.

இது தமிழ்நாட்டில் மட்டும் நிகழ்ந்ததல்ல, திராவிட கட்சிகள் மட்டும் இதனைச் செய்யவில்லை, இந்தியா முழுவதும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும் , கட்சிப் பாகுபாடின்றி 50 வருடங்களுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்து இதையேதான் செய்கின்றன.
இந்த கார்ப்ரெட் கட்சிகள் சிலவற்றின் செயல்கள், பேச்சுக்கள், யோக்கியதைகளை பார்க்கும்போது இவர்கள் எப்படியெல்லம் மக்களை ஏமாளிகளாக நினைத்துக்கொண்டு வேலைசெய்கிறார்கள் என்பது புர்¢கிறது.....

காங்கிரசின் எடுப்பார் கைப்பிள்ளை மன்மோகன் சிங் நாடு முன்னேறாமைக்குக் கூறும் காரணம்.." விவசாயத் துறை 10 ஆண்டுகளாக படுபாதளத்துக்கு போய்விட்டது. இது நாட்டு வளர்ச்சிக்கு நல்லதல்ல. வறுமை ஒழிய வேண்டுமானால் விவசாயத்துறை வளர்ச்சி அவசியம்" என்கிறார்

இவர் கூறுவதைப் பார்த்தால் ஏதோ விவசாயத்துறை தானாக வண்டி பிடித்து பாதாளத்துக்கு போனது போலவும், இவருக்கு அதுபற்றி எதுவும் தெறியாது என்பதுபோலவும் இருக்கிறது. ஒரு பிரதமர் பேசும் பேச்சா இது. விவசாயிகள் அனைவரும் தற்கொலைக்குத் தள்ளப்படும் இந்த நிலைமைக்கு யார் காரணம், என்ன காரணம், இதனை மாற்ற என்ன செய்யலாம், என்ன செய்யப் போகிறீர்கள், இதுவரை அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, அவை ஏன் தோல்வியுற்றன, சற்று யோசித்துப் பார்த்தால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் பல ஆயிரம் விவசாயிகளைக் கொன்று, நாட்டின் முன்னேற்றத்தை அதல பாதாலத்திற்க்குத் தள்ளியது இதே மன்மோகன் சிங் தான் என்ற இவர்களது நிஜமுகம் நமக்குத் தெறியும்.

காங்கிரஸை விட்டால் அடுத்து RSS, BJP, ராமர் பாலம்(?), பால் குடிக்கும் பிள்ளையார் சதுர்த்தி, என நவீன விஞ்ஞானம்(!) பேசி மதவெறி ஆட்சி செய்ய இவர்கள் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் யோக்கியதை இவர்களது சுதேசி இயக்கத்திலேயே தெறிந்துவிட்டது, "அன்னிய பொருட்களை வாங்காதீர்கள், உள்நாட்டு சுதேசிப் பொருட்களை மட்டுமே வாங்குகள்" (அதுவும் கடைகளில் 'ஓம்' ஸ்டிக்கர் இருக்கிறதா எனப் பார்த்து வாங்குங்கள்...) என தேசப்பற்று மிக்க (!) பிரச்சாரம் செய்துகொண்டே, சத்தமின்றி தேயிலை உட்பட 120 பொருட்களை காட் ஒப்பந்தத்தின் படி வரியே இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதித்து உள்ளூர் விவசாயிகளின் வயிற்றில் அடித்தார்கள். (ஒரு வேளை கிளிண்டன் கடையில் 'ஓம்' ஸ்டிக்கர் ஒட்டிருந்துச்சோ)
அனுகுண்டு வெடிப்பு, கார்கில் யுத்தம் என்று நாட்டுபற்றை(!) எல்லா இந்தியர் உடலிலும் ஸிரஞ்சு போட்டு ஏற்றிவிட்டு அவன் அந்த மயக்கத்தில் இருக்கும் போதே நம்நாட்டு வளங்களை (தண்ணீர்,மனிதவளம் உட்பட அனைத்தையும்) பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள்

அடுத்து கம்யூனிஸ்டுகள் எனச் சொல்லிக் கொள்ளும் CPM கட்சிகாரங்க, இவர்கள் வேலை என்னவென்றால், ஆட்சியிலிருப்பவர்கள் போடுற ஒப்பந்தம் ஏதாவது வெளிச்சத்துக்கு வந்து அரசு அம்மணமா நிற்க்கும் போது, கிருஷ்ண பரமாத்மா கணக்காக களத்தில் இறங்கி அவர்களைக் காப்பாற்றுவது தான். அட அமெரிக்கன எதிர்க்கிறேங்கிறீங்க அப்புறம் அவனுக்கு அடிவருடியான காங்கிரஸ் ஆதரிக்கிறீங்க, கேட்டா பி.ஜே.பிக் கெதிரான சக்தியா காங்கிரஸ் இருக்குங்கிறீங்க. நாட்ட விக்கிறதுல பி.ஜே.பி க்கும் காங்கிரஸிக்கும் வித்தியாசமே இல்லாதப்பே நீங்க பி.ஜே.பியை ஆதரிச்சாலும் ஒன்னுதான் காங்கிரஸ ஆதரிச்சாலும் ஒன்னுதானே. எதுக்குக் குழப்பம் அமெரிக்காவையே ஆதரிச்சுட்டுப் போங்களென். உங்களுக்குத்தான் எவ்வளவு பெரிய மனசு, இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டுக்களைக் கொன்று குவித்த சுகர்த்தோவின் சலீம் கம்பெனியை ஆதரித்து, நந்திகிராமத்தில் நம் நாட்டு மக்களைக் கொன்றவர்கள்தானே நீங்கள்.

சி.பி.எம் தலைவர் பிரகாஷ் கரத் சமீபத்திய பேட்டியில் "சிறு வணிகத்தில் பெரிய நிறுவனங்களை வருவதை நிறுத்த வேண்டும் என நாஙகள் விரும்புகிறோம்" என்றார்.

லட்சக்கணக்கான சிறுவனிக மக்கள் அழிந்து வருகின்றனர், அடுத்தடுத்து இன்னும் பலர் பாதிக்க பட போகிறார்கள். இதற்கு என்ன பதில் என்றால் , பெரிய நிறுவனங்கள் வரக் கூடாது என்பதை விரும்புறோம், இது ஒரு பதிலா? மக்கள் சாகிறார்கள் என்றால், சாககூடாது என்று விரும்புகிறோம் என்கிறார்கள

சரி தேசியக்கட்சிகள்தான் இப்படி நம்ம மாநிலக் கட்சிகளில் யாராவது உண்மையாக இருக்கிறார்களா என்றால்,

முதலில் வருவது தி.மு.க குடும்பம், இதன் தலைவர் மிகப் பெரிய ராஜதந்திரி கருணாநிதி, நாட்டை விற்ப்பதில் இவரை மிஞ்ச ஆளே இல்ல. தினமும் காலை தொண்டர்களைப் பார்க்கிறாரோ இல்லையோ இரண்டு மூனு வெள்ளைக்காரர்களைப் பார்த்தே ஆகவேண்டும். இவருக்கு வெள்ளைக்காரங்க கூட போட்டோவுக்குப் போஸ் கொடுப்பதில் அப்படி ஒரு ஆசை, தினமும் இரண்டு மூனு போட்டோக்களாவது பேப்பரில் வந்துவிடனும்.
ஒரு நாள் இந்த வெள்ளைக்காரனுங்களுக்கே பயமாய் போய் தலைவரே இப்படி தினப்படிக்கு இந்த ஊரு உனக்கு அந்த ஊரு உனக்குன்னு எல்லா ஊரையும் எழுதி எழுதித் தறீங்களே உங்க நாட்டு மக்கள் ஏதாச்சும் குண்டக்க மண்டக்க செஞ்சு எங்கள ஏறக்கட்டிட மாட்டாங்களா என்று கேட்டாங்களாம். அதுக்கு நம்ம தலைவரய்யா " இது ஒரு பெரிய விஷயமே இல்ல, நாடு முன்னேறுது அதான் வெள்ளைக்காரன் வர்றான்னு சொன்னா ஜனங்க நம்பிடப் போறாங்க, அப்படியே எதிர்க்கிற மாதிரி தெரிஞ்சா, கலர் டி.வி, கக்கூஸ்ன்னு ( உங்க உலக வங்கிட்ட கடன வாங்கி) எதையாவது குடுத்து வாய அடைச்சரலாம்" என்று சொன்னாரு.

கட்சிக்கு அழகிரி, ஆட்சிக்கு ஸ்டாலின், மத்தியில் கனிமொழி என்று தனது வாரிசுகளுக்குப் பட்டம் சூட்டக் காத்திருக்கும் தமிழ்நாட்டு மகாராஜா இவர்தான். மக்களை மழுங்கடிப்பதில், முதுகில் குத்துவதில் கருணாநிதிக்கு நிகர் அவரேதான்.

அடுத்தது, என்னதான் கருணாநிதி அளவுக்கு ராஜதந்திரியா இல்லாவிட்டாலும், அமெரிக்க ஜனாதிபதியா வர அளவுக்குத் திறமையிருந்தும் ( அதுக்கு ஒரு வெங்காயமும் தேவையில்லை) தமிழ்நாட்டுக்கு சேவை செய்யவே இருப்பவர் ஜெயலலிதா. இந்தம்மா நாட்டைக் கொள்ளையடிச்ச கதையப் பத்தி பேசவே பத்து நாளாகும். இடைஇடையில் தன்னோட பார்பன புத்தியக்காட்ட " மதம்மாற்றத் தடை" , "கிடாவெட்டத் தடை", என்று தன்னிஷ்டப்படி நாட்டை ஆட்டிவைப்பது இவருடைய தனித்திறமை. எம்.ஜி.ஆரின் கருப்புப் பணத்தில் உருவான அதிமுக என்ற டிரஸ்டின் நிரந்திர காவல் தெய்வம். கருணாநிதியை விட்டால் தமிழ்நாட்டைக் காப்பாத்த (கூட்டிக் கொடுக்க) இவங்க தான் அடுத்த இடத்துல நிக்கிறது.

அடுத்து நம்ம மருத்துவர் ஐயா, இவருக்கு அடிக்கடி ஞாபக மறதி வந்துவிடும். மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பக்கம் பக்கமா அறிக்கை விட்டுடிவாரு. அதுக்கப்பறம் உக்கார்ந்து யோசித்தால் எல்லா பிரிச்சனைக்கும் காரணம் அவர் அங்கம் வகிக்கும் ஆட்சிதான் என்று புரிந்துவிடும். நம்ம மகன் தேர்தல்லே நிக்காமலே மத்தியமைச்சரா இருக்க உதவி செஞ்சவங்களப் பகைக்க முடியுமான்னு அமைதியாயிடுவாரு. அடிக்கடி புகையிலை, மதுவிலக்கு, ரிலையன்ஸ் என்று ஏதாவொரு பிரச்சினை அவரைத் தொடும் போது ஒரு அறிக்கை விட்டுபுட்டு தைலாபுரம் தோட்டத்துல போய் அமைதியா ரெஸ்ட் எடுத்துக்கொள்வார். தி.மு.க, அதிமுக இரண்டு கட்சிக்கும் நல்ல பிள்ளை. யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்தியில் இரண்டு மந்திரி பதவி. கட்சியும் வளருது இவரது சொத்து மதிப்பும் வளருது.

கடைசியாக தமிழகத்தின் அடுத்த முதல்வர், விஜயகாந்த், கறுப்பு எம்.ஜி.ஆர், கேப்டன், புரட்சிக் கலைஞர் என்றெல்லாம் ரசிகத் தொண்டர்களெல்லாம், கொண்டாடும் இவர் கட்சி ஆரம்பித்ததே கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவும், கல்யாண மண்டபத்தைக் காப்பாற்றவும்தான். பிந்தையதத்தான் காப்பாற்ற முடியவில்லை முந்தியதையாவது காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். உங்க கட்சிக் கொள்கை என்ன என்று கேட்டால், அது உங்களுக்கு எதற்க்கு, எனக்கு ஓட்டுபோட்டால் மற்ற எல்லோரையும் விட சிறப்பாக ஆட்சி செய்வேன், வேண்டுமென்றால் என்னை முதலமைச்சராக்குங்கள் அப்புறமாக நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள், என்று திமிராகப் பேசும் பாசிச எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸ் காப்பி தான் இந்த விஜயகாந்த்.

மற்றப்படிக்கு சில அரசியல் அசிங்கங்கள், ஜால்ரா கோஷ்டிகளைப் பற்றி பதிவின் நீளம் கருதி எழுத முடிய வில்லை.என்றாலும் இவர்கள் அடிக்கடி கூட்டணி மாறி திமுகவிக்கும் அதிமுகவுக்கும் 6 வித்தியாசம் கண்டுபிடிப்பது இருக்கே, மகா கேவலம்.

இவர்கள் அனைவருமே, ஒரு கும்பல் நாட்டை விற்பதால் ஏற்படும் விளைவினை வைத்து இன்னொடு கும்பல் ஆட்சியை கைப்பற்றி அதே கொள்கையினை நடைமுறைப்படுத்துவது என்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். மக்கள் தினமும் உலகமயத்தினால், இந்து மத வெறியினால் கொலையுண்டு வருவதை தடுக்க போராடனும் என்றால், இல்லை பார்த்துக் கொண்டு நல்லவனாக இருப்பதே பெரிய காரியம் என்கின்ற நிலையினை திட்டமிட்டு உருவாக்குகின்றனர் .

இவர்களை எதிர்த்து போராடும் போது இவர்களின் நிஜமுகத்தை பார்க்கலாம். இவர்களை எதிர்க்க நாம் பயப்படுவது தான், இவர்களது மூலதனமாக உள்ளது.. அந்த பயத்தினை உதிர்க்கின்ற அந்த கணமே இந்த மக்கள் விரோத அரசு நொறுங்குவதை பார்க்க முடியும். நந்திகிராமத்தில் மக்கள் இதனை உணர்ந்து, இணைந்து போராடியதால் தான் அங்கு நில ஆக்கிரமிப்பு நிறுத்துப்பட்டு உள்ளது.

இன்று இந்த நாடு பார்ப்பனிய பயங்கரவாதத்தாலும், அரசு பயங்கரவாதத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டு உள்ளது. இதனை அரசாங்கங்களை(வாட்ச் மேன்களை) மாற்றுவதால் மாற்ற முடியாது எனபது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாம் நேரில் பார்ப்பதில் இருந்து உணர முடியும்.

மக்களுக்கான ஒர் பொருளாதாரத்தை, கொள்கையினை உருவாக்கிட முதலில் நமக்கான ஒரு அரசை, மக்களே நேரிடையாக பங்கு கொள்ளும் ஒரு அரசை, அனைத்து அதிகாரிகளையும் மக்களே தேர்ந்தெடுத்துத் திருப்பியழைக்கும் உரிமையுடன் கூடிய அரசை ஏற்படுத்த வேண்டும்.

போராடுவதை தவிர வேறு மாற்று இல்லை என்ற நிலையினை, அனைவரும் ஒன்று சேர்ந்தாக வேண்டும் என்ற நிலையினை இந்த அரசே உருவாக்கி வருகிறது, இந்த யதார்த்ததை மக்கள் புரிந்துகொள்ளும் போது அந்த பன்னாட்டு நிறுவனங்களுடன், இந்த கார்பரேட் கட்சிகளும் நாட்டைவிட்டே ஓடவேண்டிவரும்.

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home