நலம், நலமறிய நக்சல்பரி...
நக்சலைட்டுகளை
இயங்கவிடாமல் செய்துவிட்டதாம் அரசு
நம்புகிறார்கள் சிலர்.
உண்மையில்
இயங்கமுடியவில்லை மக்களால்.
.
கத்திக்கு எத்தனைச் சாணைபிடித்தாலும்
ஒரு இழவு விசாரித்துவர
பேருந்து கட்டணத்தைப்
பிடிக்க முடியாமல்
துருப்பிடித்துக் கிடக்கிறது
தொழிலாளியின் வாழ்க்கை.
.
அங்கங்கே ஆள் வைத்து
பணத்தாலே கண்ணி வைத்து
எத்தனை முறை கிளப்பினாலும்
எழுப்ப முடியவில்லை
'எம்ப்ளாய்மெண்ட்' எண்ணை.
.
ராகு மூணாம் இடம் போகிறார்
கேது நாலாம் இடம் வருகிறார்
கேட்ட பவுனைப் போட முடியாததால்
அக்காமார்கள் மட்டும்
அடுப்படியிலேயே கிடக்கிறார்கள்.
.
ரேசன் அரிசி வடித்த கஞ்சியில்
சலவை செய்த உயிரை உடுத்தி உடுத்தி
ராத்திரி அறுப்புக்குப் போய் வந்து படுத்த
அம்மாவின் கண்கள்
கடைசிவரை திறக்கவே இல்லை..
.
ஊரெல்லாம் கடன்பட்டு
தலைமறைவு வாழ்க்கை நடத்தும்
உங்களுக்குத் தெரியாதா?
புரட்சிக்குக் கடன்படாமல்
இனி இயங்க முடியாது என்பது.
-துரை.சண்முகம்
நன்றி : புதிய கலாச்சாரம் ஜூலை 2000
Labels: கவிதை
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home