உலக வங்கி வழங்கும் புதிய மனுநீதி.
சென்னை மாநகரம் விழித்தெழும் முன்பே விழித்தெழிந்து இயங்கத் தொடங்கும் கூறு கட்டிக் காய்கறி விற்பவர்கள், வீட்டுக்கு வீடு பால் பாக்கெட் போடுபவர்கள், நடுத்தர, மேட்டுக்குடி கனவான்களின் வீட்டு பத்துப்பாத்திரங்களையும் பளிங்குத்தரையையும் சுத்தம் செய்பவர்கள், மாநகரின் வனப்பை செதுக்கித் தரும் கொத்தனார்கள், சித்தாள்கள், மண்டல வாரியாக குப்பை அகற்றுபவர்கள், அடைத்து நாறும் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்பவர்கள் என லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் இயக்கம் இல்லை என்றால் சென்னை மாநகரமே இல்லை எனலாம்.
..
உடலை உருக்கிப்போடும் கடின உழைப்பை ஈயும் இவர்களில் பலருக்கும் நல்ல உணவில்லை. இருக்க நல்ல இடமில்லை. வாடகை கொடுத்துக் கட்டுபடியாகும் நிலையில் வருமானம் இல்லை. எனவேதான் இவர்களில் பலரும் குடியிருப்பது குடிசைகளில். கழிப்பறை, குழியலறை இல்லாத, காலை நீட்டிக்கூட தூங்க முடியாத, கொசுப்படை தாக்குதலுக்குள் முடங்கிட இவர்களுக்குக் கிடைத்தவையோ பக்கிங்காம் கால்வாய், அடையாறு, கூவம் போன்ற நீர்வழிகளின் கரையோரங்கள்தான்.
நகருக்குள் கிடைக்கும் வேலைகளை-அதுவும் நிச்சயமில்லாத வேலையை- நம்பித்தான் இவர்களின் அன்றாடக் காலைப்பொழுதுகள் விடிகின்றன. இக்குடிசைவாசிகளில் 86 சதவீதம் பேருக்கு ஒருநாளைக்கு ஒருவேளைதான் உணவு. போதிய வருமானம் இல்லாததால் குடிசைவாழ் பெண்களின் உணவில் சத்து குறைந்து அவர்களில் 44 சதம் பேருக்கு இரத்த சோகை உள்ளது. இருப்பினும் எண்சாண் வயிறை நம்பி வாழவே தகுதியில்லாத குடிசைகளில் குடியிருப்பதால்தான் இவர்களுக்கு குடிசைகளை ஒட்டிய நாகரீகக் குடியிருப்புகளில் வீட்டு வேலைகளோ, குப்பை அள்ளுவதோ, கட்டிட வேலைகளோ கிடைக்கின்றன.
அதேபோல்தான் மெரீனா கடற்கரை, சாந்தோம் கடற்கரையை ஒட்டிக் குடியிருக்கும் மீனவர்களின் குடியிருப்புக்களும். மீன் பிடிக்கப் பயன்படும் வலைகள், கட்டுமரங்களை எளிதில் கடலுக்குள் கொண்டு செல்லவும், வலைகளை உலர்த்தவும், விரைவில் தொழிலுக்குச் செல்லவும் எனத் தேவையை ஒட்டிப் பல நூற்றாண்டுகளாக அவ்விடங்களில் மீனவர்கள் பாரம்பரியமாகக் குடியிருந்து வருகின்றனர்.
நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையிலும் மண்ணை அள்ளிப் போட வந்துள்ளது, சென்னை-2026 எனச் சொல்லப்படும் மாஸ்டர் பிளான் திட்டம்.
குடிசைவாசிகள் வாழத்தகாத இடங்களில் வாழ்கிறார்கள் என்று சொல்லி, அதனால் அவர்களை சென்னையில் இருந்து அகற்றி மாநகர எல்லைக்கு வெளியே செம்மண்சேரிக்கு விரட்டத் திட்டமிட்டுள்ளனர்.
இம்மக்களால்தான் சென்னையின் நீர்நிலைகள் மாசுபடுவதாகவும், அவர்கள் நகரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் மாஸ்டர் பிளான் குற்றம் சாட்டுகிறது.
கழிப்பறைகள் இல்லாத குடிசைமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நகரின் சுகாதாரமே கெடுவதாயும் குற்றம் சாட்டுகிறது.
நீர்நிலைகளை மாசுபடுத்துவதாகக் குற்றம் சாட்டி சென்னையை விட்டுத் துரத்த வேண்டும் என்றால் முதலில் துரத்த வேண்டியவர்கள், லட்சக்கணக்கான லிட்டர் கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் டைடல் பார்க் உள்ளிட்ட பல பன்னாட்டு சாப்ட்வேர் நிறுவனங்களும், நட்சத்திர விடுதிகளும்தான். மூன்று நாளைக்கு ஒருமுறை வரும் நீரை சிக்கனமாக செலவளிக்கும் குடிசைகளால் நீர்நிலை கெடுகின்றது என்பதை குடிசைகளைப் பற்றி அறிந்த எவருமே நம்ப மாட்டார்கள்.
பின் எதற்காக குடிசைகளைக் காலி செய்யச் சொல்லுகிறார்கள்?
மாஸ்டர் பிளானிலேயே இதற்கான காரணம் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப்பயணிகளின் கண்களுக்கு இக்குடிசைகள் வெறுப்பை உண்டுபண்ணுகின்றனவாம்.
வளர்ந்து வரும் சென்னையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தகுந்த வண்ணம் மாற்றி அமைக்க உருவாக்கப்பட்ட திட்டம்தான் மாஸ்டர் பிளான். இதனை டாக்டர் கலைஞரோ,புரட்சித் தலைவியோ சிந்தித்து உருவாக்கவில்லை.
உலக வங்கி எனப்படும் அமெரிக்க நிறுவனம் உருவாக்கி, அதற்கு எது எதெல்லாம் இடைஞ்சலாய் உள்ளதோ அவற்றை எல்லாம் தான் உருவாக்க இருக்கும் நவீன சிங்காரச் சென்னையை விட்டு அப்புறப்படுத்தச் சொல்லி கட்டளை இடுகிறது. இந்த திட்டத்திற்கு அது கடனாக வழங்கி இருக்கும் தொகை மட்டும் ரூபாய் 25 ஆயிரம் கோடிகள்.
இனிமேல் சென்னைக்குள் மாவரைக்கும் ஆலைகளோ, ஆடு மாடு வளர்ப்போ, குடிசைகளோ, மீனவர்களின் கட்டு மரங்களோ, சென்னை கடற்கரையின் பலூன், சோளக்கதிர் கடைகளோ இருக்கக் கூடாது. வெளியேறுங்கள் எனக் கட்டளை இட்டுள்ளது, உலக வங்கி. அதனை இந்த அரசு நிறைவேற்றுகிறது. சென்னையின் குடிசை மக்களில் 75 ஆயிரம் பேரை செம்மண்சேரிக்கு அப்பால் குடியேற்றப் போகின்றனர். ஏற்கெனவே அடையாறு நதிக்கரை ஓரக் குடியிருப்புக்களை புல்டோசர்களால் தரை மட்டமாக்கி 1500 குடும்பங்களை இடம் பெயரச் செய்தும் விட்டனர். 7300 பேருக்கு வெளியேற்ற நோட்டீசு வழங்கி விட்டனர். படிப்படியாக அனைத்து குடிசைவாசிகளையும் துரத்தி விட்டு சென்னையை அழகுபடுத்தப் போகிறார்களாம்.
குடிசைகளை அகற்றச் சொல்லும் அரசால், அதே குடிசைகளை இருக்கும் இடங்களிலேயே காங்கிரீட்டுகளாகக் கட்டித்தர இயலாதா?அடையாறு பூங்கா எனும் ஊதாரித் திட்டத்துக்கு மட்டும் ரூபாய் 100 கோடி ஒதுக்க இயலுகிற அரசால் குடிசைகளை மேம்படுத்த இயலாதா?
போலீசுக்காரர்களுக்கு மட்டும் பளபளப்பான அடுக்கு மாடிக்குடியிருப்புகள் கட்டும் அரசுக்கு குடிசைகளை நகருக்குள்ளேயே நவீனமாக்கித்தர வக்கில்லையா?
திறந்த வெளியில் மலம் கழித்து நோயைப் பரப்புகிறதாய் குடிசை மக்கள் மீது குற்றம் சாட்டும் சென்னை மாநகராட்சி ஏன் இதுவரை போதிய அளவில் கழிவறைகளைக் குடிசை மக்களுக்குக் கட்டித் தரவில்லை?
பொதுக்கிணறு, குளங்களை தலித்களுக்கு மறுத்து விட்டு தலித்களை சுத்தமற்றவர்கள் எனக் கூறும் பார்ப்பனீய வஞ்சகத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
அங்கீகாரம் பெறாமல் விதிகளை மீறி கோடிக்கணக்கில் கட்டிடம் கட்டியவன் கூட உள்ளே இருக்கலாம். உழைக்காமல் தரகு வேலை பார்ப்பவன் உள்ளே இருக்கலாம். முழுக்க முழுக்க அந்நிய நாட்டுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள் உள்ளே இருக்கலாம். ஆனால் இந்த மாநகரின் மைய நரம்பாய் உழைக்கின்ற குடிசைவாசிகள் மட்டும் நகருக்குள்ளே இருக்கக் கூடாதா?
செம்மண் சேரியில் இருந்து பிழைப்பு தேடி சென்னை வருவதும் இனி சுலபமில்லை எனும்படிக்கு, மாநகரப் பேருந்துகளைக் கூட மாற்றி அமைத்து வருகின்றனர். 4ரூபாய் கொடுத்து பயணம் செய்த வெள்ளைப் பலகை (ஒயிட் போர்டு) பேருந்துகளைக் குறைத்து அதே தடங்களில் சொகுசுப் பேருந்துகளை விட்டு 11 ரூபாய் வரை கொள்ளை அடிக்கத் தொடங்கி விட்டது, அரசு. ஆக, செம்மண் சேரியில் இருந்து தினமும் பயணித்து, கிடைக்கப் போகும் கொஞ்ச நஞ்ச ஊதியத்தையும் வழிப்பறி செய்யப் போகிறது அரசு.
இக்கொடுமைகளை அடுத்து வரும் அரசு தீர்த்து விடும் என்றோ, அல்லது வேறு ஏதாவது ஓட்டுக் கட்சி இதனைப் போராடிப் பின் வாங்க வைக்கும் என்றோ நம்ப இடமில்லை.
உலக வங்கியின் கட்டளைப்படி ஆடுபவர்கள்தான் கருணாநிதியும், ஜெயலலிதாவும். உலகவங்கி போட்டுத்தந்திருக்கும் மாஸ்டர்பிளானில் இச்சதித் திட்டம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் கேப்டன் முதல் ராமதாசு வரை, வலது இடது கம்யூனிஸ்ட்கள் முதல் பாஜக வரை எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த அநியாயத் திட்டத்தைக் கண்டித்திருக்கின்றதா?
25000 கோடிகள் வழங்கும் உலக வங்கியின் கட்டளைக்கெல்லாம் அடிபணியும் அரசு நமக்கு இனியும் தேவையா?
கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை, பத்துக்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் என அனைத்திலும் உலக வங்கி கடனுதவி செய்து அதற்கான கப்பத்தை அள்ளிக்கொண்டு செல்கிறது.
மாஸ்டர்பிளானை மட்டும் தனியே எதிர்ப்பதனால் இச்சதியை முறியடித்திட இயலாது. உலகமயம்,தனியார் மயம், தாராளமயம் ஆகியவற்றின் துணையுடன் உலக வங்கி மூலமாக நம் நாடு காலனியாக்கப்பட்டு வருகிறது. காலனியாக்கத்தை எதிர்த்து விடுதலைப்போர் நடத்த வேண்டிய சூழலில் நாடு இன்றுள்ளது.
உழைக்கும் மக்களின் இருப்பிடங்கள் அகற்றப்படுவதை எதிர்த்து போராடவும், மாஸ்டர் பிளானைக் கைவிடவும்,பன்னாட்டுக் கம்பெனியின் கந்துவட்டி நிறுவனமான உலக வங்கியின் சதியில் இருந்து நம் மக்களையும் நாட்டையும் காப்பாற்றவும் உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது.
Related:..
Labels: இந்திய ஆட்சியாளர்கள், இன்றைய இந்தியா, மறுகாலனியாதிக்கம்