Friday, October 26, 2007

எது கவிதை?

வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை? விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறுங்கையால் இயற்கையை எதிர்த்துப் போராடத் தொடங்கிய காலம் முதல் தாம் வாழ்வதற்கான புதியவகை சாதனங்களை மட்டுமல்ல, புதியவகை உணர்ச்சிகளையும் படைத்தே வந்திருக்கிறது. படைப்புரீதியான இவ்வகை உழைப்புப் போக்கின் மூலம் சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியதே அறிவியல், கலைக்கான ஆளுமைமிக்க வரலாற்றுப் பாத்திரமாகும்.

அவ்வகை மனித முயற்சி, நாகரிகம் எதுவுமின்றி ""தான் எப்படியாவது பேசப்பட வேண்டும், பார்க்கப்பட வேண்டும்'' என்பதற்காக சமூகத்தின் சரிபாதியான பெண்களின் இடுப்பைக் கிள்ளும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் சில கோடம்பாக்கத்து போக்கிரிகள். காரணம் கேட்டால் இவர்கள் கவிஞர்களாம்! சுற்றிலும் நம் காற்று மண்டலத்தில் கலந்திருக்கும் சாதி தீண்டாமை அநீதிகள், ஒன்று சேர்ந்து வாழ்வதுபோல் நடிக்கும் இல்லறத்தின் புதிர்கள் இன்னும்பல சமூகக் கொடுமைகள் இவைகளை விண்டு பார்த்து விடைதேட முயன்று பாருங்கள். உங்கள் படைப்புக்கான ஆளுமை அங்கே காத்திருக்கிறது. கூட்டுத்துவ உழைப்பினால் வளர்ந்துவந்த சமூகத்தின் வரலாற்றை உணர்ந்து பாருங்கள், ""தான்'' என்ற அறியாமை வெட்கி விலகும். உயிர்த்துடிப்பான உழைக்கும் மக்களின் ஒருநாள் வாழ்க்கைப் போராட்டத்தை உற்றுப் பாருங்கள், நாம் மனிதர்களாகி விடுவோம். ""லூசுப்பையன்கள்'' திரியும் கோடம்பாக்கத்து ஒட்டுண்ணி இலக்கைவிட்டு வெளியே வாருங்கள். உணர்ச்சியுடனும் சுரணையுடனும் உழைக்கும் மக்கள் திரளினரால் படைக்கப்படும் புதிய சமூகத்திற்கான போராட்ட உணர்ச்சியில் கலந்து பாருங்கள். நாமும் கவிஞர்களாகி விடுவோம்.

அரசியலால் கலைத்தன்மை போய்விடும் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டே ஆளும் வர்க்க அரசியலை நத்திப்பிழைக்கும் இலக்கிய வட்டங்களைத் தாண்டி பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான அரசியலமைப்போடு ஒன்று சேர்ந்து பாருங்கள்! ஒரு புதிய சமூகத்தையே கவிதையாய் வடிக்கும் பேரார்வம் அங்கே உங்களுக்காகக் காத்து நிற்கிறது.
..

Labels:

Wednesday, August 22, 2007

"காட்டு நடனம்"

சித்திரவதைச் செய்யப்பட்ட
எங்கள்
மார்புகளில் இருந்து
வசீகர வயலின்கள்
உயிர்த்தெழும்பும்
சுருள் வேலிக் கம்பிகள்
அவற்றின் தந்திகளாய்
நாதமெழுப்பும்
உடைந்த
எழும்புத் துண்டுகளோ
புல்லாங்குழல்களாய்
முகிழ்த்தெழும்பும்
அங்கு
ஒரு காட்டு நடனம்
அனல் கக்கும்.
..
- மிக்கிஸ் தியோடோ ராகிஸ்

(கிரேக்க கவிஞர், அரசியல் ஆய்வாளர்)

Labels:

Monday, August 20, 2007

நலம், நலமறிய நக்சல்பரி...

நக்சலைட்டுகளை
இயங்கவிடாமல் செய்துவிட்டதாம் அரசு
நம்புகிறார்கள் சிலர்.

உண்மையில்
இயங்கமுடியவில்லை மக்களால்.
.
கத்திக்கு எத்தனைச் சாணைபிடித்தாலும்
ஒரு இழவு விசாரித்துவர
பேருந்து கட்டணத்தைப்
பிடிக்க முடியாமல்
துருப்பிடித்துக் கிடக்கிறது
தொழிலாளியின் வாழ்க்கை.
.
அங்கங்கே ஆள் வைத்து
பணத்தாலே கண்ணி வைத்து
எத்தனை முறை கிளப்பினாலும்
எழுப்ப முடியவில்லை
'எம்ப்ளாய்மெண்ட்' எண்ணை.
.
ராகு மூணாம் இடம் போகிறார்
கேது நாலாம் இடம் வருகிறார்
கேட்ட பவுனைப் போட முடியாததால்
அக்காமார்கள் மட்டும்
அடுப்படியிலேயே கிடக்கிறார்கள்.
.
ரேசன் அரிசி வடித்த கஞ்சியில்
சலவை செய்த உயிரை உடுத்தி உடுத்தி
ராத்திரி அறுப்புக்குப் போய் வந்து படுத்த
அம்மாவின் கண்கள்
கடைசிவரை திறக்கவே இல்லை..
.
ஊரெல்லாம் கடன்பட்டு
தலைமறைவு வாழ்க்கை நடத்தும்
உங்களுக்குத் தெரியாதா?
புரட்சிக்குக் கடன்படாமல்
இனி இயங்க முடியாது என்பது.

-துரை.சண்முகம்

நன்றி : புதிய கலாச்சாரம் ஜூலை 2000

Labels:

Thursday, July 26, 2007

"சுயநல அறிவுஜீவிகள்"

"ஏ சுயநல அறிவுஜீவிகளே !
நீங்கள் தப்பமாட்டீர்கள் !
..
உங்களுடைய கவிதைகளிலும் கதைகளிலும்
இடம் பிடிக்க முடியாதவர்கள்
ஆனால்
உங்களுக்கு உண்டி சமைக்கும்
உங்களுடைய ஆடையை விடுக்கும்
உங்களுடைய காரை ஓட்டும்
உங்களுடைய பூந்தொட்டியைப் பராமரிக்கும்
உங்களுடைய நாயைக் குளிப்பாட்டும்
அவர்கள் வந்தவுடனே
விசாரனை துவங்கும்.

ஏழை பாழைகளான எங்கள் வாழ்வும் கனவும்
எரிநெரிப்பில் கருகிக் கொண்டிருந்தபோது
ஏ, சுகபோகிகளே, செளந்தர்ய உபாசகர்களே
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"

- ஆட்டோ ரெள காஸ்புலோ, சிலி

Labels: