Saturday, August 18, 2007

இருப்பதற்கு வாய்ப்பே இல்லை ! எது கடவுள் தானுங்க !!

ஆத்திகமும், நாத்திகமும் ஒன்றுக்கொன்று நேர் முரணானவை. இவைகளுக்கிடையே சமரசம் கிடையாது; இருக்க முடியாது. ஆத்திகம் வெறிபிடித்து கூத்தாடத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஆத்திகத்தின் அடித்தளத்தை விஞ்ஞான அறிவு கொண்டு, விஞ்ஞான ஆய்வு முறை கொண்டு தகர்த்தெறிய வேண்டும். இது ஒவ்வொரு முற்போக்காளனின் கடமை என்பதை மறப்பதற்கில்லை.

இதற்கு கீழே உள்ள உரையாடலை ஓரளவு உதவலாம். இன்றைய வளர்ந்துவிட்ட விஞ்ஞானத்தின் ஆதாரங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளுங்கள்.

நாத்திகர்: உயிரினங்களே இல்லாத ஒரு காலம் இருந்தது என்பது தெரியுமா?

ஆத்திகர் : தெரியும். பூமி என்ற கோளம் உயிரினங்கள் தோன்றி வளர்வதற்கு லாயக்கான நிலை அடையவே கோடி வருடங்கள் பிடித்தன என்று விஞ்ஞானிகள் உரைக்கின்றனர்.

நா:ஆக, உயிரினங்களே இல்லாத காலத்தில் பூமி இருந்ததல்லவா?

ஆ: இருந்தது.

நா: அக்காலத்தில் - உயிரனங்களே இல்லாத காலத்தில் - பூமி இருந்தது. ஆனால் எண்ணம், சிந்தனை இருந்திருக்க முடியுமா?

ஆ: இருந்திருக்காது.

நா: ஆகவே பிரபஞ்சமும் , அதன் பகுதியாக பல கோளங்களும் வெட்ட வெளியில் சுழன்று கொண்டு இருந்தன. அதாவது பொருள் அல்லது வஸ்து இருந்தது. சிந்தனை இருக்கவில்லை.... என்ன முழிக்கிறாயே... சரிதானா?

ஆ: இது சரியாகத்தான் படுகிறது.

நா: ஆகவே , பொருள்தான் முதலில் இருந்தது. அடிப்படையானது, பின்னால் ஒரு கட்டத்தில் பொருளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களினால் உயிர் என்ற குணத்தைப் பொருள் அடைந்தது. அந்த உயிர்ப்பொருள் எத்தனையோவித மாற்றங்களடைந்தது. அந்த மனிதனின் சிந்தனை,எண்ணம் என்பது பிந்தியது என்பதில் சந்தேகம் கொள்ள இடமுண்டோ?

ஆ: இல்லை.

நா: யோசித்துப் பார். பூதத் சாத்திரத்தை, வான சாத்திரத்தை, பிராணி சாத்திரத்தை, அதன் ஒரு பகுதியான பரிணாம சாத்திரத்தை ...ஏன் இன்று வளர்ந்துள்ள எல்லா சாத்திரங்களையும் மறுத்து ஒதுக்கித் தள்ளினால்தான் இந்தக் கூற்றைத் தள்ள முடியும்.

ஆ: அது வாஸ்தவம்தான். பொருள் முந்தியது, சிந்தனை பிந்தியது என்பது மறுக்க முடியாத விஞ்ஞான உண்மைதான்.

நா: சரி வேறு ஒரு கோணத்திலிருந்து இவ்விஷயத்தை ஆராய்வோம். பொருள் அல்லது வஸ்து அழிவடைகிறதா?

ஆ: இது என்ன? ஒன்றும் புரியவில்லையே?

நா: கல் என்ற பொருள் எடுத்துக் கொள்வோம். அதைச் சுக்கு நூறாக உடைத்து மாவு போன்ற பொடியாக்கலாம், கல் என்ற உருவம் போய் விடுகிறது. இல்லையா?

ஆ: ஆம்; பொடியாகப் போய்விடுகிறது.

நா: 'கல்' அழிந்து விட்டது. என்று சொல்லலாமா?

ஆ: சொல்லலாம்.

நா: சொல்லக்கூடாது ! கல் என்ற உருவம் தான் அழிந்தது. 'பொடி' என்ற உருவம் வந்துள்ளது. கல்லுக்குள் இருந்த அணுக்கள் அழியவில்லை. "பொருளின் உருவம்" தான் மாறிற்று.

ஆ: அது மெய்தான்.

நா: அதே போல 'ஐஸ்' என்ற பொருளைப் பார்ப்போம். கையில் எடுத்துப் பார்ப்பதற்கு முன் கசிந்து உருகி நீராக ஓடி விடுகிறது.

ஆ: 'ஐஸ்' என்ற உருவத்தை விட்டு 'நீர்' என்ற உருவத்தை அடைகிறது.

நா: அந்த நீரை ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பின் மீது வைத்தால் என்ன ஆகிறது?

ஆ: சூடு ஏறிய பின் ஆவியாக மாறிக் காற்றில் கலந்து விடுகிறது.

நா: நீர் என்ற உருவம் மாறி 'ஆவி' என்ற உருவத்தை அடைகிறது. அந்த ஆவியும் குவியலாக பாத்திரத்திலிருந்து வெளிக்கிளம்பும் பொழுது கன்ணுக்குத் தெரிகிறது. ஆனால் காற்றிலே கலந்தபின் கண்ணுக்கும் தெரிவதில்லை.

ஆ: ஆம்.

நா: ஆனால் நீரில் இருந்த அணுக்கள் அழிந்துவிட்டனவா?

ஆ: இல்லை.ஐஸ் நீராக மாறிய பொழுது ஐஸில் இருந்த அணுக்கள் அழியவில்லை. அதேபோல நீர் ஆவியாக மாறிய பொழுது நீரில் இருந்த அணுக்களும் அழியவில்லை. திடமாயிருந்த பொருள், திரவமாக மாறி , பின் ஆவியாக மாறிற்று. ஆனால் அழியவில்லை.

நா: அதே போல பிரபஞ்சத்தில் உள்ள எந்தப் பொருளும் வஸ்துவும் - கல்லோ , மண்ணோ, கட்டையோ, மரமோ, உயிருள்ளதோ, உயிரற்றதோ - எந்த நிலையிலும் அழிவதில்லை. நிலைமைக்குத் தகுந்த உருவமாற்றம் ஏற்படுகிறது.; அழிவதில்லை - இது சரிதானே?

ஆ: சரிதான்.

நா: இதைத்தான் பொருளின் அழியாத்தன்மை (Law of Conservation of Matter) என்று கூறுகின்றனர். பொருள் அழிவதேயில்லை என்றால், என்றென்றும் இருந்தது என்று அர்த்தம் அது சரி தானே?

ஆ: ஆம், அப்படித்தான் அர்த்தம்.

நா: அதாவது, பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் இல்லாதிருந்த காலமே இல்லை என்பது இதன் தர்க்கரீதியான முடிவு.
ஆ: ஆம் என்றென்றும் இருந்து வந்துள்ளன என்பதே முடிவு.

நா: அப்படியானால் சிருஷ்டி, அல்லது படைப்பு என்பதற்கு இடமேது?

ஆ: ம்.....ம்... இல்லைதான்

நா: ஆக படைப்பும் இல்லை; படைத்தவனும் இல்லை - கடவுள் இல்லை - என்பது மறுக்க முடியாத விஞ்ஞான சாத்தியம்.

ஆ: அப்படித்தான்.... இருந்தாலும் என்னமோ மனதில் சங்கடம் ஏற்படுகின்றதே?

நா: இவ்வளவுக்குப் பின்னால் சங்கடமாயிருக்கிறது என்கிறாயே? - ஒரே வார்த்தையில் சொல்லியிருந்தால் (கடவுள் இல்லை என்று) எப்படியிருந்திருக்கும்; கோபப்பட்டிருப்பாய்; ஆத்திரப்பட்டிருப்பாய்; அறிவு ரீதியான ஆய்வுக்கு முனையமாட்டாய். ஒரு வேளை வெறிபிடித்த ஆத்திகனாகக்கூட மாறியிருப்பாய் ! இப்போது இம் முடிவு விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்படுகிறது என்று ஏற்றுக் கொண்டு விட்டாய்.... இன்னும் சில நாட்கள் ஆகிவிட்டால் மனதுக்கும் சங்கடமிருக்காது. போய் வா!

(ஏ. பாலசுப்ரமண்யம் அவர்கள் எழுதிய "கடவுள் உண்டா இல்லையா?" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது)
Related:
..
..

Labels: , ,

2 Comments:

Anonymous Anonymous said...

//இவ்வளவுக்குப் பின்னால் சங்கடமாயிருக்கிறது என்கிறாயே? -//

அதற்கு காரணம் சங்கரமடம்தான்
:)))

11:18 AM  
Anonymous Anonymous said...

தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்

5:05 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home