Thursday, June 21, 2007

திமுக-பாஜக வழங்கும் 'ராமன் கட்டிய பாலம்' அரட்டை அரங்கம்


மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் பார்ப்பனர்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து கொண்டு 'ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே!' என ஓலமிட ஆரம்பித்துள்ளனர்.

பாஜக, விஸ்வ இந்து பரிசத் போன்ற இந்து மதவெறிக் கூட்டத்துடன் சுப்பிரமணிய சாமியும், பார்ப்பன ஜெயலலிதாவும் அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றனர். பதிலுக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் பதில் அறிக்கை என லாவணிக்கச்சேரி களை கட்டி உள்ளது.

இந்த லாவணிக்கச்சேரியை ரசிப்பவர்கள் சில குறிப்பிட்ட விசயங்களை மறந்து விடும் செலக்டிவ் அம்னீசியா நோயாளிகளாகவே இருந்து விட்டால்தான் எவ்வளவு நல்லா இருக்கும்!
'வெடிகுண்டு வைத்து ராமர் பாலத்தைத் தகர்க்கப் போகின்றார்கள்' என இல.கணேசன் பீதியூட்டி 'தொன்மையான வரலாற்று சின்னமாகவும் மக்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் விளங்கும் பாலம்' என்று மணல்திட்டைக் காப்பாற்றத் துடிப்பதைக் கேட்பவர்கள், திட்டப்பணி நடைபெறும் பாதை எண்-6 வழியாக (ஆதாம் பாலம்) கால்வாய் வெட்டச் சொன்னதே முந்தைய பாஜக அரசின் திருநாவுக்கரசர் தலைமையிலான அமைச்சகம்தான் என்பதை மறக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் பாஜகவின் மல்ஹோத்ரா 'பாலத்தை இடித்தால் அரசு கவிழ்ந்துவிடும்' என சாபமிட்டபோது டி.ஆர்.பாலு முழங்கினாரே '400 ஆண்டு காலப் பழைமை வாய்ந்த மசூதியை இடித்த நீங்கள் இப்போது இல்லாத பாலத்தை இடிப்பதாக என்மீது பழி போடுகிறீர்கள்' என்று! மசூதி இடித்த பின்னர்தான் தேஜகூ அரசில் இதே பாலு மந்திரியாய் இருந்து ஒரே குட்டையில் புரண்டார் என்பதை மறக்க வேண்டும்.

'ஆங்கிலேயர்கள் வரைந்த படங்களில்கூட ராமர் பாலம் இருந்தது. தற்போது இடிக்கப்படும் பாலத்தின் கற்களை இரகசியமாக கப்பலில் எடுத்துச் செல்கின்றனர். பிரதமரும் ஜனாதிபதியும் உடனே தலையிட வேண்டும்' என்று ஊளையிடும் ஜெயா மாமியின் அதிமுகதான் 2001 தேர்தல் அறிக்கையில் 'ஆதாம் பாலத்து மணலை அகற்றி கால்வாய் அமைக்கப்படும்' என்று சொன்னதென்பதை மறக்க வேண்டும்.

இந்த வாதப்பிரதிவாதத்தில் கருணாநிதி 'அயோத்தியில் ராமர் கோவில் என்று சொல்லி பாபர் மசூதியை இடித்து அதன் காரணமாக ரத்த ஆறு ஓடக் காரணமானவர்கள்'தான் சேதுக்கால்வாயை எதிர்க்கிறார்கள் எனச் சாடினார். அதே மதவெறியர்கள் 2002ல் குஜராத் முஸ்லிம்களை மாதக்கணக்கில் கொன்று போட்டபோது 'அது உள் மாநிலப்பிரச்சினை' என்று அவர் சொன்னதை மறக்க வேண்டும்.

இந்த அரட்டைகளைக் காது கொடுத்துக் கேட்பபவர்கள் இந்த அறிக்கைப்புலிகளைக் கேள்வி எதுவும் கேட்கப் போவதில்லைதான்.

தயானந்த சரஸ்வதி எனும் பண்டாரம் 'ராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ளது இயற்கையான பாலமல்ல. கி.பி. 15 ஆம் நூற்றாண்டு வரை அப்பாலத்தில் மக்கள் சென்று வந்தனர்' என்று சொல்கிறார். 'அப்படியென்றால் 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் ஏன் அப்பாலத்தைப் பயன்படுத்தாமல் கடற்படையை ஏவி ஈழம் வென்றான்?' என்று அவரை யாரும் கேட்கப் போவதில்லை.

'பலகோடி இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ராமர் பாலத்தை இடிப்பதை மைய அரசு செய்யக்கூடாது. சேதுக்கால்வாயால் வெளி நாட்டவருக்குதான் அதிகப்பலன்' என்று திடீர் தேசப்பற்றை விதைக்கும் விஷ்வ இந்து பரிசத், தனக்கு நன்கொடைகளை அமெரிக்கா, பிரிட்டனில் இருந்து ஏன் பெறுகின்றது? என யாரும் கேட்கப்போவதில்லை.

சேதுக்கால்வாய்க்காக வாதாடுவதற்கென்றே திமுக,மதிமுக,அதிமுக,திமுக, மீண்டும் மதிமுக எனப் பலமுறை கட்சி மாறிய மதிமுக அறிவுஜீவி கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் 'ஜெயாவின் சேதுக்கால்வாய் எதிர்ப்பு' பற்றி யாரும் கருத்து கேட்கப் போவதில்லை.

சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் 'அமெரிக்காவின் நாசாவே வெளியிட்டிருக்கும் செயற்கைக்கோள் படத்தில் ராமர் பாலம் இருக்கிறது' என்கிறார்கள். அவர்களிடம் 'நாசாவின் இணைய தளமோ, கடலில் நடக்கும் இயற்கை மாற்றத்தால் உண்டான மணல்திட்டுக்களே அவை. அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட எவ்விதமான கட்டிடங்களும் இல்லை' எனச் சொன்னதையும், 'நாசா சொன்ன மணல் திட்டுக்களைப் பாலம் எனத் திரித்தவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்தானே!' என்பதையும் யாரும் கேட்கப் போவதில்லை.

ராமர் பாலம் கட்டினாரா? அது பாக் நீரிணைப்பில் (இலங்கை-இந்தியாவைப் பிரிக்கும் நீர்ச்சந்தி)தான் உள்ளதா? என்ற விவாதம் இல.கணேசனுக்கும் திமுகவுக்கும் இடையே நடந்து வருகிறது.

'மொகலாயர் காலத்து நூல்களிலும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள எண்ணற்ற நூல்களிலும் ராமர் கட்டிய பாலத்துக்கு ஆதாரம் உள்ளது' என இல கணேசன் சொல்லவே, டி.ஆர். பாலு சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று 4 மணி நேரம் குறிப்பெடுத்தார். பெரியாரை ரவிக்குமார் தொடர்ந்து அவதூறு செய்து வந்தபோது கூட திமுக காரர்கள், அதற்கு மறுப்பு சொல்ல 4 மணிநேரம் பெரியார் நூல்களைத் தேடி இருக்க மாட்டார்கள். உடனே 'நூலகத்தில் நுழைந்து ஆதாரங்களை அழித்தார்' என்று பாசிச ஜெயா சொன்னார். அதையே பாஜகவும் வாந்தி எடுத்தது. பாராளுமன்றத்தில் 'பாலத்தை இதிகாச ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வாதாடத் தயார்' எனப் பாலு அறிவித்ததும், ஆதாரப்புளுகுகளை நிறுத்தி விட்டு பாஜக 'இது இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம்' எனச் சொல்ல ஆரம்பித்தது.

இதையெல்லாம் காது குளிரக் கேட்ட பிறகு ராமன் கட்டிய பாலம் குறித்து நமது மண்டைக்குள்ளும் சில கேள்விகள் எழுகின்றன.

ராமனே கட்டிய பாலம் என்கிறார்களே! அவன் கட்டியது உண்மை என்றே கொண்டாலும் ஆனானப்பட்ட ராமன் கட்டிய பாலத்தையும் கடல் விழுங்கி விட்டதே.. அதை ஏன் இப்போது இடிக்கக் கூடாது?

தமிழக மக்களின் சிரமத்தைக் குறைத்துப் போக்குவரத்தை மேம்படுத்தவா ராமன் பாலம் கட்டினான்? மாற்றானிடம் சென்று விட்ட அல்லது கடத்தப்பட்ட தன் பெண்டாட்டியை மீண்டும் அழைத்து வரத்தானே அந்தப் பாலத்தைக் கட்டினான்?

இலங்கைக்கு செல்ல, கடலைக் கடக்க பாலம் கட்டிய ராமன், பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வரை எப்படிப் போனான்?

ராமன் கட்டிய பாலம் தனுஷ்கோடியில் இருக்கையில் அனுமன் பறக்கையில் கீழே விழுந்ததால் உருவானதாகச் சொல்லப்படும் மருத்துவ மலை மட்டும் ஏன் கன்னியாகுமரிக்கருகில் இருக்கிறது?

'ராமன் பாலத்துக்கு 15 லட்சம் வருச வரலாறுண்டு' என்று ஜெ.யும் பாஜகவும் சொல்கிறார்கள். மனித இனம் உருவாகியே 5 லட்சம் ஆண்டுகள்தானே ஆகின்றன.

ராமன் பாலத்தை உடைப்பது குறித்துக் குதிக்கும் ராம.கோபாலன் கிராமங்களில் இன்னமும் இருக்கும் ரெட்டை டம்ளர்களை உடைக்க எப்போது வருவார்?

ராமநாதபுரம் மாவட்டத்திலே மலைகள் ஏதும் இல்லையே. பாலம் கட்ட பெரும்பாறைகளுக்கு ராமன் என்ன செய்தான்? கரசேவை நடத்திக் கல் வரவழைக்க அன்றைக்கு அத்வானி போன்றவர்கள் இல்லையே!

இவ்வளவு பழமையான பாலத்தைக் காக்க ஏன் இவர்கள் ஆண்ட 6 ஆண்டுகளில் தொல்பொருள் சின்னமாக அதனை அறிவிக்கவில்லை? உமாபாரதி சுரங்கத்துறை அமைச்சராக இருந்தபோது அப்பகுதியில் 21 மீட்டர் வரை தோண்டிப்பார்த்தும் கட்டிடங்கள் ஏதும் தென்படாததாலா?

உண்மையில் பாக் நீரிணைப்பில் பாலம் இருந்ததா? கடலியலாளர் ஜெயகரன் "நூறாண்டுகளுக்கு 1 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டுடன் தரையால் இணைக்கப்பட்டிருந்த இலங்கை தீவாகிப் போனது" என்பதைப் பல ஆதாரங்களுடன் சொல்கிறார். (ஆதாரம்:- 'குமரி நில நீட்சி' ஜெயகரன்)

லட்சக்கணக்கான வருசங்கள் என்ன, 5000 வருசத்துக்கு முன்னர் வெறும் தரையில் நடந்தே போய்விடக்கூடிய இடத்துக்கு பாலம் கட்டப்பட்டது என்றால் ஒன்று கட்டியவன் கூமுட்டை. இதை நம்புபவன் கேணை.

இத்திட்டத்தை மதக்காரணம் காட்டி எதிர்ப்பவர்களை காங்கிரசின் கிருஷ்ணசாமி 'தமிழகத்தின் துரோகிகள்' என்றால் கருணாநிதியோ 'தேசத்துரோகிகள்' என்கிறார்.

கருணாநிதி எரிந்து விழுகிற மாதிரி பாஜக உண்மையிலேயே இத்திட்டத்தை எதிர்க்கிறதா? என்றால் இல்லவே இல்லை. அவர்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் ராமன் கட்டிய பாலத்தை இடிப்பதை மட்டுமே எதிர்க்கின்றார்களே தவிர சேதுக்கால்வாயை எதிர்க்கவில்லை. 'எண்ணெய் தடவாமல் தலை சீவ முடியுமா?' எனக் கருணாநிதி கேட்டால் 'எண்ணெய் தடவாமலே தலை சீவுவதுதான் ·பேசன்' என்று இல.கணேசன், மாற்று வழியில் தோண்டச் சொல்கிறார்.
பாஜக இந்தப்பிரச்சினையில் ராமன் பெயரைச் சொல்லி தனக்கெனெ ஓர் ஆதரவுத் தளத்தை உருவாக்க முயல்கிறது. ஏற்கெனெவே கரசேவையை ஆதரித்த, மோடிக்காக பரிந்து பேசிய ஜெயா இக்கும்பலுடன் ஐக்கியமாகாமல் இருந்திருந்தால்தான் அது ஆச்சரியம். ஏற்கெனவே, கிறித்துவ மீனவர்கள் வலை காயவைக்கும் பாறையை விவேகானந்தர் பாறை எனக் கைப்பற்றி கன்னியாகுமரியில் காலூன்றியது போல் இவ்விசயத்தையும் இக்கும்பல் கையில் எடுத்துள்ளது.

எதிர்முகாமில் இருந்து எதிர்ப்பு வருவதைக்கண்ட கருணாநிதி தன் கூட்டணியை வைத்தே 'சேது சமுத்திரத்திட்டப் பாதுகாப்புக்குழு' ஒன்றை உருவாக்கி, 'சேதுக்கால்வாய் போன்றவற்றை நிறைவேற்றவே திமுக தனிநாடு கேட்டதாகவும், மய்ய அரசே என்னென்ன வேண்டும் சொல்லுங்கள் எனக்கேட்டதும் தனிநாடு கொள்கையைக் கைவிட்டு இந்தியாவில் இருந்து கொண்டே சேதுக்கால்வாய் வெட்டலாமென்று பிரிவினையைக் கைவிட்டதாகவும்' புத்தம் புது திரைக்கதை ஒன்றைச் சொன்னார்.

ராமதாசோ 'இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டால் தமிழகத்தில் தொழில்வளம் பெருகும். வணிகம் வளர்ச்சி அடையும். பல துறைமுகங்கள் ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் பெருகும்' என்று கற்பனையைத் தூண்டிவிடுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரியோ சிறந்ததொரு தரகு முதலாளியின் வார்த்தைகளிலேயே 'உலக அளவில் கப்பல் போக்குவரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்துறையில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற திட்டங்கள் அவசியம்' என்கிறார்.

துறைமுகங்கள் வளருவதால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது கடைந்தெடுத்த பொய்யாகும். சேதுக்கால்வாய் திட்டம் வருவதற்கு முன்னரே 80களில் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான டி.எஸ்.ஏ. தொழிலாளர்களை துறைமுக நவீனமயமாக்கம் இன்று வீதிக்கு எறிந்து விட்டது. துறைமுகங்கள் முழுக்க கணிணிகளால் இயக்கப்படுகின்றன. 1990 களுக்குப் பின்னர் பின்பற்றப்படும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையால் பல லட்சம் சிறுதொழில்கள் அழிந்து விட்டன. கிராமங்களின் கைவினைஞர்களும், விவசாயிகளும் பெருநகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
ஏற்கெனெவே இருந்த வாழ்வை அழித்து விட்டு சேதுக்கால்வாய் மூலம் தொழில் பெருகும், வணிகம் பெருகும் என்று சொல்வதில் கடுகளவும் பொருளில்லை.

சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிக்கும் கருணாநிதி, 'நாற்கர சாலைகள் போட்ட பின்னர் 2 மணி நேரத்திலேயே சென்னையில் இருந்து வேலூருக்கு போக முடிகிறது. முன்பெல்லாம் 4 மணி நேரம் ஆனது' என்று சொல்கிறார். வெள்ளைக்காரன் ரயில் விட்ட கதை மாதிரிதான் இதுவும். காலனி நாடுகளில் இருந்து சுரண்டப்படும் செல்வத்தை விரைந்து எடுத்துச் செல்லவும் தனது படைகளை விரைவாக நகர்த்தவும் போட்ட இருப்புப்பாதையை சும்மா போட்டு வைக்காமல் மக்களுக்கும் பயன்படுத்தச் சொன்னான், வெள்ளைக்காரன். இன்று துறைமுகங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன் நான்கு வழிச்சாலைகள் மூலம் இணைத்து அதிவேகமாக சரக்கைக் கையாள உலக வங்கி நிதியுடன் போடப்படும் சாலையையே ஏதோ மக்கள் விரைந்து செல்லப் போட்டது போலப் படம் காட்டுகிறார் கருணாநிதி.

சேது சமுத்திரத் திட்டத்தை ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆதரித்தால், 'வேறு இடத்தில் வெட்டுங்களேன்' என்று அதை எதிர்க்கிற மாதிரி பாஜகவும் ஜெயலலிதாவும் ஆதரிக்கின்றனர் . இதனை 'தமிழனின் கனவுத் திட்டம்' என்று சொல்லிடும் கால்வாய்க் கனவையே பிரிட்டிஷ் காரன் தான் உருவாக்கினான். 1860களில் பஞ்சங்களை உருவாக்கிய வெள்ளை ஏகாதிபத்தியம் பருத்தி,அவுரி போன்றவற்றையும் தேக்கு போன்ற மரங்களையும் விரைவாய்க் கொண்டு செல்ல வடிவமைத்த திட்டத்தை 'தமிழனின் கனவு'த் திட்டம் என்று சொல்வதே அடிமைப்புத்தியாகும். அன்று பிரிட்டனால் நிறைவேற்ற முடியாமல் போன இந்தத் திட்டத்தை,இன்று உலக நிதி மூலதனம் நிறைவேற்றக் கிளம்பியுள்ளது.

இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் 'சேதுவால் நம்நாடு மட்டுமல்ல. தென் கிழக்காசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளும் பயன்பெறும். வணிகமும் தொழிலும் பெருகும். அன்னிய முதலீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகரிக்கும். ஏற்றுமதி அதிகரிக்கும். துறைமுகங்களின் சரக்குக் கையாளும் திறன் அதிகரிக்கும்' என்று சேதுவின் உண்மை நோக்கத்தை சொல்லிவிடுகிறார்கள். சென்னைக்கு அருகில் ஹோண்டாவும், ஹ¥ண்டாயும் பல கோடி அந்நிய முதலீட்டில்தான் வந்தன. எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? அவர்கள் கார்களை ஒருங்கிணைத்து சென்னை துறைமுகம் மூலமாகத்தான் ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளதா? இல்லவே இல்லை.

அந்நிய முதலீடுகளை வரவேற்க எனச் சாலைகளை அகலப்படுத்துவதற்காக பலரின் வீடுகள், கடைகள் தரைமட்டமாக்கப்பட்டதுதான் மிச்சம். ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா,சத்திஸ்கர் முதல் பல மாநிலங்களின் சுரங்கங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. வெட்டி எடுக்கும் தாதுக்களையும் சிறப்புப் பொருளாதார மண்டல உற்பத்திப் பொருட்களையும் அதிவிரைவாக எடுத்துக் கொண்டு துறைமுகங்களை நோக்கிக் கொண்டு செல்லத்தான் நான்கு வழிச்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இந்தப் பூதாகரமான சாலை விரிவாக்கத்தினால் பல இடங்களில் சிற்றூர்களின் பல தெருக்களே அழிக்கப்பட்டு விட்டன. பல்லாண்டு பழைமையான மரங்கள் பெயர்த்தெறியப்பட்டு விட்டன.

உலகில் அருகி வரும் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி என்றும் பவளப்பாறைகள் செறிந்த பகுதி என்றும் உயிரியலாளர்களால் போற்றப்படும் மன்னார் வளைகுடாவை ஏகாதிபத்தியம் சேதுக்கால்வாய் திட்டத்தின் மூலம் தனது கோரப்பசிக்குப் பலியாக்கி வருகின்றது. ஏகாதிபத்தியத்திற்காகப் போடப்படும் சேதுக்கால்வாயின் மைய நோக்கத்தைப் பற்றி யாரும் யோசிக்க விடாமல் இருக்க ஓட்டுக்கட்சிகள் 'ராமன் பாலம் கட்டினானா?' இல்லையா? என்ற பட்டிமன்றத்தில் இறங்கி விட்டன. 15 ஆண்டுகளுக்கு முன் பாபர், ராமர் கோவிலை இடித்தாரா இல்லையா என்ற விவாதத்தில் மக்களை மோதவிட்டு, ஆட்சியாளர்கள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதே தந்திரம்தான் இன்று பாலப் பிரச்சினையிலும் பின்பற்றப்படுகின்றது.

ஓட்டுக்கட்சிகளின் திசைதிருப்பும் இந்த உத்திக்குப் பலியாகாமல் சேது சமுத்திரத்திட்டம் மூலம் நம் மண்ணை ஆதிக்கம் செய்யப்போகும் ஏகாதிபத்தியத்தை நாம் எதிர்த்துப் போராடுவோம்.

Labels: ,

Wednesday, June 20, 2007

ஜனநாயகத்தின் மீது ஓட்டு கட்சிகளின் நம்பிக்கை ?


இது ஜனநாயக நாடு... நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என எப்போதும் மார்தட்டிக் கொள்ளுகின்றனர் ஓட்டுக் கட்சிகள்.

ஆனால் இவர்களுக்குதான் ஜனநாயகத்தின் மீது துளி கூட நம்பிக்கை இல்லை என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபிக்கின்றனர்.

தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, வாக்குச்சாவடியை கைப்பற்றுவது, வாக்குப்பெட்டியை கடத்துவது என அனைத்தையும் செய்வது, இந்த ஜனநாயகவாதிகள் தான்.
இவர்களுடைய ஜனநாயகம் ஒவ்வொரு தேர்தலும் பல்லாயிரக்கணக்கான ரானுவத்தினரையும், போலீஸையும் வைத்து நிலைநாட்டப்படுகிறது.

************************************************************************************
மதுரை இடைத் தேர்தல்-ஆயுதங்களுடன் துணை ராணுவம் ரோந்து

ஜூன் 19, 2007

மதுரை: மதுரை மேற்கு தொகுதி தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் மத்திய துணை ராணுவத்தினர் ஆயுதங்களுடன் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இத் தொகுதியில் வரும் 26ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. ஒரு பக்கம் அழகிரியின் அஞ்சா நெஞ்சன் படையினர், இன்னொரு பக்கம் அதிமுகவின் தென் மாவட்ட பெருந்தலைகள் என மதுரையே கதி கலங்கிக் கிடக்கிறது.

தேர்தலை அமைதியாக நடத்த மத்திய துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முதல் அவர்கள் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பதட்டமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ள 21 வார்டுகளில் 24 மணி நேரமும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . இதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்து 2,000 போலீஸாரும், தமிழக சிறப்பு அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
************************************************************************************

Labels: ,

Saturday, June 16, 2007

கார்பரேட் கட்சிகளும் மக்கள் நலனும்


இன்று இந்தியாவில் உள்ள அனைத்து ஒட்டுக் கட்சிகளும் நிறுவனமயமாக்கப்பட்டு விட்டன. அவற்றில் எது ஆட்சிக்கு வந்தாலும் இன்றைய உலக மக்கள் விரோதிகளான உலக வங்கி, உலக வர்ததக கழகத்தின் கைப்பாவையாக மட்டுமே செயற்படுகின்றன.

இந்தகட்சி கம்பெனிகளுக்குள் எந்த விதமான கொள்கை வேறுபாடும் இல்லை. எல்லோரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை காட்டிககொடுப்பதும், அதன் மூலம் தன்னையும் தன்னை ஆதர்¢க்கும் தரகு முதலாளிகளையும் வளப்படுத்திக்கொள்கின்றன. ஆனால் தாங்கள் ஆட்சியில் இல்லாத போதும், தனது இருப்புக்கு மக்களால் பங்கம் நேர்கின்ற போதும் இவற்றை எதிர்ப்பது போலக் காட்டுகின்றன. இந்த ஏமாற்று வேலையையே தனது் கொள்கைகளாக வைத்து இருக்கின்றன. ஆனால் மிகவும் சிரமப்பட்டு தங்களுக்குள் வேறுபாடு இருப்பது போல நடிக்கின்றன. மாறி மாறி இவர்களேதான் கூட்டணியாக ஆட்சிக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள், ஆனால் நாடு ஜெட் வேகத்தில் விற்கபடுவதில் எந்த தடங்கலும் இல்லை.

இந்த நாட்டு மக்களுக்கு உணவு மானியத்தை, வேளாண் மானியத்தை படிப்படியாக குறைத்து நிறுத்தவும் முயற்சி செய்கிறார்கள். தாய் மண்ணை விட்டுத்தர முடியாது என்று முஸ்லீம்களை கொல்கிறார்கள். ஆனால் விவசாயத்தை விட்டு - நிலத்தை விட்டு மக்களை வெளியேற்றுகிறார்கள். அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பகுதி பகுதியாக தனி சாம்ராஜியம் (sez), வரிச்சலுகை, வசதிகள் என செய்து கொடுக்கிறார்கள்..

இப்படி நாட்டை தொடர்ந்து காட்டி கொடுத்து வருவதை (இதை முன்னேற்றம் என்று வேறு கூறுகிறார்கள்) மக்கள் எதிர்க்கும் முன் இவனே 2 ரூபாய் அரசி, இலவச கலர் டி..வி., ஒரு சிலருக்கு நிலம் என கொடுத்து, தான் அடிக்கும் கொள்ளையை மறைத்துவிடுகிறார்கள். இவர்களுடைய இந்தக் கொள்ளையினால் தான் நமது நாட்டின் நிலமை இப்படி இருக்கிறது என்பதை இதன் மூலம் மறைக்க முயல்கிறார்கள்.

மக்கள் முன்னேற்றதுக்கு மிகவும் முக்கியமான கல்வி, மருத்துவ வசதி, போன்ற அத்தியாவசியத் துறைகளை தனியாரிடம் கொடுத்து அதில் அவர்கள் கோடி கோடியாகச் சம்பாரிக்க வசதி செய்து கொடுத்து, காசிருந்தால்தான் கல்வி மருத்துவம் எல்லாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். மக்களை குடிக்கு அடிமைப்படுத்தி மந்தைகளாக மாற்றி போராடும் குணத்தை மழுங்கடிப்பதற்க்காக அரசே மதுக்கடைகளை (டாஸ்மார்க்) நடத்தும் அவலம் தமிழகத்தில் இருக்கிறது.

இது தமிழ்நாட்டில் மட்டும் நிகழ்ந்ததல்ல, திராவிட கட்சிகள் மட்டும் இதனைச் செய்யவில்லை, இந்தியா முழுவதும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும் , கட்சிப் பாகுபாடின்றி 50 வருடங்களுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்து இதையேதான் செய்கின்றன.
இந்த கார்ப்ரெட் கட்சிகள் சிலவற்றின் செயல்கள், பேச்சுக்கள், யோக்கியதைகளை பார்க்கும்போது இவர்கள் எப்படியெல்லம் மக்களை ஏமாளிகளாக நினைத்துக்கொண்டு வேலைசெய்கிறார்கள் என்பது புர்¢கிறது.....

காங்கிரசின் எடுப்பார் கைப்பிள்ளை மன்மோகன் சிங் நாடு முன்னேறாமைக்குக் கூறும் காரணம்.." விவசாயத் துறை 10 ஆண்டுகளாக படுபாதளத்துக்கு போய்விட்டது. இது நாட்டு வளர்ச்சிக்கு நல்லதல்ல. வறுமை ஒழிய வேண்டுமானால் விவசாயத்துறை வளர்ச்சி அவசியம்" என்கிறார்

இவர் கூறுவதைப் பார்த்தால் ஏதோ விவசாயத்துறை தானாக வண்டி பிடித்து பாதாளத்துக்கு போனது போலவும், இவருக்கு அதுபற்றி எதுவும் தெறியாது என்பதுபோலவும் இருக்கிறது. ஒரு பிரதமர் பேசும் பேச்சா இது. விவசாயிகள் அனைவரும் தற்கொலைக்குத் தள்ளப்படும் இந்த நிலைமைக்கு யார் காரணம், என்ன காரணம், இதனை மாற்ற என்ன செய்யலாம், என்ன செய்யப் போகிறீர்கள், இதுவரை அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, அவை ஏன் தோல்வியுற்றன, சற்று யோசித்துப் பார்த்தால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் பல ஆயிரம் விவசாயிகளைக் கொன்று, நாட்டின் முன்னேற்றத்தை அதல பாதாலத்திற்க்குத் தள்ளியது இதே மன்மோகன் சிங் தான் என்ற இவர்களது நிஜமுகம் நமக்குத் தெறியும்.

காங்கிரஸை விட்டால் அடுத்து RSS, BJP, ராமர் பாலம்(?), பால் குடிக்கும் பிள்ளையார் சதுர்த்தி, என நவீன விஞ்ஞானம்(!) பேசி மதவெறி ஆட்சி செய்ய இவர்கள் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் யோக்கியதை இவர்களது சுதேசி இயக்கத்திலேயே தெறிந்துவிட்டது, "அன்னிய பொருட்களை வாங்காதீர்கள், உள்நாட்டு சுதேசிப் பொருட்களை மட்டுமே வாங்குகள்" (அதுவும் கடைகளில் 'ஓம்' ஸ்டிக்கர் இருக்கிறதா எனப் பார்த்து வாங்குங்கள்...) என தேசப்பற்று மிக்க (!) பிரச்சாரம் செய்துகொண்டே, சத்தமின்றி தேயிலை உட்பட 120 பொருட்களை காட் ஒப்பந்தத்தின் படி வரியே இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதித்து உள்ளூர் விவசாயிகளின் வயிற்றில் அடித்தார்கள். (ஒரு வேளை கிளிண்டன் கடையில் 'ஓம்' ஸ்டிக்கர் ஒட்டிருந்துச்சோ)
அனுகுண்டு வெடிப்பு, கார்கில் யுத்தம் என்று நாட்டுபற்றை(!) எல்லா இந்தியர் உடலிலும் ஸிரஞ்சு போட்டு ஏற்றிவிட்டு அவன் அந்த மயக்கத்தில் இருக்கும் போதே நம்நாட்டு வளங்களை (தண்ணீர்,மனிதவளம் உட்பட அனைத்தையும்) பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள்

அடுத்து கம்யூனிஸ்டுகள் எனச் சொல்லிக் கொள்ளும் CPM கட்சிகாரங்க, இவர்கள் வேலை என்னவென்றால், ஆட்சியிலிருப்பவர்கள் போடுற ஒப்பந்தம் ஏதாவது வெளிச்சத்துக்கு வந்து அரசு அம்மணமா நிற்க்கும் போது, கிருஷ்ண பரமாத்மா கணக்காக களத்தில் இறங்கி அவர்களைக் காப்பாற்றுவது தான். அட அமெரிக்கன எதிர்க்கிறேங்கிறீங்க அப்புறம் அவனுக்கு அடிவருடியான காங்கிரஸ் ஆதரிக்கிறீங்க, கேட்டா பி.ஜே.பிக் கெதிரான சக்தியா காங்கிரஸ் இருக்குங்கிறீங்க. நாட்ட விக்கிறதுல பி.ஜே.பி க்கும் காங்கிரஸிக்கும் வித்தியாசமே இல்லாதப்பே நீங்க பி.ஜே.பியை ஆதரிச்சாலும் ஒன்னுதான் காங்கிரஸ ஆதரிச்சாலும் ஒன்னுதானே. எதுக்குக் குழப்பம் அமெரிக்காவையே ஆதரிச்சுட்டுப் போங்களென். உங்களுக்குத்தான் எவ்வளவு பெரிய மனசு, இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டுக்களைக் கொன்று குவித்த சுகர்த்தோவின் சலீம் கம்பெனியை ஆதரித்து, நந்திகிராமத்தில் நம் நாட்டு மக்களைக் கொன்றவர்கள்தானே நீங்கள்.

சி.பி.எம் தலைவர் பிரகாஷ் கரத் சமீபத்திய பேட்டியில் "சிறு வணிகத்தில் பெரிய நிறுவனங்களை வருவதை நிறுத்த வேண்டும் என நாஙகள் விரும்புகிறோம்" என்றார்.

லட்சக்கணக்கான சிறுவனிக மக்கள் அழிந்து வருகின்றனர், அடுத்தடுத்து இன்னும் பலர் பாதிக்க பட போகிறார்கள். இதற்கு என்ன பதில் என்றால் , பெரிய நிறுவனங்கள் வரக் கூடாது என்பதை விரும்புறோம், இது ஒரு பதிலா? மக்கள் சாகிறார்கள் என்றால், சாககூடாது என்று விரும்புகிறோம் என்கிறார்கள

சரி தேசியக்கட்சிகள்தான் இப்படி நம்ம மாநிலக் கட்சிகளில் யாராவது உண்மையாக இருக்கிறார்களா என்றால்,

முதலில் வருவது தி.மு.க குடும்பம், இதன் தலைவர் மிகப் பெரிய ராஜதந்திரி கருணாநிதி, நாட்டை விற்ப்பதில் இவரை மிஞ்ச ஆளே இல்ல. தினமும் காலை தொண்டர்களைப் பார்க்கிறாரோ இல்லையோ இரண்டு மூனு வெள்ளைக்காரர்களைப் பார்த்தே ஆகவேண்டும். இவருக்கு வெள்ளைக்காரங்க கூட போட்டோவுக்குப் போஸ் கொடுப்பதில் அப்படி ஒரு ஆசை, தினமும் இரண்டு மூனு போட்டோக்களாவது பேப்பரில் வந்துவிடனும்.
ஒரு நாள் இந்த வெள்ளைக்காரனுங்களுக்கே பயமாய் போய் தலைவரே இப்படி தினப்படிக்கு இந்த ஊரு உனக்கு அந்த ஊரு உனக்குன்னு எல்லா ஊரையும் எழுதி எழுதித் தறீங்களே உங்க நாட்டு மக்கள் ஏதாச்சும் குண்டக்க மண்டக்க செஞ்சு எங்கள ஏறக்கட்டிட மாட்டாங்களா என்று கேட்டாங்களாம். அதுக்கு நம்ம தலைவரய்யா " இது ஒரு பெரிய விஷயமே இல்ல, நாடு முன்னேறுது அதான் வெள்ளைக்காரன் வர்றான்னு சொன்னா ஜனங்க நம்பிடப் போறாங்க, அப்படியே எதிர்க்கிற மாதிரி தெரிஞ்சா, கலர் டி.வி, கக்கூஸ்ன்னு ( உங்க உலக வங்கிட்ட கடன வாங்கி) எதையாவது குடுத்து வாய அடைச்சரலாம்" என்று சொன்னாரு.

கட்சிக்கு அழகிரி, ஆட்சிக்கு ஸ்டாலின், மத்தியில் கனிமொழி என்று தனது வாரிசுகளுக்குப் பட்டம் சூட்டக் காத்திருக்கும் தமிழ்நாட்டு மகாராஜா இவர்தான். மக்களை மழுங்கடிப்பதில், முதுகில் குத்துவதில் கருணாநிதிக்கு நிகர் அவரேதான்.

அடுத்தது, என்னதான் கருணாநிதி அளவுக்கு ராஜதந்திரியா இல்லாவிட்டாலும், அமெரிக்க ஜனாதிபதியா வர அளவுக்குத் திறமையிருந்தும் ( அதுக்கு ஒரு வெங்காயமும் தேவையில்லை) தமிழ்நாட்டுக்கு சேவை செய்யவே இருப்பவர் ஜெயலலிதா. இந்தம்மா நாட்டைக் கொள்ளையடிச்ச கதையப் பத்தி பேசவே பத்து நாளாகும். இடைஇடையில் தன்னோட பார்பன புத்தியக்காட்ட " மதம்மாற்றத் தடை" , "கிடாவெட்டத் தடை", என்று தன்னிஷ்டப்படி நாட்டை ஆட்டிவைப்பது இவருடைய தனித்திறமை. எம்.ஜி.ஆரின் கருப்புப் பணத்தில் உருவான அதிமுக என்ற டிரஸ்டின் நிரந்திர காவல் தெய்வம். கருணாநிதியை விட்டால் தமிழ்நாட்டைக் காப்பாத்த (கூட்டிக் கொடுக்க) இவங்க தான் அடுத்த இடத்துல நிக்கிறது.

அடுத்து நம்ம மருத்துவர் ஐயா, இவருக்கு அடிக்கடி ஞாபக மறதி வந்துவிடும். மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பக்கம் பக்கமா அறிக்கை விட்டுடிவாரு. அதுக்கப்பறம் உக்கார்ந்து யோசித்தால் எல்லா பிரிச்சனைக்கும் காரணம் அவர் அங்கம் வகிக்கும் ஆட்சிதான் என்று புரிந்துவிடும். நம்ம மகன் தேர்தல்லே நிக்காமலே மத்தியமைச்சரா இருக்க உதவி செஞ்சவங்களப் பகைக்க முடியுமான்னு அமைதியாயிடுவாரு. அடிக்கடி புகையிலை, மதுவிலக்கு, ரிலையன்ஸ் என்று ஏதாவொரு பிரச்சினை அவரைத் தொடும் போது ஒரு அறிக்கை விட்டுபுட்டு தைலாபுரம் தோட்டத்துல போய் அமைதியா ரெஸ்ட் எடுத்துக்கொள்வார். தி.மு.க, அதிமுக இரண்டு கட்சிக்கும் நல்ல பிள்ளை. யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்தியில் இரண்டு மந்திரி பதவி. கட்சியும் வளருது இவரது சொத்து மதிப்பும் வளருது.

கடைசியாக தமிழகத்தின் அடுத்த முதல்வர், விஜயகாந்த், கறுப்பு எம்.ஜி.ஆர், கேப்டன், புரட்சிக் கலைஞர் என்றெல்லாம் ரசிகத் தொண்டர்களெல்லாம், கொண்டாடும் இவர் கட்சி ஆரம்பித்ததே கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவும், கல்யாண மண்டபத்தைக் காப்பாற்றவும்தான். பிந்தையதத்தான் காப்பாற்ற முடியவில்லை முந்தியதையாவது காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். உங்க கட்சிக் கொள்கை என்ன என்று கேட்டால், அது உங்களுக்கு எதற்க்கு, எனக்கு ஓட்டுபோட்டால் மற்ற எல்லோரையும் விட சிறப்பாக ஆட்சி செய்வேன், வேண்டுமென்றால் என்னை முதலமைச்சராக்குங்கள் அப்புறமாக நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள், என்று திமிராகப் பேசும் பாசிச எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸ் காப்பி தான் இந்த விஜயகாந்த்.

மற்றப்படிக்கு சில அரசியல் அசிங்கங்கள், ஜால்ரா கோஷ்டிகளைப் பற்றி பதிவின் நீளம் கருதி எழுத முடிய வில்லை.என்றாலும் இவர்கள் அடிக்கடி கூட்டணி மாறி திமுகவிக்கும் அதிமுகவுக்கும் 6 வித்தியாசம் கண்டுபிடிப்பது இருக்கே, மகா கேவலம்.

இவர்கள் அனைவருமே, ஒரு கும்பல் நாட்டை விற்பதால் ஏற்படும் விளைவினை வைத்து இன்னொடு கும்பல் ஆட்சியை கைப்பற்றி அதே கொள்கையினை நடைமுறைப்படுத்துவது என்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். மக்கள் தினமும் உலகமயத்தினால், இந்து மத வெறியினால் கொலையுண்டு வருவதை தடுக்க போராடனும் என்றால், இல்லை பார்த்துக் கொண்டு நல்லவனாக இருப்பதே பெரிய காரியம் என்கின்ற நிலையினை திட்டமிட்டு உருவாக்குகின்றனர் .

இவர்களை எதிர்த்து போராடும் போது இவர்களின் நிஜமுகத்தை பார்க்கலாம். இவர்களை எதிர்க்க நாம் பயப்படுவது தான், இவர்களது மூலதனமாக உள்ளது.. அந்த பயத்தினை உதிர்க்கின்ற அந்த கணமே இந்த மக்கள் விரோத அரசு நொறுங்குவதை பார்க்க முடியும். நந்திகிராமத்தில் மக்கள் இதனை உணர்ந்து, இணைந்து போராடியதால் தான் அங்கு நில ஆக்கிரமிப்பு நிறுத்துப்பட்டு உள்ளது.

இன்று இந்த நாடு பார்ப்பனிய பயங்கரவாதத்தாலும், அரசு பயங்கரவாதத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டு உள்ளது. இதனை அரசாங்கங்களை(வாட்ச் மேன்களை) மாற்றுவதால் மாற்ற முடியாது எனபது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாம் நேரில் பார்ப்பதில் இருந்து உணர முடியும்.

மக்களுக்கான ஒர் பொருளாதாரத்தை, கொள்கையினை உருவாக்கிட முதலில் நமக்கான ஒரு அரசை, மக்களே நேரிடையாக பங்கு கொள்ளும் ஒரு அரசை, அனைத்து அதிகாரிகளையும் மக்களே தேர்ந்தெடுத்துத் திருப்பியழைக்கும் உரிமையுடன் கூடிய அரசை ஏற்படுத்த வேண்டும்.

போராடுவதை தவிர வேறு மாற்று இல்லை என்ற நிலையினை, அனைவரும் ஒன்று சேர்ந்தாக வேண்டும் என்ற நிலையினை இந்த அரசே உருவாக்கி வருகிறது, இந்த யதார்த்ததை மக்கள் புரிந்துகொள்ளும் போது அந்த பன்னாட்டு நிறுவனங்களுடன், இந்த கார்பரேட் கட்சிகளும் நாட்டைவிட்டே ஓடவேண்டிவரும்.

Labels: , , ,

Thursday, June 14, 2007

தமிழ் மக்கள் இசை விழா ஒளிக் குறுந்தகடுகள் (DVD)

வெளிவந்து விட்டன !

பதினான்காம் ஆண்டு
தமிழ் மக்கள் இசை விழா ஒளிக் குறுந்தகடுகள் (DVD)

  • கருத்தரங்க உரைகள் - ரூ 50
  • கலை நிகழ்ச்சிகள் -ரூ 5o

  • வெளியிடுவோர்:
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

குறுந்தகடுகளை அஞசலில் பெற அஞ்சல் (கூரியர்) செலவு - ரூ 25
உடன் சேர்த்து அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம்


அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் இதர தொடர்புக்கு:

இரா.சீனிவாசன்,

16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.
044- 2836 0344

மேல் விவரங்களுக்கு

வெளிவந்து விட்டன ! தமிழ் மக்கள் இசை விழா ஒளிக் குறுந்தகடுகள் (DVD)

நன்றி போர்முரசு

தொடர்புடைய சுட்டிகள்:

தமிழ் மக்கள் இசை விழா - விடுதலையின் காலைக் கதிர்

தமிழ் மக்கள் இசை விழா' வின் கேள்வி "நீங்கள் பொறுப்பானவர்களா?

தமிழ் மக்கள் இசை விழா - III

தமிழ் மக்கள் இசை விழா - II

இசைவிழா பிரசுரம்நிகழ்ச்சி நிரல் பிப்' 24 - சனிக்கிழமை, தஞ்சை, திருவள்ளுவர் திடல

ஓய்வு - பொழுதுபோக்கு - இசை ரசனை

Labels: , ,

Tuesday, June 12, 2007

ஓட்டு பொறுக்கி அரசியல்


மீண்டும் திமுகவுக்குப் பாய்ந்த க.சுப்பு

ஜூன் 10, 2007 சென்னை:

சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ க.சுப்பு மீண்டும் திமுகவில் இணைந்து விட்டார்.பல கட்சிகளில் இருந்த நீண்ட, நெடிய அனுபவம் கொண்டவர் பிரபல தொழிற்சங்கவாதியான க.சுப்பு. ஆரம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். அக்கட்சியின் சார்பில் 1971ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். 80களில் சட்டசபையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு எதிராக சட்டசபையில் க.சுப்பு தீவிரமாக செயல்பட்டார். அவருக்குத் துணையாக துரைமுருகனும், ரகுமான்கானும் செயல்பட்டனர்.
பின்னர் திமுகவிலிருந்து விலகினார் சுப்பு. அதிரடியாக அதிமுகவுக்குத் தாவினார். ஆனால் அங்கும் நீண்ட காலம் அவர் நீடிக்கவில்லை. அதிமுகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அதன் பிறகு மீண்டும் திமுகவுக்குத் திரும்பினார். அது சில காலம் மட்டுமே நீடித்தது. திமுகவிலிருந்து விலகி அதிமுகவுக்குத் தாவினார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவும் வகையிலான பொறுப்பை ஜெயலலிதா கொடுத்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழாவையொட்டி அவரைப் பாராட்டிப் பேட்டி கொடுத்திருந்தார் சுப்பு.
இதனால் கடுப்பான ஜெயலலிதா சுப்புவைக் கட்சியிலிருந்து தூக்கி விட்டார். இந்தச் சூழ்நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து மீண்டும் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் சுப்பு.

Labels: , ,

Thursday, June 07, 2007

"ஓய்வு - பொழுதுபோக்கு - இசை ரசனை"

"நமக்குத் தேவைப்படுவதோ புதிய உணர்வு. உழைப்பைத் துன்பமாகவும் ஒய்வை இன்பமாகவும் கருத வைக்கும் இந்த முதலாளித்துவ உடைமை உறவினை ஒழிப்பதன் மூலம் உழைப்பையே இன்பமாக உணரும் புதிய சமுகத்தைஉருவாக்கத் தேவையான - விடுதலை உணர்வு.

இந்தப் புதிய உணர்வினைத் தருகின்ற இசையையும், அந்த உணர்வினைப் பெறுகின்ற ரசயனையையும் எந்த விளம்பரதாரரும் நமக்குத் தயாரித்து வழங்க முடியாது. "
********************************************************************************************
8ம் ஆண்டு தமிழ் மக்கள் இசை விழாவில் தோழர் மருதையன் அவர்கள்
"ஓய்வு - பொழுதுபோக்கு - இசை ரசனை" என்ற தலைப்பில் ஆற்றிய
உரையினை இங்கே கேட்கலாம்.

Labels: , ,

Monday, June 04, 2007

இந்திய விவசாயிகள்- வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள்


"வழக்குப் போட்டு என்னைச் சிறையில் தள்ளும் இவர்களின்(ஜென்மி-ஜமீன்தார்களின்) கொடுமையை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று உணர்ந்தேன். தியாகிகளாக மரணம் தழுவப் பலர் ஆயத்தமாக இருப்பதை அறிந்தேன். நான் அவர்களுடன் இணைந்து இவர்களின் கொடுமைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவேன்" - மீள முடியாத கடனில் மூழ்கிய குத்தகை விவசாயி- மாப்ளா கலகத்தில் பிடிபட்ட அம்பாத் அய்த்ரோஸின் வாக்குமூலம் - 16 மார்ச் 1896.

காலங்காலமாய் தங்களை ஒட்டச்சுரண்டி வந்த நம்பூதிரி நாயர் ஜன்மிகளுக்கெதிராக கிளர்ந்தெழுந்து போரிட்டுத் தொடர்ச்சியாக வீரச்சாவெய்தினார்கள் மாப்ளா விவசாயிகள். நூறாண்டுகளுக்கு முன் எக்காரணிகள் மாப்ளாக்களின் கோபத்தைக் கிளறிப் போரிடத் தூண்டியதோ அதே காரணிகள் முன்னைக்காட்டிலும் இன்று துல்லியமாக மேலெழுந்து வந்து கொண்டுள்ளன. நாடெங்கும் இன்று விவசாயிகள் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையின் நிலைமையில்தான் உள்ளனர்.

உலகமயமாக்கலின் கோரப்பற்களுக்கிடையில் தினந்தினமும் அரைபட்டுக் கொண்டுள்ளது இந்திய விவசாயியின் வாழ்க்கை. ஆந்திர மாநிலம் திம்மராஜப்பேட்டையில் 1990 வரை 12 ஏக்கரில் திராட்சை பயிரிட்டு நல்ல நிலைமையில் இருந்த நல்லப்ப ரெட்டி 10 ஆண்டுகளுக்கு முன் ஆந்திர கிராமின் வங்கியில் விவசாயத்துக்கு கடன்வாங்கியிருந்தார். 1970 வரை சொந்தமாய் லாரி வைத்து தொழில் நடத்தி வந்த இவர், திடீரென்று விவசாயம் செய்து பார்க்க இறங்கிநார். இவரின் நிலைமை உலகமயமாக்கல் ஆரம்பித்த 1990களுக்கு பின் தொடர் துயரமாகி விட்டது. வட்டி மேல் வட்டி சேர்ந்து கடன் சுமை எகிறிய நிலையில் நல்லப்ப ரெட்டி, 34 ஆயிரம் வரை கட்டி கடனை அடைக்க முயற்சி செய்தார். ஆனால் வங்கியோ ஒரு லட்சத்தை இவரிடம் எதிர்பார்த்தது. தொடர்ந்து வறட்சியாலும், விளைபொருளுக்கு விலையின்மையாலும் நஷ்டமடைந்த நல்லப்ப ரெட்டி ஒரு லட்சத்தை செலுத்த இயலாததால் அவரை சிறைக்குள் தள்ளியது வங்கி.

லட்சக்கணக்கான விவசாயிகளின் நிலைமையும் நல்லப்ப ரெட்டியியைப் போலவேதான் உள்ளது. பத்து வருசத்துக்கு முன்பு, இடுபொருட்கள் விலை உயர்வாலும், வங்கிக்கடன் மறுக்கப்பட்டதாலும் அவர் நஷ்டம் அடைந்தார். "தண்ணீர், மின்சாரம் போன்றவை விலை ஏறியதால் நிலைமை ரொம்பச் சிக்கலாகி விட்டது". பிறகு தண்ணீரும் வற்றி விட்டது. "பத்து ஏக்கர் நிலத்தில் நாலைந்து வருடங்களில் 32 முறை போர் போட்டேன். ஒன்றும் பலனில்லை". இதே வட்டத்தில்தான் சந்திரசேகர் ரெட்டி என்பவர் 2004 ஆம் ஆண்டு 4 போர்களை சுடுகாட்டில் இறக்கி 8 கிமீ தூரத்துக்கு குழாய் போட்டு தண்ணீர் கொண்டு வர முயன்றார். அந்தளவுக்கு நிலத்தடிநீர் வறண்ட பகுதி அது. (ஜூலை 18, 2004, சாய்நாத் கட்டுரை) பிறகு அவரும் செத்துப்போய்விட்டார். அவர் போட்ட அந்த சுடுகாட்டுப் போர்களில் இரண்டில் இப்போது தண்ணீர் வருகிறது. போர் பதித்தவரோ சுடுகாட்டுக்குப் போய்விட்டார்.

நல்லப்பரெட்டியைப் போன்றே சிறைக்கு சென்ற, காதிரி வட்டத்தைச் சேர்ந்த கெங்கி ரெட்டி "நான் முழுசாய் ஒரு மாசம் சிறையில் கிடந்தேன். அப்போ சந்திரபாபு நாயுடுவோட ஆட்சி. நானும் அசலுடன் மேற்கொண்டு கொஞ்சம் சேர்த்துக் கட்டி கடனை அடைக்க முயற்சி செய்தேன். என்னுடைய ஆறு ஏக்கர் நிலத்தில் இருந்து கொஞ்சத்தை விற்றுப் பணத்தை எடுத்துக்கொள்ளக்கூட சொன்னேன். (அதே வங்கியின் காதிரி கிளையை சேர்ந்த) வங்கி மேனேஜரோ முரட்டடியா சொல்லிட்டார் - 'ஒன் நிலம் எங்களுக்கு வேண்டாம். உடனடியா பணம். இல்லாட்டா ஜெயில்'னு. சொன்னபடியே ஜெயிலுக்கு அனுப்பினார். பின்னாடி பாசன வசதி கொண்ட என் நிலம் ஒன்றை விற்றுத்தான் கடனை அடைத்தேன்" என்கிறார்.

"சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த காலத்திலும் இது மாதிரி நடந்தது. இப்போது மறுபடியும், முன்னை விடத் தீவிரமாக நிகழ ஆரம்பித்துள்ளது" என்று, ஆந்திர விவசாயிகள் சிறைப்படுத்தப்படுவதைச் சொல்கிறார், ஆந்திர பிரதேச ரயத்து சங்கப் பொதுச் செயலர் மல்லாரெட்டி. "வங்கிகள் விவசாயிகளிடம் மட்டும் விதிமுறைகளைக் கறாராக்கி அவர்களைச் சிறைச்சாலைக்குத் தள்ளுகின்றன. கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். இவர்கள் எல்லோரும், வறட்சியால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகும் பகுதியைச் சேர்ந்தவர்கள். விளைச்சல் ஏதும் இல்லை. கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலைமையிலும் இல்லை. ஆனால் பல கோடி ரூபாய்களைக் கடனாகப் பெற்றுக்கொண்டு, கடனை அடைக்காமல் இருக்கும் பெரும் தொழிலதிபர்களை இவ்வங்கிகள் ஒன்றும் செய்வதில்லை. ஆயிரக்கணக்கில் மட்டும் பாக்கி வைத்திருக்கும் விவசாயிகளோ சிறைக்குள் தள்ளப்படுகின்றனர்" எனப் பொறுமுகிறார் அவர். மொத்தத்தில் ஆயிரம் கோடி ரூபா வரை கடன் பாக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ஒப்பந்தக்காரர்கள் என 200 முக்கியப்பிரமுகர்களின் பெயரை ஆந்திரப் பிரதேச கடன் வசூல் தீர்ப்பாயத்தின் இணைய தளம் அண்மையில் கூட பட்டியலிட்டுள்ளது.இந்தப் பணம் ஏதுமே வசூலிக்கப்படவில்லை.

உலகமயம்,தாராளமயம் எனும் பெயரில் மானிய வெட்டு, ஒப்பந்த விவசாயத்தால் சாவின் விளிம்பு நோக்கி இந்த நாட்டுக்கே சோறு போடும் விவசாயிகள் தள்ளப்படுவதும், மழை பொய்த்தும், நிலத்தடி நீர் வளம் வற்றிப்போயும் திருப்பிக்கட்ட முடியாத விவசாயிகளின் கடன்களை வசூலிக்க வங்கிகள் சிறைக்கொடுமை, ஜப்தி எனக் கடுமையைக் காட்டுவதும் ஆந்திராவில் மட்டுமல்ல நாடெங்கும் தொடர்கிறது.

கர்நாடக மாநிலம் பீடார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், சர்க்கரை ஆலைகள் சொல்லித்தான் கரும்பு பயிரிட்டார்கள். 12 மாதங்கள் கடந்தும் கரும்பு வெட்ட ஆலை உத்தரவிடாமல், பயிர்கள் பூத்தும் விட்டன. நடப்பில் கரும்புப்பயிரை 10ல் இருந்து 12 மாதங்களுக்குள் வெட்டாமல் விட்டு விட்டால் அது முற்றி அதன் இனிப்புத்தன்மையை இழந்து வெறும் விறகாகி விடும். அப்பயிரை உருவாக்க உழைத்த 12 மாத உழைப்பு, உரம், களை எடுப்பு என எண்ணற்ற செலவு இத்தனையும் தாங்குவதற்கு இயலாமல் தன் 7 வயது மகனுடன் மே தினத்தன்று 30 வயது கர்ப்பிணியான மல்லம்மா எனும் விவசாயி செய்து கொண்ட தற்கொலையுடன் சேர்த்து அம்மாவட்டத்தில் இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை 25 பேர்கள் வாழ்க்கையை அழித்துக்கொண்டுள்ளனர். 2007-08 இல் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியோ 2.6 கோடி டன்களைத் தாண்டிவிட்டதாலும் கையிருப்பு மட்டும் 1.146 கோடி டன்களாக இருப்பதாலும் விவசாயிகள் இனி கரும்பு பயிரிட வேண்டாம் என்று இத்தனை தற்கொலைகளுக்குப் பின்னர் அறிவுரை கூறுகின்றனர், வேளாண்மை விஞ்ஞானிகள். பல மாநிலங்களிலும் கரும்பு வெட்ட உத்தரவு வராததால், தற்கொலை செய்த விவசாயிகளைத் தவிரப் பலரும் கரும்புக்கொல்லைகளை தீவைத்து அழித்த பின்னர் அறிவுரை சொல்லத்தான் இந்த அறிவாளிகளால் முடிகிறது.

விவசாயிகளின் துயரம் மிக்க இந்தச்சூழலை மாற்றிடுகிறோம் எனும் பெயரில் மிகப்பெரிய சதித்திட்டத்துடன் ஏகாதிபத்தியமும் காலை உள்ளே வைத்துள்ளது.

நூறு கோடி இந்திய மக்களுக்கும் அத்தியாவசியமான உணவுப்பயிரை உற்பத்தி செய்து வரும் பாரம்பரிய விவசாயிகளிடம் 'உணவுப்பயிர் விளைச்சலைக் கை விட்டு தோட்டப்பயிர், மூலிகைப்பண்ணை, பழத்தோட்டம், பயோ டீசல் உற்பத்திக்கு மாற்றுதல்' எனும் சதித்திட்டத்தைப் பல்வேறு உத்திகளுடன் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதற்காக ஆந்திர அரசு,'சிறு, நடுத்தர விவசாயிகள் பழச்சாகுபடிக்கு மாறினால் அவர்களுக்கு ஐந்து ஏக்கர் வரைக்கும் 100% மானியம் தரப்போவதாகவும், அவர்கள் பழமரக்கன்றுகள், உரம்,சொட்டுநீர்ப்பாசனம் போன்றவற்றிற்கு 70% மானியம் பெறுவார்கள்' என்றும் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 1 லட்சம் விவசாயிகளை உணவுப்பயிரில் இருந்து அகற்றிவிட்டு பழங்களை விளைவிக்க ஆந்திர அரசிடம் திட்டமுள்ளது . 19 ஆண்டுகளாக இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்யத் தடை விதித்திருந்த அமெரிக்கா திடீரெனத் தடையை நீக்கியதிலிருந்து, ஆந்திர அரசின் இந்த அறிவிப்பு முற்றிலும் ஏற்றுமதிக்காகத்தான் என்பது தெரிகின்றது. அத்துடன் ஆந்திர அரசே 100% மானியத்தை பயோ-டீசல் உற்பத்திக்காக வளர்க்கப்படும் காட்டாமணக்குக்கும் அறிவித்துள்ளது. நெல்லுக்குத் தேவையான யூரியா மானியத்தை வெட்டும் அரசு பணப்பயிருக்கும், காட்டாமணக்குக்கும் மானியம் தந்து நாட்டின் உணவு உற்பத்தியை முடக்கி உணவுக்கு ஏகாதிபத்தியத்தை சார்ந்திருக்கும் நிலைக்கு நம்மைத் தள்ளப்போகின்றது.

ஆந்திரத்துடம் மராட்டியம், ஒரிசா,ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களையும் இணைத்து உலகவங்கி ஒரு திட்டத்தைத் தீட்டி அமுல்படுத்துகிறது. விவசாயத்துறையில் பெரும் தொழில் நிறுவனங்களை ஒப்பந்த விவசாயத்தில் ஊக்குவிக்கவும், பெரும் சில்லறை விற்பனை நிறுவனங்களான ரிலயன்சு-·ப்ரெஷ், வால்மார்ட் போன்றவை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து சிறுவணிகர்களை ஒழித்துக்கட்டவும், தோட்டப்பயிர், பழத்தோட்டங்கள் முதலான வேளாண்-வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் உலகவங்கி தீட்டி உள்ள இத்திட்டத்திற்கு 'பல்நிலை வேளாண் போட்டித் திட்டம்' என்று பெயர் வைத்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கங்களுக்கு தக்கபடி மைய அரசும் ஆந்திர அரசும் சந்தைச் சட்டங்களை திருத்தி உள்ளன. பிற மாநிலங்களும் அடுத்து சட்டங்களை இதற்குத் தக்கபடி மாற்றப்போகின்றன.

மே 5 அன்று அமெரிக்க வேளாண்மைத் துறை விஞ்ஞானிகளும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து ஒரு கலந்தாலோசனையை நடத்தியுள்ளன. அதில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒப்பந்த விவசாயத்தை வளரச்செய்து இந்திய விவசாயிகளை, சங்கிலித் தொடர் நிறுவனங்களான வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு கொத்தடிமைகளாக மாற்றவும், அவர்களின் சிறப்பங்காடிகளின் தேவைக்கு ஏற்ப விளைவிக்கவும், பதப்படுத்தப்பட்ட உணவு, பழ வகைகள் உற்பத்தியில் ஈடுபடுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளன. இந்த வேளாண்-வர்த்தகத்தில் பெருமளவு முதலீட்டைச் செய்யத் தேவையான உள் கட்டுமானங்களை ஏற்படுத்திக்கொடுக்க வேளாண்மை அமைச்சர் சரத்பவார் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் உணவுக்களஞ்சியம் என்று போற்றப்படும் பஞ்சாபில் மாற்று விவசாயத்தை வெகு தீவிரமாக நடைமுறைப்படுத்தி கோதுமை பயிரிடப்படும் நிலப்பரப்பை சுருக்கிக்கொண்டு வருகின்றனர். இதனை வளர்ச்சிப்பாதை எனக் கொண்டாடும் இந்தியா டுடே, பாட்டியாலாவில் 150 ஏக்கரில் காளாண் பண்ணை நிறுவி மெக்சிகோ, அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யாவுக்கு காளான்களை ஏற்றுமதி செய்து கோடீஸ்வரனாகிய மல்வீந்தர் சிங், கோலா போன்ற உற்சாக பானங்களுக்கு தேவைப்படும் கா·பின் எனும் நஞ்சை கரும்புச்சாற்றின் கழிவில் (மொலாசஸ்) இருந்து வடித்தெடுத்து ஏற்றுமதி செய்து கோடிகளை ஈட்டிய ஜிஜேந்திர சிங் போன்றோரையும் கொண்டாடி இவர்களை முன்னோடி விவசாயிகளாகக் காட்டுகின்றது. கா·பின் நஞ்சை பேரளவில் உற்பத்தி செய்ய பஞ்சாபில் ஜிஜேந்திர சிங், 40 ஆயிரம் ஏக்கரில் ஒப்பந்த விவசாயம் மூலம் இனிப்புச் சோளம் பயிரிடப்போகின்றானாம். கோதுமையை விட்டு விட்டு நம்மை, மனிந்தர்பால் சிங் போல 150 ஏக்கரில் ரோஜா பயிரிட்டு, அதில் இருந்து அத்தர் உற்பத்தி செய்யச் சொல்கிறது இந்தியா டுடே.

பயோ டீசலுக்கான சாராயத்தை வடித்தெடுக்க, இனிப்புச் சோளத்தை தென் அமெரிக்காவில் சாகுபடி செய்யச் சொல்லி அமெரிக்கா செய்யும் பிரச்சாரம், மூன்றாம் உலக நாடுகளின் உணவு உற்பத்தியை முடக்கி, அமெரிக்க உணவை வலுக்கட்டாயமாக ஏற்றுமதி மூலம் திணிக்கப்போகும் அமெரிக்க சதி என்று மரணத்தை எதிர் நோக்கிய நிலையிலும் தெளிவாக அம்பலப்படுத்துகிறார், கியூபத் தலைவர் காஸ்ட்ரோ. ஆனால் நமக்கு வாய்த்த குடியரசுத் தலைவரோ காட்டாமணக்கை பயிரிடச் சொல்லி இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்கிறார்.

தன்மானத்தளபதியின் பெரியார் புரா, தமிழ் நாட்டின் நெற்களஞ்சியத்தை அழிக்க, அவுரி, மூலிகைச் செடிகள், காட்டாமணக்குக்கு மாறச் சொல்லி பிரச்சாரம் செய்கிறது. சமீபத்தில் புரா, மூங்கிலை வளர்க்கப் பயிற்சியும் தந்துள்ளது.

இந்த ஆண்டு முதல் தமிழ் நாட்டில் உள்ள வேளாண்மைக்கல்லூரிகளில் 'மூலிகைச் சாகுபடி' பயிற்சி வகுப்பை கிராமப்புற இளைஞர்களுக்கும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் நடத்த உள்ளனர்.

இவ்வளவு சதிகளும் போதாதென்று, எம்.எஸ்.சுவாமிநாதனும் 'சிறப்புப் பொருளாதார மண்டலங்களை'ப் போன்று நாடெங்கும் 'சிறப்பு விவசாய மண்டலங்களை' உருவாக்கச் செயல்திட்டம் வகுக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகளை மையமாக வைத்து இந்திய விவசாயத்தை மறுபடியும் சூறையாட வந்துள்ள இரண்டாம் பசுமைப் புரட்சியை சிறப்பாக அமுல்படுத்தவே இம்மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன. கடன் வசதி, காப்பீட்டு வசதி போன்ற கவர்ச்சிகளைக் காட்டி விவசாயிகளை மரபீனி விதைகளுக்குள் தள்ளி, விவசாயத்தை லாபவெறியூட்டும் 'வேளாண்-வர்த்தகமாக்க' சுவாமிநாதன் திட்டம் வகுத்து வருகிறார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் போன்றவற்றை மூன்றாம் உலக நாடுகளில் தள்ளின ஏகாதிபத்தியங்கள். சுற்றுச் சூழலையும் ஆரோக்கியத்தையும் நாசமாக்கும் இவற்றிற்கு எதிராக 'ஒற்றை வைக்கோல் புரட்சி' இயற்கை வேளாண்முறையை வளர்த்தெடுத்தார், ஜப்பானின் மசானபு ·புக்காகோ.இன்று இம்மாற்றுமுறையில் - இயற்கை உரங்களால் விளைந்தவற்றை ஐரோப்பாவும், அமெரிக்காவும் விரும்பிப் பயன்படுத்துவதால், இயற்கை விளைபொருட்களின் சந்தை வளரத்தொடங்கியுள்ளது. அதே ஏகாதிபத்தியம், இந்தியாவின் பெரும் நிலப்பரப்பில் இயற்கை வேளாண்மையை செய்து தனக்குத் தேவையான விளைபொருட்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய விரும்புகிறது. இதற்காகவும் உணவுப்பயிர் விளைவிக்கும் பரப்பு பறிபோகின்றது. இந்தச் சதிக்குத் துணையாக 'பாரம்பரிய வேளாண்மை முறைகள்' பற்றிச்சொற்பொழிவு நிகழ்த்துகிறது, அமெரிக்க போர்டு பவுண்டேசனின் நிதியில் உயிர் வாழும் 'தேசிய நாட்டுப்புறவியல் உதவி மய்யம்'.

ஆக, விவசாயிகளிடம் இருந்து உணவுப்பயிர் உற்பத்தி முடக்கப்படுகிறது. அற்ப சொற்ப கடன்களுக்காக எல்லாம் விவசாயிகள் சிறை, சித்திரவதைக்குள் தள்ளப்படுகின்றனர். விளைச்சல் நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பறிக்கத் தொடங்கியுள்ளன. ஆந்திராவில் பருத்தி விவசாயிகளும், கர்நாடகாவில் பாக்கு,கரும்பு விவசாயிகளும் தற்கொலை நோக்கித் தள்ளப்படுகின்றனர். விவசாயிகளுக்கு எதிரிகளாக அரசும், பன்னாட்டு நிறுவனங்களும், வங்கிகளும் அணிவகுத்து தொடர்ச்சியாய் தாக்குதலை நடத்திவருகின்றன. புதுப்புது உத்திகளுடன் விவசாயி நசுக்கப்படுகின்றான். அன்று மலபாரில் இருந்த மாப்ளாக்களின் அதே கொதி நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். மாப்ளா, புன்னபுரா, வயலார், தெலங்கானா என அனைத்துப் பகுதிகளிலும் நிலவுடைமையையும், ஏகாதிபத்தியத்தையும் முறியடிக்க வலிமையான தாக்குதலைக் கொடுத்தனர் விவசாயிகள். தற்கொலைப்பாதையை விட்டு விட்டு, விவசாயிகளுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து சதித்திட்டங்களையும் முறியடிக்க விவசாயிகள் புரட்சிகர இயக்கங்களுடன் கை கோர்த்துப் போராட முன்வரவேண்டும்.


Related Articles:

இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்

பத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோஅடிமை நாடும், போலி சுதந்திரமும்


இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்


அவனுடைய உமியும் - நம்முடைய நெல்லும்!


Labels: , ,