Tuesday, July 31, 2007

கல்வி கொடுக்க வக்கில்ல என்னடா கவுர்ன்மென்ட்டு !!

ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவிருக்கிறது. 2007-08 ஆம் வருடத்திற்கான கல்வியாண்டு தொடங்கிவிட்டது. பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டது. பொறியியல் படிப்புக்கான அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் "இன்றைய கல்வி" பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று முயற்சிக்கிறேன்.

கல்வி என்பது மனிதனைப் பண்படுத்துவது என்பார்கள். ஒன்றுமே தெரியாத வெற்றுக் களிமண்ணாய் பிறக்கும் மனிதனுக்கு இந்த உலகத்தையே அறிமுகப்படுத்தி அதன் தோற்றம் முதல் இன்றைக்கு வரை நிகழந்த மாற்றங்களை, அறிவியல் கண்டுபிடிப்புகளை கலை இலக்கியங்களைப் போதித்து அவனை புடம் போட்டு வார்த்து எடுப்பதோடு, இந்த சமூகத்தில் அவன் யார்? அவனது பங்கு என்ன? என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டிய முக்கிய கடமை கல்விக்கிருக்கிறது.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் நாம் கல்வியை அப்படிப் பார்ப்பதில்லை. வேலைக்கு போய்ச் சம்பாதிக்க ஒரு தகுதியாக மட்டுமே கல்வி உள்ளது. எந்தத் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று கணக்கு பார்ப்பது போல , எந்தப் படிப்பில் முதலீடுபோட்டால் பையன் அதிகமாகச் சம்பாதிப்பான் என்று கணக்குப் போடுகிறார்கள் . அவர்களைச் சொல்லி குற்றமில்லை.
இன்றைக்கு எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் இந்த படிப்புப்படித்தால் இவ்வளவு சம்பளத்தில் வேலை, இந்தக் கல்லூரியில் படித்தால் படிப்பை முடிக்கும் முன்பே வேலை என்று பக்கத்திற்குப் பக்கம் எழுதித் தள்ளுகிறார்கள். டி.வி-யில் எல்லா சேனல்களிலும் கல்லூரிகளைப் படம்பிடித்து சுண்டி இழுக்கும் விளம்பரங்களை ஒளிபரப்புகிறார்கள். இதையெல்லாம் பார்த்து நமது பெற்றோரும் இந்தக் கல்லூரிகளின் வலையில் தங்களது பணத்துடன் போய் விழுகிறார்கள்.

இன்றைக்கு இருக்கும் நடுத்தர இளைஞர்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது ஒரு இஞ்சினியராக வேண்டும் என்றுதான் கனவு காண்கிறார்கள். "கனவு காணுங்கள்" என்று உற்சாகமூட்டும் முதன் குடிமகன் இருந்தபோது படித்தவர்களாயிற்றே, அவர்கள் வேறு என்ன செய்வார்கள். ஆனால் அவர்கள் கனவை நினைவாக்க அவர்களது பெற்றோர் மென்மேலும் கடன் பட வேண்டியிருப்பதை அவர்கள் உணரவில்லை. பள்ளிப்படிப்பிற்கே தங்களது சேமிப்பு முழுவதையும் கறைத்துவிட்டு , கடனாளியாக நிற்கும் நடுத்தர வர்க்கத்து பெற்றோர் கல்லூரிப் படிப்பிற்காக மகனையும் கடனாளியாக்க வேண்டியுள்ளது. நடுத்தர வர்க்கத்திற்காவது வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஆனால் ஏழை எளிய மக்களுக்கு அதுவும் கிடையாது.

பொறியியல் படிப்பு படிக்கக் குறைந்தது 2 லட்சம் முதல் 8 லட்சம் வரை செலவாகிறது. 10 லட்சம் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஒரு டாக்டராகலாம். இப்படி லட்சங்களில்தான் இன்றைக்கு உயர்கல்வி உள்ளது. எந்தக் கல்லூரியை எடுத்துக் கொண்டாலும் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட இருமடங்கு வசூலிக்கின்றனர்.இவர்களை யாரும் தட்டிக் கேட்பதோ தண்டிப்பதோ கிடையாது.

தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 4.5 லட்சம் பேர் பள்ளிப் படிப்பை முடித்து வருகின்றார்கள். இவர்களுக்கென தரமான கல்வியை வழங்க இருக்கும் அரசு கல்லூரிகள் மொத்தம் 67 (மருத்துவம், பொறியியல், கலை கல்லூரிகள் எல்லாம்) இவற்றில் வெறும் 25 ஆயிரம் பேர் மட்டுமே படிக்க இயலும். மீதமுள்ள 4.25 லட்சம் பேருக்கு கல்வி வழங்கும் பொறுப்பை அரசு தட்டிக்கழித்துவிட்டது. அதை தங்களது தலைமேல் சுமக்கப் பல கல்வித்தந்தைகள் காத்திருகின்றனர்.
தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் இந்தக் கல்வித்தந்தைகள் முளைத்து கொண்டே இருக்கின்றனர். இவர்களைச் சற்று அருகில் சென்று பார்த்தோமானால் எல்லோரும் சட்டவிரோத , தேசவிரோத கூட்டம் எனபது நன்றாகத் தெரியும்.

ஜேப்பியார், உடையார் போன்ற சாராய முதலைகள்; தம்பித்துரை, ஏ.சி.சண்முகம் போன்ற அரசியல் பெருச்சாளிகள்; விஜயகாந்த், ரஜினி போன்ற கழிசடை கதாநாயகர்கள்; மலையாளத்து அம்மா முதல் மேல் மருவத்து அம்மா வரையிலான ஆன்மிக கொள்ளையர்கள்; இன்னும் சிலைதிருடர்கள், கள்ளநோட்டு களவாணிகள், விபச்சார புரோக்கர்கள், கடத்தல் மன்னர்கள்; முன்னாள்-இந்நாள் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் என ஒரு பெரிய தேசதுரோகக் கூட்டமே கல்வித்தந்தைப் பட்டத்தைச் சூட்டிக்கொண்டு திரிகிறது. இவர்கள் அனைவரும் கருப்புப்பணத்தைப் புரட்டுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர்.
இவர்களை நம்பித்தான் நமது கல்வியை ஒப்படைத்துள்ளது இந்த அரசு. லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டு; வசூலிக்க வேண்டிய வரிப்பணத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு வரிச்சலுகையாக அளித்துவிட்டு; செலவுக்கு பணமில்லையென்று சாராயம் காய்ச்சி விற்கும் கேடுகெட்ட இந்த அரசு, தன்னோடு சாராயம் காய்ச்சும் கூட்டாளியிடம் மக்களின் கல்வியை ஒப்படைத்திருப்பதில் அதிசியமில்லைதான். ஆனாலும் இவர்கள் ஏதோ கல்வியைத் தூக்கி நிறுத்திவிட்டதைப் போல காட்டிக்கொள்வதைதான் சகிக்கவில்லை.

இந்தக் கல்விக் கொள்ளையர்கள் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட அதிகமாக வசூலிக்கும் போது, விதிமுறைகளை மீறி கல்லுரிகளை நடத்தும் போதும் , பாதிக்கப்படும் மாணவர்கள் தட்டிக்கேட்டால் அவர்களை ரவுடிகளைக் கொண்டு தாக்கும்போதும், இந்த அரசாங்கம் கண்டுகொள்வதே கிடையாது. ஏனென்றால் இன்றைக்கு ஆளும் வர்க்கமாய் உள்ள ஒவ்வொருவனுக்கும் ஒரு கல்லூரி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள எல்லாத் தனியார் கல்லூரிகளும் ஏதாவதொரு வடிவத்தில் இந்த ஆளும் வர்க்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த கொள்ளையத் தடுப்பதற்கு பதில் அதனை வளரச் செய்கின்றனர்.

1950 ல் இந்தியா குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டபோது 10 வருடங்களில் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி கொடுபோம் என்று அறிவித்தார்கள். இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு கிட்டே ஆகியும் இன்னமும் உலகின் எழுத்தறிவில்லாதவர்களில் 50 % பேர் இந்தியர்கள் என்று கூறுவது வெட்கக் கேடானது. இன்றைக்கு இந்தியாவில் 6-14 வயதுக்குக் கீழே உள்ள 20 கோடிக் குழந்தைகளில் கிட்டத்தட்ட 3 கோடிப்பேர் பள்ளிக்கு சென்றதில்லை. 6 1/2 கோடிப்பேர் 5-ம் வகுப்புடனும். 5 கோடிப்பேர் 7-ம் வகுப்புடனும் பள்ளியை விட்டு நின்றுவிடுகின்றனர்.

காங்கிரஸ், திமுக, அதிமுக, பா.ஜ.க, கம்யூனிஸ்டு ,பாமக, மதிமுக, தேமுதிக என மாற்றி மாற்றி யாருக்கு ஓட்டுப்போட்டாலும் இந்த நிலைமை மாறவில்லை, மாறாது. நம்மை விடச் சிறிய நாடான கியுபாவில் 10 ஆண்டுகளில் கல்லாமையை முற்றிலுமாக ஒழித்துவிட்டார்கள். நம்மால் முடியாதது அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது. அதற்குத் தேவை நாட்டுப்பற்றும்; மக்களின் மேல் உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு அரசு.

துப்பாக்கியை எடுத்துச் சென்று பாகிஸ்தானியரைச் சுடுவதை மட்டுமே நாட்டுப்பற்றாக போதிக்கும் இந்த அரசிடம் மக்களின் நலனை எதிர்பார்ப்பது முட்டாள்தனம், சொந்த லாபத்திற்காக நாட்டையே கூட்டிக் கொடுக்கும் அரசியல் வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்ப்பது மடத்தனம்.
அரசின் இந்தக் கல்விக் கொள்ளையை மட்டுமல்ல, இன்றைக்கு சமுதாயத்தில் இவர்கள் உருவாக்கிவரும் எல்லா பிரச்சினைக்கும் மூலகாரணமான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதாரக் கொள்கையினை எதிர்த்துப் போராடுவது மட்டுமே புத்திசாலித்தனம்.

Labels: , ,

Monday, July 30, 2007

ஏகாதிபத்திய அடிமைகளே ! பொய்யுரை பதிவர்களே !!

நாட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள் என எல்லோரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், வாழவழியற்று தற்கொலை பண்ணிக்கிறாங்க என்ற இன்றைய நிலையினை அறிய பெரிய விஷய ஞானமோ, அறிவோ தேவையா என்றால் இல்லை,தினசரி நாளிதழ்களை பார்த்தா கூட தெரிஞ்சுக்க முடியும்.
..
செய்தி என்கிற அடிப்படையில் எல்லாவற்றையும் எழுதுகிறார்கள். ஆனால் இதுக்கு என்ன காரணம் என்று ஒருத்தரும் எழுதுறது இல்லை. போலி எதிர்ப்பாளர்களான NGOக்கள் முதல் லேட்டஸ்ட் ஒட்டுக்கட்சிகள் வரை ஒருத்தரும் சொல்றதுல்ல.
..
இதில் பத்திரிக்கை, இணைய தளம், ப்ளாக்குகள் உள்பட்ட தளங்களை பற்றி தான் இந்த பதிவு.
..
பொதுவாக இவர்கள்
  • விவசாயிகள் தற்கொலையில இருந்து இன்றைக்கு 2ரூ அரிசி வாங்க கூட வழியற்று மக்கள் அவதிப்படுவது வரை எதுக்குமே யாருடைய பொருளாதார கொள்கை, அதனை இந்த ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திப்பது எது என எந்த அடிப்படை காரணத்தையும் எழுதுவது இல்லை.

இதுல பத்திரிக்கையினை முழுக்க லாபம் ஈட்டும் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.நாம என்ன தெரிஞ்சுக்கனும், படிக்கனும் என அனைத்தையும் இன்றைக்கு ஏகாதிபத்தியங்கள் மற்றும் அவர்களோட கைக்கூலிகள் தான் முடிவு செய்கிறார்கள்.

சரி அப்படி கூட செய்தியாக எல்லாவற்றையும் கொடுக்கிறார்களா என்றால் இல்லை. அதுலயும் அவர்களுக்கு பிரச்சினை என சிலவற்றை மறைத்து விடுகிறார்கள்......

இந்த அடிப்படையில் செய்திகளை கொடுத்துவிட்டு....கூடவே " நாடு வளர்ச்சி பாதையில் ஜெட் வேகத்துல போகுது" என்ற குடியரசு (மொம்மை) தலைவர் முதல் ஆட்சியாளர்கள் என அனைவரின் பேச்சுக்களையும் எழுதிகின்றனர்.

  • ஒருபுறம் 1 லட்சத்துகும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கிறாங்க, இன்னொருபுறம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கிறது

  • பெப்சிக்கும் கொக்க கோலாவுக்கு பைசா கணக்கில் தன்ணீரை கொடுத்த மன்மோகன் சிங இன்னொருபுறம் நம்ம விவசயிகளுக்கு தண்ணீரோட அருமை தெரியலை, பணம் கொடுத்து வாங்கினால்தான் தெரியும் என பேசிகிறார்.

  • டாஸ்மாக் கடையில் ஆண்டுக்கு 7000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் சுனாமிக்கு 3 ஆண்டுகளுகு பின்னும் உலகவங்கியிடம் 1000 கோடி கடனாக கேட்கிறது தமிழக அரசாங்கம்.

  • ஒருபுறம் பெப்சி குடிக்காதே, புகை குடிக்காதே, மது அருந்தாதே,டாடாவுக்கு எதிர்ப்பு , வாரிசு அரசியல் கூடாது என தனித்தனி அறிக்கை....மறுபுறம் அனைத்தையும் தடை செய்யும் அதிகாரம் உள்ள் மக்களையே சந்திக்காத மத்திய அமைச்சர் பதவியில் மகன், மத்திய, மாநில அரசுக்கு முழு ஆதரவு இதுதான் ராமதாஸ்

இப்படி முரண்பாடுகளை தனித்தனியாக இருப்பதை ஒன்றுபடுத்தி பார்க்கும் போதுதான் தெரியும், இன்று மக்கள் மீது இந்த அரசாங்கம் மறைமுகமாக ஒரு போரையே தொடுத்து வருகிறது என்று.

இதற்கிடையில் இந்த முரண்பாடுகளை எல்லாம் பொருத்தி

  • இன்றைக்கு நாட்டை படுவேகமாக அந்நியனுக்கு விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் இந்த மக்கள் நல (?) ஆட்சியாளர்கள் என்பதையும்
  • விவசாயிடம் இருந்து விவசாயம் பறிக்கப்பட்ட காலம் மாறி விவசாயத்திடம் இருந்தே விளைநிலம் பறிக்க பட்டு தொழிற்புரட்சி, வேலை வாய்ப்பு என்ற பேரில் அந்நியனுக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பது உள்பட

மக்களோட சகல கஷ்டங்கள் அனைத்துக்கும் என்ன காரண்ம், யார் காரணம் என்பதை தெரியப்படுத்த கூடிய பத்திரிக்கைகளும் இணையதளங்களும் உள்ளன. ப்ளாக்கர் உள்பட அனைத்து தளங்களிலும் போர்க்குரலாக ஒலிக்கிறது இது.

ஆனால் அடிமைத்தனத்திலேயே ஊறி திளைக்கின்ற சில அடிமைகள் ஆட்சியாளர்களோட முகமுடியாக செயல்பட முயற்சிக்கின்றன.

"நாட்டோட வளர்ச்சியை தடுக்குறாங்க, மேற்கு வங்காளத்தில் - பிற்போக்கு சக்திகள் ஒரு தொழிற்சாலை கூட வரவிடாமல் தடுத்து ரத்த ஆற்றை ஓட விட்டார்கள்; சும்மா 100 பேரை துண்டிவிட்டு; 100 பேருக்காக 10 ஆயிரம் பேருடைய வாய்ப்பு வசதிகளை குலைக்கின்றனர்" என்று இன்று ( 29 .7.07) டாடாவுக்கு 10 ஆயிரம் ஏக்கர் கொடுக்கிறதுக்கு எப்பவும் போல இது வளர்ச்சிக்குதான் என்ற அடிமுட்டாள்தனமான ஆட்சியாளர்களுடைய வாதத்தையே வைத்து கலைஞர் பேசியுள்ளார்.

நந்திகராம், சிங்கூர் போன்ற மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் போலி கம்யூனிஸ்ட்களின் குரலை இந்த முற்போக்கு பெரியார் சீடர் வெளிப்படுத்தி உள்ளார்.

இன்றைக்கு தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கல் என்ற கொள்ளையினை ஏற்றுக்கொள்வதா , வேண்டாமா என்பதல்ல இந்த மன்மோன் சிங்,அத்வானி,போலி கம்யூனிஸ்டுகள், கருணாநிதி,ஜெயலலிதா, ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்களுடைய பிரச்சனை. இதை எப்படி நடைமுறைபடுத்துவது எனபது தான் இவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு.

இந்த சூழ்நிலையில் இவர்களோட முகமூடியாக சிலர் செயல்பட முயற்சிக்கின்றனர் .

உதாரணமாக தமிழகத்தில் இன்று டாடாவுக்கு 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தருவதற்கு அரசாங்கத்துக்கு ஒத்து ஊதக் கிளம்புகின்றனர்..

இதனை படிக்கும் அத்தகைய நபர்கள் மக்களநலனுக்கு எதிராக அவதூறாக எழுதுவதை கைவிட்டு - எழுதுவது; ஆரோக்கியமான ப்ளாகின் வளர்ச்சிக்கு உகந்ததாகும்.

நமக்கு தேவை சமச்சீரான வளர்ச்சி என்கிறதை புரிஞ்சிக்க முயற்சிப் பண்ணுங்க...

இல்லைன்னா
..
"வளர்ச்சி....முன்னேறுது.....அரசியல் படுத்துறாங்க.....என்று தனித்தனியாக எழுதி மக்களை முட்டாளாக்காம உங்களுடைய வாதத்தை உடைத்து எழுதும் பதிவுகளுக்கு மறுத்து விளக்கமாக உங்க பதிவை போட (?) முயற்சி பண்ணுங்க.... "
..
அதுவிட்டுட்டு சும்மா மக்கள் நலனோட விளையாடாதீங்க.
********************************************
********************************************
Related:
*********

Labels: ,

Sunday, July 29, 2007

"வியாபாரமயமாகிய கல்வி" - கார்ட்டூன்

Friday, July 27, 2007

உலக வங்கியிடம் ஏன் கை ஏந்துகிறாய்?

1) உலக வங்கியிடம் சுனாமி நிவாரணத்துக்கு ரூ 1000 கோடி கடனாக தர வேண்டும் என கெஞ்சி கேட்டிருக்கிறார் தமிழக முதல்வர்.


2) தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் மூலம் கடந்த ஆண்டு வருமானம் ரூ 7000 கோடி.


டாஸ்மாக் கடை மூலம் இவ்வளவு வருமானம் வரும்போது உலகவங்கியிடம் கடன் கேட்பது எதற்காக?

அவ்வாறு பணம் வாங்கினால் வட்டி கட்டப்போவது யார்?

இந்த கடனுக்காக உலகவங்கி போட்ட உத்தரவுகள் என்னென்ன?

Labels: ,

Thursday, July 26, 2007

"சுயநல அறிவுஜீவிகள்"

"ஏ சுயநல அறிவுஜீவிகளே !
நீங்கள் தப்பமாட்டீர்கள் !
..
உங்களுடைய கவிதைகளிலும் கதைகளிலும்
இடம் பிடிக்க முடியாதவர்கள்
ஆனால்
உங்களுக்கு உண்டி சமைக்கும்
உங்களுடைய ஆடையை விடுக்கும்
உங்களுடைய காரை ஓட்டும்
உங்களுடைய பூந்தொட்டியைப் பராமரிக்கும்
உங்களுடைய நாயைக் குளிப்பாட்டும்
அவர்கள் வந்தவுடனே
விசாரனை துவங்கும்.

ஏழை பாழைகளான எங்கள் வாழ்வும் கனவும்
எரிநெரிப்பில் கருகிக் கொண்டிருந்தபோது
ஏ, சுகபோகிகளே, செளந்தர்ய உபாசகர்களே
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"

- ஆட்டோ ரெள காஸ்புலோ, சிலி

Labels:

Saturday, July 21, 2007

"விஷச்சக்கரம்"

'எனக்கு எப்போது அப்பா சட்டை தைத்துத் தருவீர்கள்'
'கையில் காசு வரட்டும் மகனே'
'எப்போது அப்பா கையில் காசு வரும்?'
'ஆலை திறக்கட்டும் மகனே'
'ஆலை ஏன் அப்பா மூடிக்கிடக்கிறது?'
'ஆலையில் ஏராளமான துணி உற்பத்தியாகி முடங்கிக் கிடக்கிறது, யாரும் வாங்குவாரில்லை மகனே, எல்லாம் விற்றுப் போனதும் மீண்டும் துவங்குவார்கள்'
'நாம் கொஞ்சம் வாங்கினால் என்னப்பா?'
'அதான் கையிலே காசில்லை என்று சொன்னேனே மகனே'
-'சமுதாயமய'மான உற்பத்தியில் சுவிகரிப்பில் மட்டும் 'தனியுடைமை' நீடிப்பதால் ஏற்படும் 'விஷச்சுழல்' இது.

Labels: , ,

Monday, July 16, 2007

காசு இருந்தா சொகுசு பஸ்.... காசு இல்லைன்னா போலீஸ் அடி !

இன்றைக்கு நாட்டை விற்கிறதை தீவிரமாக செய்துக்கிட்டு இருக்கிறார்கள். அதையே வளர்ச்சி , தவிர்க்க முடியாது (போலிகள் சாரி துரோகிகள்) என்கிற பேரில் நாடு முழுக்க முழுவேகத்தோடு இப்ப இந்த ஓட்டுக்கட்சிக்காரங்க அன்றாடம் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

அதுல ஒன்னுதான் பேருந்து விசயத்துல இன்றைய அரசாங்கம் செய்து உள்ளது. முன்பு வெள்ளை கலர், மஞ்சள் கலர் என்றும் பச்சை கலர் போர்டு என்றும் பேருந்து வீட்டார்கள். பின்பு M சர்வீஸ் என்றும் பேருந்து விட்டார்கள்.

இப்ப கலைஞர் அரசாங்கம் ,ஏற்கனவே இருந்த மூனு கலர் பேருந்துல பாதி வண்டி ஒட்ட ஒடசலா இயக்காம நின்னுக்கிறுந்தப்ப புதிசா வண்டிகளை வாங்கி ஆரங்சு கலர் போர்டு, நீலக்கலரு போர்டு, ஏர்பஸ் என விட்டு இருக்கிறார்கள்.

இப்படி குறைந்த கட்டணமே ஐந்து ரூபாய் என பேருந்து விட்டுட்டு, யாராவது இதை எதிர்த்து போராட்டம் , ஆர்ப்பாட்டம் என இறங்குனா அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்து பயமுறுத்துகிறார்கள்.

இப்படி உள்ளுர் மாநகராட்சி பேருந்து வண்டில மட்டும் இல்லாமல், வெளியூர் பேருந்துலேயும் டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் என்கிற வண்டிதான் இப்ப எல்லா வழித்தடங்கலிலும் அதிகமாக போகிறது.

சரி நல்லது தானுங்க நாடு முன்னேறுது, தனியாருக்கு நிகராக அரசு சொகுசு பேருந்து விடுவது, காசு இருக்கிரவங்க எங்க கஸ்டப்படனும் என்று சிலர் யோசிக்கலாம்.

ஆனா நாட்ல ஆக பெரும்பான்மையான மக்களை வாழவழியற்றவர்களாக ஆக்கிட்டு, ஒரு சிறு கூட்டம் வசதி வாய்ப்பாக இருக்கிறதை காண்பித்து இதை செய்கிறார்கள். 2 ஆயிரம், 3 ஆயிரம் சம்பளத்துல சென்னையில வாழ்க்கையை நடத்துகின்ற தொழிலாளிகள்,படிச்சுட்டு வேலைக் கிடைக்காம வேலை தேடுறதே வேலையாக வைத்து உள்ள இளைஞர்கள் என பெரும்பான்மை மக்களை ஆக்கிட்டு இதை பண்ணுகிறார்கள்.

காசு இல்லாதவனுக்கு இங்கு எதுவும் சொந்தம் இல்லை. வாழ உரிமையும் இல்லை என்கிற உலகமயமாக்கலோட ஒரு பகுதிதான் இந்த வர்க்கத்துக்கு ஏற்ற மாதிரி பேருந்து விட்டது.இன்றைக்கு வெளை கலர் போர்டுல மக்கள் அதிகம் பயணம் செய்றதை பார்க்கிறோம். ஏன்னா அவர்ங்களால பத்து ரூபாய் கட்டணம் கொடுக்க முடியாததுதான்.

இப்படி பெரும்பான்மை மக்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் உழன்று கொண்டு இருக்குமாறு வாழ்க்கையை ஆக்கிட்டு, இங்க ஒரு சிறு கூட்டமான ஐ.டி, மற்ற மோசடி,பிழைப்புவாத கும்பல் சொகுசாக வாழ்க்கை வாழ இன்று ஏர் பஸ் விட்டு இருக்கிறார்கள்.

வெள்ளை கலர் போர்டு பேருந்துல மக்களை அனுப்பிட்டு, பின்னாடியே போலீசுக்காரங்களை அனுப்பி அடிக்கிறார்கள்.
..
ஆனால் அதிகமான மக்கள் வெள்ளை கலர்போர்டு பேருந்துல போறதுக்கும், படிக்கட்டில் பயணம் செய்யிறதுக்கும் யார் காரணம் ? மக்களா என்றால் இல்லை, இவர்களை இந்த நிலைக்கு தள்ளிய அரசு தான் காரணமாக இருக்கிறது.

இந்த உண்மைகளை எந்த பத்திரிக்கையும் எழுதுறது இல்ல. இவங்களோட செய்தி என்னான்னா "படிக்கட்டுல பயணம் செய்கின்றவர்களை போலீஸ்காரங்க அடிக்கிறாங்க" என்பது தான்.

ஆனால் உண்மையை பரிசீலித்தால்தான் தெரிஞ்சுக்க முடியும், இந்த " மக்கள் விரோத அரசின் யோக்கியதையும்", "நாலாவது தூணோட யோக்கியதையும்".

Labels: , , ,

Monday, July 02, 2007

தமிழ் மக்கள் இசை விழாவின் கலை நிகழ்ச்சியிலிருந்து I